பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா . . . கொட்டப் பாக்குக்கு விலை சொல்லும் அகர்வால் ஆய்வுக்குழு !

நாள் : 1.12.2018

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக ஆய்வுக்குழுவின் அறிக்கையானது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், ஆலையினை மூடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக் கேட்கவில்லை; இது இயற்கை நீதிக்கு எதிரானது; ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி சில நிபந்தனைகளுடன் ஆலையை இயங்க அனுமதிக்கலாம்” எனப் பரிந்துரைத்துள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வுக்குழு அமைப்பது தொடர்பாக வழங்கப்பட்ட உத்திரவில் “ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உண்மையானதா அல்லது மக்களின் கற்பனையா” என ஆய்வு செய்திடுமாறு கூறியுள்ளது. அதன்படி ஆய்வுக்குழுவானது

* தூத்துக்குடிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட, போராடும் மக்கள் பிரிவினரை சந்தித்திருக்க வேண்டும்.
* ஒவ்வோர் ஊரிலும் தேர்தலில் வாக்களிப்பது போல் மக்களிடம் மருத்துவ முகாம்களை நடத்தியிருக்க வேண்டும்.
* ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளும், சுற்று வட்டாரங்களிலும் நிலத்தடி நீர், மண் ஆகியவற்றைப் பரிசோதித்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யுமாறு மக்கள் அதிகாரம் சார்பிலும், பிற பொது நல ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வுக் குழு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்பதற்குப் பதிலாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையைக் கேட்பது போல, ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அரசுத் தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நாட்கணக்கில் ஆய்வுக்குழு கேட்டது. இச்சூழலிலும் தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கரை லட்சம் மக்கள் தனித்தனியாக ஸ்டெர்லைட் வேண்டாம் எனக் கையெழுத்திட்ட மனுக்கள் ஆய்வுக்குழுவிடம் அளிக்கப்பட்டன.

ஆய்வுக்குழு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர் ஆய்வுகள், காற்று மாசு ஆய்வுகள் என வலுவான ஆதாரங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

ஆர்சனிக், காரீயம் உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட அபாயகரமான கழிவுகளைக் கையாளுவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை ஐந்து ஆண்டுகளாகப் பெறாமல் சட்ட விரோதமாக ஆலை இயங்கியதும், பல லட்சம் டன் தாமிரக் கழிவுகளை உப்பாறு ஆற்றுப் படுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேட்பாறின்றிக் கொட்டி வைத்திருந்ததும் என ஸ்டெர்லைட் ஆலையின் சட்ட விதிமுறை மீறல்கள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் பல, சுற்றுச் சூழல் சட்டங்களின்படி கிரிமினல் குற்றங்களாகும்.

இவை போன்ற காரணங்களுக்காகத்தான் உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதத் தொகையினை ஸ்டெர்லைட் ஆலைக்கு விதித்தது. தவறு செய்பவனை ஒருமுறை மன்னிக்கலாம். மக்களின் உயிர்களைப்பற்றி கவலைப்படாமல், சுற்றுசூழலை தொடர்ந்து நாசமாக்கும் சீரியல் கில்லர் ஸ்டெர்லைட்டை மன்னிக்கலாமா? இந்நிலையில் நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என வேதாந்தாவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக வழங்கிய ஆய்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது.

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை ’நிரந்தரமாக மூடும் அரசாணையை’ப் பிறப்பித்தபோதே மக்கள் அதிகாரம் உள்ளிட்ட போராடும் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் இந்த அரசாணை பலவீனமானது, நீதிமன்றத்தில் நிற்காது என ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழக அமைச்சர்களோ உலக நீதிமன்றம் வரை செல்வோம் என சவடால் அடித்தனர். இப்போதோ வாய் மூடி கள்ள மவுனம் சாதிக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதால் தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்பினால் வேறு வழியின்றி எடப்பாடி அரசு ஆலையை மூடியது.

படிக்க:
♦ தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
♦ ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

டெல்லிக்கு எப்போதும் தமிழ்நாடு என்றால் ஓரவஞ்சனையாக செயல்படுவது வாடிக்கை. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்வழக்கின் தொடக்கம் முதலே ஸ்டெர்லைட் ஆலைக்கு சார்பான வகையிலேயே நடக்கின்றது. கமிஷன் போட்டு குற்றத்தை மறைப்பது போல் ஆய்வுக்குழு போட்டு ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பில்லை எனத் தீர்ப்பளிக்கப் பார்க்கிறது. வழக்கின் தரப்பினர்களாக உள்ள பொது நல ஆர்வலர்களுக்குக் கூட ஆய்வுக்குழு அறிக்கையைத் தர மறுக்கின்றது. இது ஏதோ ஸ்டெர்லைட் ஆலை – தமிழக அரசுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் பிரச்சினை போல அரசுத் தரப்பினை மட்டும்தான் விசாரணையில் கேட்போம் என்கின்றது.

எனவே தமிழக அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் – உச்ச நீதி மன்றம் என செக்குமாடு போல் சுற்றுவதில் என்ன பயன்? கடைசியில் உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்லி விட்டது; நாங்கள் என்ன செய்வது எனக் கைவிரித்திடும் நாடகத்தை தமிழக அரசு நடத்திடவா?

ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என தினம் தோறும் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் கொடுத்து வருகிறது. மேலும் பணத்தை வாரி இறைத்து உள்ளுர் விவசாய சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், காண்டராக்டர்கள், ஆகியோரை வைத்து ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க  மாவட்ட நிர்வாத்திடம் மனு கொடுக்க வைத்து மக்களிடம் எதிர்ப்பு இல்லை என காட்ட முயல்கிறது. அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது. போலீசு மூலம் அச்சுறுத்தி கிராம மக்களை தூண்டிவிட்டார்கள், மூளைச்சலவை செய்தார்கள் என புகார் மனு அளிப்பது, இவ்வாறு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பெரும் சதி அரங்கேறி வந்தது அனைவரும் அறிந்ததே.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால்  ஏன் கொள்கை முடிவு எடுக்க மறுக்கிறது. ஆலை வேண்டாம் என  மக்கள் பேசுவதற்கும், போராடுவதற்கும், ஏன் போலீசு அனுமதி மறுக்கிறது? 

தருண் அகர்வால் குழுவில் சொல்லப்பட்ட முழுமையான தகவல்களை தமிழக மக்களுக்கு குறிப்பாக தூத்துக்குடி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, தாமிர உருக்காலையால் ஏற்படும் சிக்கல்கள், ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக மண்ணில் தாமிர உருக்காலைக்கு அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து அதை சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஊர்கள் தோறும் பணத்தை இறைத்து தனக்கு ஆதரவு உள்ளதாக கைக்கூலிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது எனப் பேசுவதற்கும் போராடுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தாவின் அகர்வால், மோடி அரசின் கூட்டாளி. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம். ஸ்டெர்லைட் ஆலை அவர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்து.  ஸ்டெர்லைட்டைத் திறப்பதற்கு என்ன விலையும் கொடுப்பார்கள். எடப்பாடி அரசாங்கம் போன்ற அடிமை அரசாங்கம் தானாக அசைந்து கொடுக்காது. நாம்தான் அதனை அசைக்க வேண்டும். தூத்துக்குடி மக்களோடு தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து வேதாந்தாவை விரட்ட வேண்டும்.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக மண்ணில் மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது.  கூடவே கூடாது. எத்தகைய தியாகத்திற்கும் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கும் தயாராவோம்!

ஸ்டெர்லைட்டை திறக்கச்சொல்கிறது ஆய்வுக்குழு !
14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா?
ஆய்வுக்குழு, பசுமைத் தீர்ப்பாயம் கிடக்கட்டும் . . .

தமிழக அரசே,
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு!

தோழமையுடன்
வழக்கறிஞர் . சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

இப்பத்திரிகை செய்தியை பி.டி.எஃ.ப் கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.