செம்படையில் பெண்கள் – திரைப்படம்

0

சீனாவில் பல நூறு ஆண்டுகளாக மத பிற்போக்குத்தனங்களில் கட்டுண்டு, நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் விலங்குகளை போல அடிமைப்பட்டு இருந்தார்கள், பெண்கள். அப்படிப்பட்ட சீனாவில், புரட்சியில் இணைத்துக் கொண்டு, தங்கள் அடிமைத்தளைகளை உடைத்து, சீனாவின் முதல் புரட்சிகர பெண்கள் செம்படையை கட்டியமைத்த வரலாற்றை பற்றிய திரைப்படம் தான் “தெ ரெட் டிடாச்மென்ட் ஆஃப் விமென் – பெண்களின் செம்படைப் பிரிவு”.

திரைப்படம் – பாலே வடிவத்தில்

யூடியூபில் திரைப்படம் – சுட்டிகள்

1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு படைப்பு இந்த திரைப்படம். படத்தின் கதை சற்றே விரிவாக:

பெண்களின் செம்படைப் பிரிவு1930-ம் ஆண்டு சீனாவின் தென்கோடியில் உள்ள ஹைனான் தீவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படையின் விரிவாக்கமாக பெண்கள் ராணுவப் பிரிவு ஒன்று அந்தப் பகுதி பெண்களால் உருவாக்கப்படுகிறது. பெண்கள் செம்படைப் பிரிவு பற்றிய செய்திகள் மக்கள் மத்தியில் பரவுகின்றன.

வூ சிங்-குவா, விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். ஹைனான் தீவின் மிகப் பெரும் நிலப்பிரபுவான நான்-பா-தியன், சிங்-குவாவின் தந்தையை கொலை செய்து சிங்-குவாவை அடிமையாக கட்டி வைக்கிறான். அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சிங்-குவாவை பிடித்து கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது, முட்டி அளவு நீர் நிரப்பப்பட்ட அறையில் அடைத்து வைப்பது என்று துன்புறுத்தப் படுகிறாள்.

சிங்-குவா இந்த சிறையில் இருந்து தப்பித்து சென்று செம்படை பெண்கள் பிரிவில் இணைந்து நான்-பா-தியானை பழி வாங்க வேண்டும் என்று சிந்திக்கிறாள். ஆனால், சிறையில் இருந்து தப்பிக்கும் அவளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.

ஹைனான் தீவிற்கு வரும் திருவாளர் ஹோங் எனும் பணக்காரரை சந்தேகப்பட்டு கைது செய்கிறார்கள் நான்-பா-தியனின் அடியாட்கள். அவரை சிறைக்கு அழைத்து செல்லும் போது, அங்கு சிங்-குவாவை பார்க்கிறார் திருவாளர் ஹோங். திருவாளர் ஹோங்கின் பெட்டிகளை சோதனையிடும் நான்-பா-தியனிற்கு அவர் ஒரு பெரிய பணக்காரர் என்ற விடயம் தெரிய வருகிறது. அவரின் பண உதவியுடன் நிறைய ஆயுதங்கள் வாங்கினால், அந்த தீவில் செம்படையின் ஆதிக்கத்தை அடக்கவும், அதே நேரம் சீனாவின் வெள்ளை படையினரை தனக்காக போரிட அழைக்கவும் உதவியாக இருக்கும் என திட்டமிடுகிறார். திருவாளர் ஹோங்-ற்கு ஒரு ஆடம்பரமான விருந்தை ஏற்பாடு செய்து அதில் தன் திட்டத்தை பற்றி கூறி அவரை பணம் தர சம்மதிக்க வைக்கிறார்.

திருவாளர் ஹோங்  விடை பெறும் போது, தனக்கு உதவி புரிய ஒரு ‘அடிமைப் பெண்’ வேண்டும் என்று கேட்கிறார். குறிப்பாக சிங்-குவாவை கொடுக்குமாறு கேட்கிறார். முதலில் தயங்கும் நான்-பா-தியன் அவள் வெறிப்பிடித்தவள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு சிங்-குவாவை அவருடன் அனுப்புகிறான்.

உண்மையில் திருவாளர் ஹோங் பணக்காரர் இல்லை, அங்கு புதிதாக உருவாகி உள்ள பெண்கள் செம்படை பிரிவின் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர். பெண்கள் படைக்கு சேர்ந்த நிதி வசூலை கொண்டு செல்ல அவர் சாமர்த்தியமாக இப்படி மாறுவேடத்தில் வருகிறார். அதே நேரம் நான்-பா-தியனிடம் நெருங்கிப் பழகியதில் அவன் திட்டத்தையும் தெரிந்து கொள்கிறார்.

சிங்-குவாவை பாதி வழியில் விடுவிக்கும் ஹோங் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல், அவள் ஆசைப்படி செம்படையில் சேர புறப்படுமாறு கூறுகிறார். வழியில் அவள் உணவு செலவுக்கு 4 வெள்ளி காசுகளை கொடுக்கிறார்.

பெண்களின் செம்படைப் பிரிவுசெம்படையினரை தேடி செல்லும் வழியில் ஒரு இரவு நேரம் குடிசையில் நுழைகிறாள் சிங்-குவா. அங்கு லியான் எனும் பெண்ணை சந்திக்கிறாள். இருவரும் நட்பாகிறார்கள். அந்த பெண் சீன கிராமப்புற வழக்கப்படி புத்தருக்கு மணம் முடிக்கப்பட்டவள். நம் ஊரில் கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட பெண்ணை போன்றவாள். அந்த சமூகத்தையும் பிற்போக்குத் தனத்தையும் வெறுக்கும் அவள் சிங்-குவா உடன் செம்படையில் சேர அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள்.

இருவரும் செம்படை பெண்கள் பிரிவு பயிற்சி நிலையத்தை அடைகிறார்கள். செம்படையில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். ஏன் செம்படையில் சேர வேண்டும்? என்ற கேள்விக்கு, சிங்-குவா தன் உடலில் உள்ள தழும்புகளை காட்டி இதற்கு காரணமான நிலப்பிரபுவை பழி வாங்கத் தான் என்று கூறுகிறாள். செம்படை பிரிவில் இருவரும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.

ஒரு நாள் நான்-பா-தியானை உளவு பார்க்க சிங்-குவாவும், லியானும் அனுப்பப்படுகிறார்கள். பழி வாங்கும் வெறியில் இருக்கும் சிங்-குவா தன் வேலையை மறந்து நான்-பா-தியானை கொல்ல முனைகிறாள். இருவரும் நான் படைகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். இதற்காக சிங்-குவா தனிமையில் தன் தவறைக் குறித்து சிந்திக்கும்படி தண்டிக்கப்படுகிறாள்.

தண்டனையை ஏற்கும் சிங்-குவா தன் தவறை உணருகிறாள், தனது சிறு தவறு செம்படைக்கு பெரிய ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறாள். அதே நேரம் செம்படை நான் –பா-தியானை தாக்கி அந்த கிராமத்தை விடுவிக்கத் திட்டமிடுகிறது.

நான்–பா-தியானின் கிராமம் வெற்றிகரமாக விடுவிக்கப்படுகிறது. ஆனால் ‘நான்’ தந்திரமாக தப்பித்து விடுகிறான். பின்பு வெள்ளை படையினரால் காப்பாற்றி அழைத்து செல்லப்படுகிறான். நான்-பா-தியனை துரத்தி செல்லும் சிங்-குவா துப்பாக்கிச் சூட்டில் காயமடைகிறாள்.

ஆனால், சில மாதங்களுக்கு பின் வெள்ளை ராணுவத்தின் பெரும் படையுடன் வரும் நான்-பா-தியன், ஹைனான் தீவை சுற்றி வளைத்து தாக்குவதின் மூலம், கம்யூனிச படையை ஒழித்துவிடலாம் என திட்டமிடுகிறான்.

பெண்களின் செம்படைப் பிரிவுஆனால் செம்படை வேறு போர் தந்திரத்தை வகுக்கிறது. படையை மூன்றாக பிரித்து மூன்று இடங்களில் தாக்குதல் நடத்துமாறும், அதில் முக்கிய படையான நான் படையை சிறிது நேரம் ஆட்டம் காட்ட பெண்கள் செம்படை பிரிவு கட்சி பொறுப்பாளரால் தலைமை தாங்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறது.

நான் மற்றும் இதர தலைமை கமாண்டர்கள் பெண்கள் செம்படைப் பிரிவை முக்கிய படை என கருதி தவறான வியூகத்தை வகுக்கிறார்கள். இதனால் நானின் படை வெற்றிகரமாக எதிர் கொள்ளப்படுவதுடன், அழித்தொழிக்கவும் படுகிறது.

சீன பெண்கள் செம்படை பிரிவு இந்த முதல் வெற்றியுடன் தன் புரட்சிகர பயணத்தை துவக்குகிறது.

ல ஆயிரம் வருட பாரம்பரியம், வரலாறு கொண்ட சீனாவில் பெண்களின் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. அவர்கள் சீன சமூகத்தின்  பிற்போக்குத்தனங்களால் கட்டுண்டு கிடந்தார்கள். பின்பு சீனாவை நோக்கி வந்த ஏகாதிபத்திய நாடுகளும் இந்த நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை.

ஒரு பக்கம் கிராமத்தில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்ட சீனப் பெண்கள், பிற்போக்குத் தனமான தந்தை வழி குடும்ப அமைப்பிலும் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தனர். மறுபுறம் நகரங்களில் தொழிற்சாலைகளில் பல்வேறு அடக்கு முறைகளாலும் சமமான கூலி வழங்கப்படாமல், உடலை வருத்தும் சூழ்நிலையில் சக்கையாக பிழியப்பட்டனர்.

சீனாவில் நிகழ்ந்த உழைக்கும் வர்க்க எழுச்சியும், அதனைத் தொடர்ந்த புரட்சிகர போராட்டங்களும் சீனப் பெண்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டன. நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக்கான திட்டத்தின்படி, அதன் போரட்டங்களில் பங்கெடுப்பதின் ஊடே பெண்கள் பிற்போக்குத் தனங்களுக்கும் தங்கள் அடிமை வாழ்க்கைக்கும் எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றார்கள்.

அதன் நடைமுறை உதாரணம் தான் பெண்கள் செம்படைப் பிரிவு. புரட்சிக்கு வேலை செய்வதில் ஆணுக்கு நிகர் பெண்கள், பெண்கள் விடுதலை பெறுவதற்கு இந்த பிற்போக்கு சமுகத்தை அழிக்க அவர்கள் ஒரு பெரும் சக்தியாக ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம். அதன் ஒரு பகுதியாக ஆயுதம் தாங்கியப் பெண்கள் செம்படை கட்டப்படுகிறது.

பெண்களின் செம்படைப் பிரிவுஇதுதான் இந்த படத்திற்கான பின்புலம். ஆனால் செம்படையில் சேர்ந்து விடுவதாலேயே ஒருவர் முழு பாட்டாளியாக உருவாகி விடுவதில்லை, அவர் அந்த போராட்டத்தின் ஊடே கற்பதின் மூலம் தான் பாட்டாளியாக உருவாகிறார்.

சிங்-குவா இயல்பில் ஒரு விவசாயப் பின்னணியை கொண்ட ஏழைப் பெண் தான். ஆனால் அவளிடம் பழி வாங்கும் குணம் இயல்பிலேயே இருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் அவசரப்படுகிறாள். தனக்கு மட்டும் ஏதோ தனியாக  குற்றம் நிகழ்ந்து விட்டதை போல பாவிக்கிறாள். ஆனால் செம்படையில் பயிற்சியின் போது அவள் பழகும் பலரிடமும் நிலப்பிரபுக்களின் கொடுமைகளை பற்றிய கதைகள் உள்ளது. அவர்கள் அனைவருமே நிலப்பிரபுக்களால் துன்புறுத்தப்பட்டவர்கள் தான். சமூகமே நிலப்பிரபுக்களாலும், ஏகாதிபத்திய முதலாளிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறது. இதை மெல்ல கற்கும் அவள், ஒரு நான்-பா-தியனை பழி வாங்குவது மட்டும் இலக்கு அல்ல, அதன் மூலம் தனது விடுதலையை சாதிக்க முடியாது, அதை சாதிக்க ஒட்டு மொத்த சீன சமூகத்தையும்  விடுவிக்க வேண்டும், அதற்கு உழைக்கும் மக்கள் அனைவரின் ஒற்றுமை அவசியம் என்பதை உணருகிறாள்.

செம்படைப் பிரிவின் கட்சிப் பொறுப்பாளர் சாங்-சிங் கட்சியில் இணைந்து இரண்டே வருடத்தில் மிக குறிப்பான வளர்ச்சியை அடைந்திருப்பதை பற்றி சிங்-குவாவும், லியனும் விவாதிக்கும் காட்சி மிக முக்கியமானது. இது கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பை துல்லியமாக விளக்கும் காட்சி.

இருவரும் சாங்-சிங்கை பார்த்து பொறாமைப் படவில்லை, அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ அவரை பார்க்கவில்லை. எப்படி இரண்டே வருடத்தில் அவர் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பதை பற்றி விவாதிக்கிறார்கள். பின்பு தாங்களும் மிக வேகமாக தங்களை வளர்த்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.

இறுதிப் போரின் போது ராணுவப் படையில் பெண்களை பார்க்கும் நான்-பா-தியன் அதை வெறும் தந்திரம் என புறந்தள்ளுகிறான், அவன் மதிப்பீடு அவனையும் அவன் படையையும் முழுவதுமாகவே அழிக்கிறது. சரி தான், சமூகத்தில் பெண்கள் குறைத்து மதிப்பிடப்படுவது அழிவை நோக்கி தான் அழைத்து செல்லும்.

சீன நிலைமைக்கு இந்திய நிலைமை சற்றும் குறைந்ததல்ல, ஒரு புறம் சாதி, மத சடங்குகளின் பிடியிலும், மறுபுறம், நுகர்வு கலாச்சார கவர்ச்சி பொம்மைகளாகவும், பெண்கள் வாழ்வை கசக்கி பிழிந்து துப்பிக் கொண்டிருக்கிறது இந்திய சமூகம். இதை எதிர்த்து போராடி சமூக அமைப்பையே மாற்றி அமைப்பதன் மூலம்தான் பெண்கள் விடுதலை பெற முடியுமே தவிர இந்த சமூகத்தின் உள்ளேயே செய்யப்படும் சில சீர்த்திருத்தங்களால் அல்ல. அதற்கு இந்தப் படம் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

–    ஆதவன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க