தென் கொரியாவின் பழமையான குவாங்ஜங் சந்தையின் ஆளுமை மிக்க பெண்கள் !

ந்தடிமிக்க தெருக்களில் வாசனையை, ஒலியை நுகர்ந்தபடி விலை குறைவான பாரம்பரியமிக்க கொரிய உணவைத் தேடி நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

குளிர்ந்த இலையுதிர் கால ஞாயிற்றுக்கிழமை, சூரியன் மறையத் தொடங்கும் வேளையில் தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ள மிகப் பழமையான குவாங்ஜங் சந்தை பரபரப்பாகிறது.

நூற்றாண்டு பழமையான இந்தச் சந்தை ஜோஸான் அரச வம்ச காலத்தில் உருவானது. 1910-1945 வரை கொரியாவை ஆக்கிரமித்திருந்த, ஜப்பானிய காலனி ஆட்சியில் தப்பிப் பிழைத்தது இந்தச் சந்தை. 1950-53 களில் நடந்த கொரிய போரின்போது சந்தையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டது.

ஆனால்,  இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இந்த பரபரப்பான சந்தையில் பாரம்பரிய உடைகளையும் சாயம் ஏற்றப்பட்ட துணிகளையும் வாங்கலாம். அப்போது பிடித்த மீன்கள், உள்ளூர் இறைச்சி வகைகள், அரிசி கேக் (இட்லி போன்ற ஒருவகையான உணவு), பலவகையான கிம்சி (காய்கறி ஊறுகாய்) கடைகளைத் தெரு முழுக்க பார்க்க முடியும். இப்போது பலரை அதிகமாக ஈர்ப்பது உணவு கடைகள்தாம்.

துணிகள் விற்கும் அமைதியான பகுதியை கடந்து சென்றால், பரபரப்பான ஆவி பறக்கும், நெரிசல் மிக்க பாரம்பரிய தெரு உணவு கடைகள் வருகின்றன.  பிண்டேடோக் (பச்சை பயறு கார தோசை), மயாக் கிம்பாப் (சாதத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு கார பதார்த்தம்), கிளாஸ் நூடுல்ஸ், பன்றியின் கால்பாதம், குடல் பகுதிகளுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சண்டே, மீன் சூப், சஷிமி, காரசாரமான வேகவைத்த அரிசி பலகாரங்கள் போன்றவற்றை இங்கே கிடைக்கும் பாரம்பரிய உணவுகளில் சில…

பரப்பான இந்தச் சூழலில் உணவுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் அஜுமாக்கள் (கொரியாவில் வயதான பெண்களை அஜுமா என்று அழைப்பர்). அவர்கள் வல்லமைமிக்க சக்தியாக, அரிசி வைன் மற்றும் பீருடன் வருகிற வாடிக்கையாளர்களின் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிற கடின உழைப்பாளிகளான இவர்கள், பழைய உள்ளூர்வாசிகள், இளைய மாணவர்கள், வெளிநாட்டவர்களுக்கு பற்கள் தெரிய புன்னகைத்து உணவு பரிமாறுகிறார்கள்.

திருமதி யூன், கடந்த இரண்டு வருடங்களாக இந்தச் சந்தையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இவர் பணியாற்றும் கடை இருபதாண்டுகளாக உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இவருடைய வேலை, நள்ளிரவு வரை நீடிக்கிறது.

கோழி கால்களுடன், காய்கறிகள் கலந்த சாதத்தை, பன்றி இறைச்சி மற்றும் சில துணை உணவுகளுடன் இவர் பரிமாறுகிறார். சில சமயம் வெளிநாட்டு வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வது கடினமாக இருப்பதாக கூறுகிறார் இவர். ஆனால், ருசியான உணவு இதயங்களை இணைத்து விடுவதாக சொல்கிறார். இதனால் மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள் என்கிறார்.

ஏராளமான கடைகள் ஒன்றுக்கொன்று போட்டியாக செயல்படுகின்றன. பெரும்பாலும் இவை பெண்களால் இயக்கப்படுகின்றன. இந்தப் பெண்கள் மாதம் ஒருமுறை ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். திருமதி யூன், போட்டியாக தன்னுடைய கடையை நடத்துவதைக் காட்டிலும், சந்தையில் கிடைக்கும் எல்லா உணவுமே ருசியானது என்கிறார்.

நாளுக்குநாள் சர்வதேச சுற்றுலா பயணிகளாலும் கார்டன் ராம்சே போன்ற பிரபல சமையல் கலைஞர்களாலும் கவர்ந்திழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தை, தன்னுடைய அசலான தன்மையை இழந்து விடாமல் தன்னை பாதுகாத்து வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று இந்தச் சந்தையை காண வந்திருந்த, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளான ஜூடி மற்றும் ராப் இங்கிருக்கும் அற்புதமான காட்சிகளை, ஒலிகளை, வாசனையை குறிப்பாக, உணவுக் கடைகளை நடத்தும் பலம் பொருந்திய பெண்களின்  படையை சிறப்பாக குறிப்பிடுகிறார்.

ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் ஜூடியும் ராப்பும் சந்தையின் ஒலியையும் வாசனையையும் நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

“வயதானவர்களுக்கு இளையவர்களுக்கு இது உற்சாகமான, புன்னகையுடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் இடம் இது.  கொரிய உணவுகளை சமைத்து, பரிமாறுவதில் தனித்தன்மையுடன் இவர்கள் செயல்படுகிறார்கள்” என்கிறார் ஜூடி.

சியோலின் உள் நகரப் பகுதியில் இருக்கும் குவாங்ஜங் சந்தை, சுற்றுலா பயணிகளுடன் இருக்கிறோம் என்கிற உணர்வைக் கடந்து, கொரிய மக்களுக்கு பாரம்பரிய கொரிய உணவுகளை வழங்கும் மிகச்சிறந்த இடமாகும்.

படிக்க:
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !
1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? சிறப்புக் கட்டுரை

உள்ளூர்வாசிகளுடன் அமர்வது, இருப்பதும் அவர்களால் வரவேற்கப்படுகிறது. அவர்களுடைய கலாச்சாரம், உணவு குறிப்பாக அரிசி வைன் தரும் தனித்தன்மையான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்.  இவை அனைத்தும் குவாங்ஜங் சந்தையில் உள்ள பெண்கள் இல்லாவிட்டால் சாத்தியமாகாது.

♦♦♦

எண்ணெயில் வறுத்தெடுக்கும் பலகாரங்கள் இந்தச் சந்தையில் பிரபலமானவை. பச்சை பயறு, முளைகட்டிய தானியங்கள், காய்கறிகள் கொண்டு வார்க்கப்படும் சிறு சிறு தோசைகள் பலருக்கு பிடித்தமான உணவு.

உள்ளூரில் வியாபாரிகளின் பசிக்கு உணவுடன் பீரை பரிமாறும் அஜூமா.

காரசாரமான முட்டைகோஸ் அல்லது முள்ளங்கி ஊறுகாய் (கிம்சி) எல்லாவகையான உணவுகளுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.

தென் கொரியாவின் பிரபலமான உணவான காரசார அரிசி கேக் (இட்லியை கார சட்னியில் பிரட்டியெடுப்பது போல) பரிமாறப்படுகிறது.

பன்றியின் பாதங்களும் மூக்குப் பகுதியும் உண்ணத் தயாரான நிலையில் சந்தையின் பல இடங்களில் காண முடியும்.

பன்றியின் குடலில் கிளாஸ் நூடுல்ஸ் அடைக்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவு, ‘சந்தே’ என அழைக்கப்படுகிறது.

சிவப்பு பீன்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சி அல்லது களி பரிமாறத் தயாராக…

காரசாரமான அரிசி கேக், கிழங்குகளுடன், காரசாரமான குழம்பு சேர்த்து பரிமாறப்படுகிறது.

ஒரே ஒரு பெண் நிர்வகிக்கும் கடையில் வேலைப்பளு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

படிக்க:
மத்திய பிரதேசம் – உழைக்கும் மாடாய் பெண்கள் !
செம்படையில் பெண்கள் – திரைப்படம்

காரசாரமான பன்றி இறைச்சி, காய்கறிகளுடன் சேர்த்து பரிமாறப்படும்போது, விலை மலிவான, அதேசமயம் ஆரோக்கியமான உணவு சாத்தியமாகிறது.

பிரபலமான பிபிம்பாப் என்ற பதார்த்தத்தில் அரிசி சாதத்துடன் இறைச்சி, காய்கறிகள், முளைகட்டிய பீன்ஸ் ஆகியவை சேர்த்து பரிமாறப்படும்.


நன்றி: aljazeera
தமிழாக்கம்: கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க