சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவர் விடுதலை பற்றி கேட்கையில், “எந்த ஏழு பேர் ?” என திருப்பிக் கேட்டார் ‘சூப்பர் ஸ்டார்’. பத்திரிக்கையாளர்கள் விளக்கிச் சொல்லியும், தனக்கு தெரியாது என அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆனால் அவர் கேள்வியை உள்வாங்கி பதில் சொல்லவில்லை, என தானாக வந்து அவருக்கு வக்காளத்து வாங்குகிறார் தமிழிசை. எல்லாம் அடுத்த தேர்தல் கணக்கிற்காகத்தான். மக்கள் மீதான பற்றும் சமூகத்தைப் பற்றிய அறிவுமில்லாத ரஜினி இப்படிச் சொன்னதில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த ஆச்சரியமில்லைக்குரிய மனிதர்தான் இங்கே அடுத்த முதல்வர் போஸ்ட்டிற்கு கியூ வரிசையில் ஊடகங்களின் உதவியோடு போட்டி போடுகிறார்.

ரஜினியின் மேற்கண்ட உளறல் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியது. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்திருக்கிறோம். தான் அம்பலமான பிறகு போயஸ் தோட்டத்திற்கு ஊடகங்களை வரவைத்த ரஜினி தன்னுடைய உளறலின் வரலாற்றுப் பின்னணியை விளக்குகிறார். அதாவது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் என்று கேட்காமல் பொதுவில் எழுவர் விடுதலை என்று கேட்டதால் தான் யார் அந்த எழுவர் என்று கேட்டாராம் ரஜினி.

ஆனால் ஊடகங்கள் தெளிவாக கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை என்பதே உண்மை. இன்றைக்கு அவர் ”பேரறிவாளனோடு தொலைபேசியில் பத்து நிமிடம் பேசியவன் இந்த ரஜினி” என்றெல்லாம் அனுதாப அலை தேட முயற்சிக்கிறார். இதற்கு முன்னர் அவர் இதை ஏன் சொல்லவில்லை? எல்லாம் பயம்தானே? பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பது குறித்த கேள்விக்கு, பத்து  பேர் சேர்ந்து ஒருவனை எதிர்த்தால் யார் பலசாலி அந்த ஒருவனா, பத்து பேரா என்று பாஜகவை பச்சையாக ஆதரிக்கிறார் ரஜினி. இத்தகைய சந்தர்ப்பவாதியும் கோமாளியும் ஒரு கட்சி, ஒரு தலைவர் என்று செய்திகளில் இடம் பெறுவதே தமிழகத்தின் மாபெரும் அவமானம்!

*****

பா. ஜீவ சுந்தரி 

ஏழு பேர் பெயர் சொல்லத் தெரியாதவரா அவர்?

அவ்வளவும் பின்னிருந்து ஆட்டுவிக்கும் அரசியல்…
அடுத்த படம் ஓடணும்னா வந்து சலாம் போட்டுத்தான் ஆகணும் கண்டக்டரே…

————-

Yuva Krishna

சென்ட்ரல் பக்கத்துலே பைக்குலே ஒருத்தன் யுவகிருஷ்ணா மாதிரியே போயிருக்கான். ஆட்டோவில் போன தெரிஞ்ச மேடம் ஒருத்தங்க அவனைப் பார்த்து சிரிக்க, அவன் உம்முன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிருக்கான். அந்த நேரத்துலே ஒரிஜினல் யுவகிருஷ்ணா பெருங்குடியில் இருந்தான். மேடம் போனை போட்டு, ‘என்னய்யா கோவம், முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போறே’ன்னு விசாரிக்க ஏகப்பட்ட குழப்பம். இதுமாதிரி ஏற்கனவே ரெண்டு, மூணு இன்சிடென்ட். ஆகையால் மக்களே! எனக்கு எவனோ டபுள் ஆக்டிங் இருக்கான். ‘ராஜாதிராஜா’ படத்து ரஜினி மாதிரி பிரச்சினை வந்தா நீங்கள்லாம்தான் சாட்சி சொல்லி தூக்குத்தண்டனையில் இருந்துக் காப்பாத்தணும்.

————-

Bala G

எந்த ஏழுபேர் என்று கேட்கும் ரஜினி அவர்களே..

தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.

————-

Abdul Hameed Sheik Mohamed

நடிகர்கள் நாடாள வந்தால்
………………………………………
கடந்த 100 வருடங்களாக தமிழகத்தில் டீகடையிலும் சலூனிலும் பேசிப்பேசி வளர்ந்தது தமிழக அரசியல். ஹிந்து பேப்பரிலிருந்து தந்தி பேப்பர் வரை எல்லா மட்ட தமிழர்களும் நாட்டு நடப்போடு பிணைக்கப்பட்டிருந்த மாநிலம் இது. ஐந்தாம் வகுப்புப் படித்த ஒரு ஆட்டோகாரரிடம் பேச்சுக்கொடுத்தால் நாட்டு நடப்புகளை அலசித் தீர்த்துவிடுவார்.

ஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.

ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.

ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.

இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்

இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.

————-

Parimala Rajan

“யார் அந்த 7 பேர்?” என்று கேட்ட கோமாளி கிறுக்கன் ரஜினிகாந்தை தொலைத்துக்கட்ட வேண்டியது உணர்வுள்ள தமிழர்களின் கடமை

அவன் நடித்து வெளியாகும் பிரம்மாண்ட குப்பை எந்திரன் 2.0 எனும் திரைப்படத்தை குப்பைத்தொட்டிக்கு அனுப்புவோம். திரையரங்குகளில் அந்தப் படத்தை பார்க்காமல் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் பாஜகவின் மறைமுக கைக்கூலி கிறுக்கனை
ஒழித்துக்கட்டுவோம்.

————-

Manikandan Rajendiran

ரஜினியின் சமிப கால பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி பதற்றதினால் அறியாமையால் அப்படி பேட்டி கொடுப்பதாக என்னால் எடுத்து கொள்ள இயலவில்லை… ரஜினி தனக்கு தெரிந்தே திட்டமிட்டு அப்படியான பேட்டிகளை கொடுப்பதாக நினைக்கிறேன்…

ரஜினியின் சமிபத்திய ஜீ தமிழ் டிவி பேட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் ரஜினி எவ்வளவு கூர்மையாக தன்னுடைய நினைவுகளை வெளிபடுத்தகூடியவர் என்று 40 வருடங்களுக்கு பிறகு பைரவி படத்தை நினைவு கூறுகிறார்.. கமலை பார்த்து வியந்த நொடிகளை நினைவுபடுத்துகிறார்.. அபுர்வராகங்கள் படத்தில் வரும் கேட்டை பற்றி துல்லியமாக பேசுகிறார்… ஆனால் இந்தியாவையே உலுக்கிய ராஜீவ் கொலை சம்மந்தமான குற்றவாளிகள் 7 பேரை பற்றி கேட்டால் யார் அவர்கள் என்கிறார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளிப்பாக இருக்கும்போது படுகொலை செய்யபட்டவர்களுக்கு எதிராக கருத்தை முன்வைக்கிறார்…

அதாவது பெரும்பான்மை மக்களின் உணர்வுளுக்கு முற்றிலும் எதிரான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.. ரஜினி ஏன் இப்படியான கருத்தை முன்வைக்க வேண்டும் ? அதனால் அவருக்கு என்ன பயன்?

  • ஜெ என்ற நடிகை அரசியல்வாதியாகி நாட்டை கெடுத்ததுபோதும் நாமும் அந்த வரிசையில் சேர வேண்டாமென நினைக்கலாம்..
  • ரஜினிக்கு உண்மையாகவே அரசியலுக்கு வர விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.. இப்படி மக்களுக்கு எதிரான கருத்தை முன்வைப்பதால் மக்களால் வெறுக்கபடும்/வெறுக்கபட்ட ஒருவராக தன்னை கட்டமைத்து தன்னை அரசியலுக்கு தள்ள நினைப்பவர்களுக்கு(பாஜக) நான் இதற்கு சரிபட்டு வரமாட்டேன் என்பதை மறைமுகமாக உணரத்தலாம்…

ஆனால் அழுத்தம் கொடுப்பவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள் அல்லவா… அவர்களை சமாளிப்பதற்காக இதோ கட்சியை கட்டமைக்கிறேன் உறுப்பினர்கள் சேர்க்கிறேன் கொடியை அறிமுகபடுத்தபோகிறேன் என்று சப்ப காரணத்தை தமிழருவி மணியன், அர்ஜுன் சம்பத், சத்தியநாராயண போன்றவர்கள் மூலமாக சொல்லி கொண்டே இருக்கிறார்/இருப்பார்..

இவைகளுக்கு எல்லாம் எப்போது தெளிவான விளக்கம் கிடைக்கும்? வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இப்படியான உள்ளே-வெளியே விளையாட்டுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்கமாட்டார்.. எனவே ஆதரவும் யாருக்கும் இல்லை..

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அப்போது வேறுவழி இல்லாமல் ரஜினி அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும்.. ஆனால் அதற்குள்ளாக அவரின் மொத்த இமெஜூம் சிதைந்து மக்களுக்கு எதிரான ஒருவராக இருப்பார்.. so பாஜகவே ரஜினியோடு சேர்வது தன் 3% ஓட்டுக்கு பங்கம்வந்துவிடும் என்று ரஜினியை புறம் தள்ளிவிடும்..

ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் தனக்கு அரசியலில் ஆர்வமில்லை தாம் அமைதியை விரும்புகிறேன் ஆன்மிகத்தை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இமயமலையில் உள்ள தன்னுடைய ஆசரமத்திற்கு சென்று நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுவார்..

ஆனால் எம்ஜிஆரை மிரட்டி அதிமுகவை காங்கிரஸ் தொடங்கவைத்தது போல ரஜினியையும் மிரட்டி கட்சி தொடங்க காங்கிரஸ் கட்டாயபடுத்தினால் இன்று ஏழு பேரை யார் என்று கேட்டதுபோல நாளை ஏழு கோடி தமிழர்களையும் நீங்கள் யாரென்று கேட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவார்…

————-

Saravanakarthikeyan Chinnadurai

கமல் கிட்ட கேட்ருந்தா மக்களைப் பார்த்து கை காட்டி இருப்பார்:

“அவுங்க தீர்மானிப்பாங்க அந்த ஏழு பேரை என்ன பண்றதுன்னு. ஏன்னா ஏழு பேரா எட்டுப் பேரான்னு தீர்மானம் பண்ணினது அவுங்க தான். இதுக்கும் பதில் சொல்ற கெட்டிக்காரங்க அவுங்க.” இங்க ஒரு pause. மக்கள் கைதட்டல். லவ் லெட்டர் கொடுத்த அந்நியன் அம்பி மாதிரி முகத்தை வெச்சிட்டு அப்புறம் தொடர்வார்: “நான் அவுங்க சொல்றதச் செய்யற பிரதிநிதி தான். சிவாஜி, பாலச்சந்தர்னு எனக்குக் கிடைச்ச குருநாதர்கள் இதைத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.”

————-

Mukunthan Ramasamy

என்னது ராஜிவ் காந்தி செத்துட்டாரா??? 😢

எவன்ட போயி எத கேக்குறதுன்னு தெரியாத வெக்கங்கெட்டவனுங்க..😡😡

————-

Joe Milton

அந்த ஏழு பேர் ?

ரஜினி : எந்த ஏழு பேர் ?

கமல் : ஏழு ஸ்வரங்கள் , ஏழு அதிசயங்கள் , வாரத்தின் ஏழு நாட்கள் என ஏழு என்பதில் எல்லாமே அடக்கம் . அந்த ஏழு பேரில் நானும் உண்டு , நீங்களும் உண்டு . உங்களிலிருந்து தான் அந்த ஏழு பேர் உருவாகிறார்கள் என்பதை உணரும் போது ..

அடங்கப்பா !

————-

Thiru Yo

ரஜினிகாந்த் யார்? கட்சியெல்லாம் துவங்க போவதா இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்போ தான் கேக்குறேன் உடனே என்னுடைய நிலைப்பாடு என்னன்னு கேட்டா. #ரஜினிக்கு_தெரியாது
#நான்தான்ரஜினிகாந்த்

————-

Bala Vellore

ஜாதிப் பின்புலத்தால் கிடைக்கப் பெறும் அதிகார அனுகூலங்களோடு பிறந்தவள் அல்ல எனது தங்கை…பொருளாதார பின்புலத்தால் வாய்க்கப் பெற்ற வசதிகளோடு பிறந்தவளும் அல்ல….ஆனால் அவள் தமிழினத்தின் தியாகியாய் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறாள்…அது 300 கோடியில் எடுக்கப்படும் மிக பிரம்மாண்ட படத்தால் உருவாகும் வரலாறு அல்ல..

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”

அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…

அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..

இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்

அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை..உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது…நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..

வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..

————-

ம.கு வைகறை

“எந்த ஏழு பேர்?” என்று கேட்ட மாத்திரத்திலேயே மைக்க வைச்சு மண்டையில நங்குன்னு…
#Rajini_voice

————-

Pavithra Baskaran

இப்போவெல்லாம் தமிழ் சினிமால வடிவேலு இல்லாத குறையை
ரஜனி, ராதாரவி, டுமிழிசை, எச்ச ராஜா தீர்கிறது எவ்வளவு ஆறுதலா இருக்கு

————-

————-

Thiru Yo

பெரிய அறிவாளின்னு நினைக்குமாம்… கீறல் விழுந்த ஒலித்தட்டு…

————-

ஆனந்த்குமார் சித்தன்

7 பேர் யாருங்க..

தெரியாது.. இனிமேல் தான் பாக்கணும்..

சாவர்க்கர் யாருங்க..

அந்த மாதிரி மகான்கள் வழியில் ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆசை..

————-

Arul Ezhilan

அந்த எழுவர்!

அவர்கள் யார் என்று உலகிற்கு தெரியும். ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பிடப்பட்ட 26 பேர் தொடர்பாகவும் இறுதியில் தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்ட எழுவர் தொடர்பாக உலகம் அறிந்திருக்கிறது. அதை ஆதரித்தும், எதிர்த்தும் ஆயிரக்கணக்கான தலையங்கங்களை ஊடகங்கள் எழுதியுள்ளது. உலகின் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார்கள். கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் பங்குபற்றிய நீதிபதிகளும், விசாரணை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களுமாக கால் நூற்றாண்டுகாலம் இந்த விவாதம் இங்கு நடந்து. இவர்கள் அப்பாவிகள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்த பின்னர் அமைதி நிலவுகிறது.

தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.

அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.

அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான் காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.

உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!

#எங்கள்_அற்புதம்மாள்
————-

Saravanakarthikeyan Chinnadurai

தொகுப்பு :

1 மறுமொழி

  1. இந்த லூசுகிட்ட நாம இன்னும் நிறைய எதிர்பார்க்கணும் போல. பத்துபேர் சேந்து எதிக்குறதால மோடி பயில்வான்னா, மோடிக்கு பயந்து போய் கால்ல வுழுற ரஜினி கோழையா, வீரனா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க