தென்னிந்திய இந்தி பிரச்சார சபைக்கு 2005-ம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட கேள்விகளை அனுப்பியிருந்தேன்:

  1. தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபாவிற்கென மத்திய அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்கிறதா?
  2. 2017-ம் ஆண்டில் இந்தி பிரச்சார சபாவிற்கென மத்திய அரசு ஒதுக்கீடு எவ்வளவு?
  3. தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபாவிற்கென மாநில அரசு நிதி ஏதும் ஒதுக்கீடு செய்கிறதா?

இதற்குப் பதில் அனுப்பியுள்ள பிரச்சார சபாவின் பொதுச் செயலர், “தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் வரவில்லையென்பதை அறியவும். தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 -எச்ஐப் பார்க்கவும். ஆயினும் தாங்கள் கோரிய விவரங்கள் தங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்”. என்று சொல்லிவிட்டு, கேட்ட கேள்வி அனைத்திற்கும் இல்லையென பதில் அளித்துவிட்டனர். அதாவது மத்திய அரசிடமிருந்து நிதி எதையும் பெறவில்லையாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 H எதுவெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொது அமைப்பு என்பதை வரையறுக்கிறது. அந்த வரையறைக்குள் தாங்கள் வரவில்லையென்கிறது பிரச்சார சபா.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2 H இதுதான்:

பிரிவு 2 (h) “public authority” means any authority or body or institution of self-government established or constituted,—
(a) by or under the Constitution;
(b) by any other law made by Parliament;
(c) by any other law made by State Legislature;
(d) by notification issued or order made by the appropriate Government, and includes any—
(i) body owned, controlled or substantially financed;
(ii) non‑Government Organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government.

2009-ம் ஆண்டிலும் இதுபோல தகவல் கேட்ட ஒருவருக்கு இதேபோல கேலியாக “தாங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான வில்லை தங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. பெற்றுக்கொள்ளவும்” என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

தில்லியைச் சேர்ந்த ரமேஷ் திவாரி என்ற அந்த மனிதர் என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. நேரடியாக மத்தியத் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் போய்விட்டார்.

முதலில் அந்த அப்பீலை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், பிரச்சார சபா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் சொல்லவேண்டியதில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், ரமேஷ் திவாரி விடவில்லை. மத்திய அரசின் நிதி அந்த அமைப்புக்குச் செல்கிறது என்று கூறி மீண்டும் அப்பீல் செய்தார். அதனை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், 2005லிருந்து 2008 வரையிலான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளைக் கேட்டு வாங்கியது.

அதன்படி பார்த்தால் 2005-2006 -ல் 76 லட்சத்து 17ஆயிரமும் 2006-2007-ல் 96 லட்சத்து 9 ஆயிரமும் 2007-2008-ல் 95 லட்சத்து 32 ஆயிரமும் மத்திய அரசிடமிருந்து மானியமாகப் பெற்றுள்ளது.

இதையடுத்து, பிரச்சார சபை சுட்டிக்காட்டிய அதே சட்டப்பிரிவு 2 H-ன் விதி எண் d 1-ன் படி, மத்திய அரசின் குறிப்பிடத்தக்க நிதியைப் (மொத்த வருவாயில் பத்து சதவீதத்திற்கு மேல்) பெறுவதால், மனுதாரர் கேட்ட தகவல்களை அளிக்க வேண்டுமென மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 2009-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் பொதுத் தகவல் அதிகாரி ஒருவரையும் முதல் நிலை மேல் முறையீட்டு அதிகாரி ஒருவரையும் நியமிக்க உத்தரவிட்டது.

இப்போது தகவல் கேட்டால், மீண்டும் அதே பழைய பல்லவியைப் பாடுகிறார்கள். என்ன செய்வது?

படிக்க:
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram

(தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபை தவிர, Department of Languages, சென்ட்ரல் இந்தி டைரக்ட்ரேட், சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தி, கமிஷன் ஃபார் சயின்டிஃபிக் அண்ட் டெக்னிகல் டெர்மினாலஜி ஆகியவை மூலமும் கோடிக் கணக்கான பணம் இந்தி வளர்ச்சிக்குக் கொட்டிக்கொடுக்கப்படுகிறது. எந்தச் செலவுக்கும் கணக்குக் கேட்க முடியாது போலிருக்கிறது.)

மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையை பெற இங்கே சொடுக்கவும்: central information commission_order

முகநூலில் Muralidharan Kasi Viswanathan