பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக, தனது ஆட்சிக்காலத்தில் நாடு முன்னெப்போதும் சந்தித்திராத பின்னடைவை அடைந்திருக்கிறது. இதே முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டுக்கேட்கச் சென்றால், நிச்சயம் கடுமையான அடி கிடைக்கும் என தெரிந்துகொண்ட பாஜக, வழக்கமான இந்துத்துவ அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கியிருக்கின்றன ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்புகள்.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் 26-வது ஆண்டு வரவிருக்கிற நிலையில், வி.எச்.பி. ‘தர்ம சபா’ என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகளை அழைத்து மாநாடு ஒன்றை உ.பி. மாநிலம் அயோத்தியில் நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய பல்வேறு காவி மடங்களைச் சேர்ந்த சாமியார்கள், ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என முழங்கினர்.

அயோத்தியில் சாமியார்களைக் கொண்டு நடத்தப்பட்ட தர்மசபா கூட்டம்

சாமியார் நிர்மோகி அகாரா, “ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என்பதை 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் கும்பமேளாவில் அறிவிப்போம்” என்றார்.

பத்ராசாரியார் என்ற சாமியார், மோடி அரசில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் ஐந்து மாநில தேர்தல் முடிந்தபின் அதாவது டிசம்பர் 11-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பாதையை சீர்செய்ய சில முடிவுகளை மத்திய அரசு எடுக்க உள்ளதாகக் கூறியதாக பேசினார்.  “யாராலும் தடுக்க முடியாதபடி அந்த முடிவு இருக்கும்” என மோடியின் அமைச்சர் சொன்னதாகவும் அவர் பேசினார்.

படிக்க:
♦ எதுக்குடா இங்க ரத யாத்திரை ? ம.க.இ.க பாடல்
♦ அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?

விச்.எச்.பி.யின் துணைத் தலைவர் சம்பட் ராய், “2010-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபடி பிரச்சினைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்துக்கொள்ளும் முடிவை நாங்கள் ஏற்கமாட்டோம். எங்களுக்கு முழு நிலவும் தேவை. என்றைக்கு அந்த நிலத்தை கைப்பற்றப் போகிறோமோ அன்றைக்கு இந்த நாட்டில் அமைதியும் நிலவும். முன்னேற்றமும் நடக்கும்” என்றார். முசுலீம் வாரியம் தானாக முன்வந்து இந்துக்களின் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் பேசினார். இந்தப் பேச்சின் மூலம் தங்களால்தான் இந்த நாட்டில் அமைதி கெடுகிறது என்பதை இந்துத்துவக் கும்பலே ஒப்புக்கொள்கிறது.

இருபதுக்கும் அதிகமான சாமியார்கள் பேசிய இந்த மாநாட்டில் உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளதை கடுமையாகச் சாடினர். உச்சநீதிமன்றம் முடிவெடுக்காவிட்டால், தாங்கள் முடிவெடுப்போம் எனவும் சவால் விட்டனர்.

இந்த மாநாட்டுக்கு இரண்டு லட்சம் பேர் வந்திருந்ததாக வி.எச்.பி. சொன்னது. உ.பி. போலீசு வெளியிட்ட பறக்கும் கேமராக்கள் எடுத்த படங்களில் பேரணி நடந்த இடங்கள் காலியாக இருந்ததாக, ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்கிற இந்துத்துவ கும்பலின் புளுகுமூட்டை உடனடியாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாக்பூரில் வெறியேற்றிய மோகன் பாகவத்

மாநாட்டில் கலந்துகொள்ளாமல், மாநாடு நடந்த அதே நேரத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு முதன்முறையாக சென்று ராமரை வழிபட்டிருக்கிறார். அதன்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், “ராமர் கோவில் கட்டவில்லை என்றால் இந்த அரசு நீடிக்காது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் என்ன விலை கொடுத்தாவது அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும்” என்றார்.

அதே நேரம், ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் வி.எச்.பி நடத்திய நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத் “உச்சநீதிமன்றத்துக்கு ராமர் கோயில் முக்கியமாகவே படவில்லை. இந்துக்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு, இதுவரை அமைதி காத்தார்கள். ஆனால், சமூகம் சட்டத்துக்கு கட்டுப்பட்டு மட்டுமே நடக்க முடியுமா? உண்மையை, மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட முடியுமா?” எனப் பேசினார். அதாவது சட்டத்துக்கெல்லாம் கட்டுப்பட்டவர்களல்ல நாங்கள் என்பதை பகிரங்கமாக எச்சரிக்கிறார்.

மேலும், “ஒரு வருடத்துக்கு முன் அமைதியாக இருங்கள் என்றேன், இன்றைக்கும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்கிறேன், நாம் முழு இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.” என்றார் மோகன் பாகவத்.

அயோத்தி, நாக்பூர் மேடைகளில் இந்துத்துவ ஆசான்கள் முழங்கிய அதே நாளில், ராஜஸ்தானில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார மேடையில் மோடி அதே கருத்தை முழங்கினார். “அயோத்தி பிரச்சினை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் குறித்து அனைத்து கட்சிகளின் கருத்தைக் கேட்க உச்சநீதிமன்றம்  தயாராக இருந்தது. ஆனால், உரிமை மீறல் பிரச்சினை வந்துவிடும் எனக்கூறிய காங்கிரஸ் வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஒருவரின் தலையீட்டின் காரணமாக அவை நிறுத்தப்பட்டன” என்று பேசினார்.

ராமர் கோயில் பிரச்சினை அயோத்தியில் ஆரம்பித்து, நாக்பூரில் வடிவம் பெற்று, இறுதியில் மோடி முடித்து வைக்கிறார்.  அனைத்து நாளிதழ்களிலும் இதுவே தலைப்பு செய்தியாகிறது.  2019-ல் மக்களிடம் எதை வைத்து ஒட்டுக்கேட்பது என திணறிக்கொண்டிருக்கும் பாஜகவுக்கு இப்போது கிடைத்திருப்பது ராமர் கோவில் விவகாரம்தான்.

மோடி ஆட்சியில் தினம் தினம் வாழ்க்கை நடத்துவதற்கே தள்ளாடிக்கொண்டிருக்கும் மக்கள் ராமர் கோவில் மகுடிக்கு மயங்குவார்களா ? அல்லது மோடியை தூக்கி எறிவார்களா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க