சீனாவின் யுவான் வாங் 5 ரக கப்பல் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தது. கப்பலின் வருகையையொட்டி பல விவாதங்கள் கிளம்பின. இந்தியப் பெருங்கடலில் நுழைகிற உளவுக் கப்பல் என்றது அமெரிக்கா.

இந்திய ஊடகங்களோ 750 கி.மீ. தூரம் வரை கண்காணிக்கும் வல்லமை கொண்ட இக்கப்பலால் தென்னிந்தியாவிற்கு மிகப்பெரும் ஆபத்து என்று கூச்சலிட்டன. மேலும், இந்தியாவின் தென்மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படை தளங்கள், குறிப்பாக தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும் என்று பலவாறு விவாதித்தன.

சீனாவின் யுவான் வாங் 5 ரக கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலைகொள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து கப்பலின் வருகையைத் தாமதப்படுத்துமாறு சீன அரசாங்கத்திடம் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.

படிக்க : கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

எனினும், எரிபொருள் நிரப்பவே, தங்கள் நாட்டுக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் இக்கப்பலால் எந்த நாட்டு பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் சீன வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது. இதனையடுத்து சில நிபந்தனைகளுடன் சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தது.

இந்தியாவின் எதிர்ப்பால் இலங்கை பணிந்தது; பாருங்கள் ‘இந்தியாவின் பராக்கிரமத்தை’ எனப் பீற்றிக் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள், ‘இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை சீனக் கப்பலை அனுமதித்தது’ என நொந்து கொண்டன. யுவான் வாங் கப்பல் குறித்து ஊடகங்கள் ஒருபுறம் பீதிகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இந்திய ஆளும் வர்க்கங்களின் அடிவருடிகள் தங்கள் பங்கிற்குக் கூச்சலிட்டனர்.

“சீனாவின் உளவுக் கப்பல் விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்புகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணைகளை ஏவும் போர்க்கப்பல்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், “இலங்கையில் போர்க் கப்பல்களை அணிவகுக்க சீனா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” என்று பாமக தலைவர் ராமதாசும் பீதியூட்டிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் சீனக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டணியும் தெரிவித்திருந்தது.

இந்திய ஆளும் வர்க்கங்களால் பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட ‘சீன உளவு கப்பல்’.

இலங்கையில் நிறுத்தப்பட்ட சீனக் கப்பலால் போர் அபாயம் மூண்டதைப் போல பாவனை காட்டிய இந்தியக் கடற்படை ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் ஹெலிகாப்டரை தாழ்வாகப் பறக்கவிட்டு, கடற்படை வீரர்களைக் கொண்டு பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது. இவர்கள் ஊதிப் பெருக்கியதை போல எதுவும் நடக்கவில்லை. இலங்கையைவிட்டு சீன கப்பல் அமைதியாக வெளியேறியது.

***

‘உளவுக் கப்பல்’ என்று அமெரிக்க தெரிவித்த கருத்தை அப்படியே வாந்தியெடுத்தன பல இந்திய ஊடகங்கள்; ஆனால், அக்கப்பல் உண்மையில் ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிற கப்பலல்ல, செயற்கைகோள்களை ஆராய்ச்சி செய்யும் ஆய்வுக் கப்பலே; ஃப்ர்ஸ்ட் போஸ்ட், பிபிசி உள்ளிட்ட சில ஊடகங்களே இக்கருத்தைப் பதிவுசெய்திருந்தன. அதேநேரத்தில், யுவான் வாங் கப்பல் சர்வதேச விதிமுறைகள் எதையும் மீறி இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.

மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் சீனக் கப்பல் நுழைவதற்கு அந்நாடு யாருடைய சிறப்பு அனுமதியையும் பெற வேண்டியதில்லை என்பது முக்கியமானது. சீனாவிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி கட்டமுடியாததால் சீன அரசுக்கு சொந்தமான சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், கிட்டத்தட்ட இலங்கையில் உள்ள சீனாவின் காலனி பகுதி போன்றது. எதிர்காலத்தில் சீனா அங்கு ராணுவ கப்பலையே கொண்டுவந்து நிறுத்தினாலும் ‘சட்டப்படி’ யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

யுவான் வாங் கப்பல் நிறுத்தப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமானது தென்கிழக்காசியாவை ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுடன் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது; சீனாவின் மிகப்பெரிய வர்த்தகத் திட்டமானப் பட்டுப்பாதை திட்டத்தில், இலங்கையின் அம்பாந்தோட்டை ஒரு அங்கமாகும். தென் சீன கடலில், சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்துவரும் போக்கில், இது ஒரு அம்சமாகும்.

ஆனால் தற்போது வந்த யுவான் வாங் கப்பல், ராணுவ நோக்கம் கொண்ட உளவுக் கப்பல் அல்ல; அமெரிக்காவால் கிளப்பிவிடப்பட்டு இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்ட பிரச்சாரமே ‘உளவுக் கப்பல் அபாயம்’.

சீன கப்பலின் வருகையை இந்தியா, அமெரிக்காவைத் தவிர வேறு நாடுகள் எதுவும் கண்டிக்கவில்லை என்பதே இதற்கு துலக்கமான சான்று. இந்திய ஊடகங்கள் புலம்பித் தள்ளுவது போல ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு உளவு கப்பலை சர்வ சாதாரணமாகக் கொண்டுவந்து நிறுத்திவிடவும் முடியாது.

***

“சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல்கள் இலங்கைக்கு வருவது புதிதல்ல” – என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு எதிராக இந்தியா கூச்சலிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த காலங்களில் ஒவ்வொரு முறை சீன கப்பல் இலங்கை அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்தபோதெல்லாம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பிரச்சாரத்தையே மீண்டும் மீண்டும் கிளப்பி விவாதப் பொருளாக்கியிருக்கிறது.

படிக்க : இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !

2014 ஆம் ஆண்டு, சீனாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ‘ஜான்சென்க் 2’ இலங்கைக்கு வந்தபோதும்; 2019 ஆம் ஆண்டு, அந்தமான் தீவுகளுக்கு அருகில் சீன ஆராய்ச்சி கப்பலான ‘ஷி யார் 1’ வந்தபோதும் இதே போன்ற விவாதங்கள் கிளம்பின; 2020ல் மட்டும் நான்கு முதல் ஆறு சீன ஆராய்ச்சி கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்திருக்கிறது. இச்செய்திகளை இந்து நாளிதழின் தரவுகளிலிருந்து அறியமுடிகிறது.

***

அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் இன்று ஆட்டங்கண்டுவரும் நிலையில், அதன் மேலாதிக்கத்திற்கு சவால்விடும் நாடாக இன்று ரஷ்யாவும் சீனாவும் வளர்ந்து நிற்கிறது. மேலாதிக்க வல்லரசுகளுக்கு இடையிலான போட்டோ போட்டியில், அடிக்கடி இதுபோன்ற பிரச்சாரங்கள் எழுப்பப்படுவதும், அதை ஒட்டி ஆளும் வர்க்க அடிவருடிகள் ‘தேசபக்தியால்’ தொண்டை கிழிவதும் வழமையாக நடப்பதுதான்.

உள்நாட்டில் பாஜக ஆட்சியில் உழைக்கும் மக்கள் சந்தித்துவரும் அவலங்கள், அவர்கள் மீதான அடக்குமுறைகள், அக்கிரமங்களை விவாதப் பொருளாக்கவிடாமல், அவர்களின் சிந்தனையில் ‘தேசவெறி’ குப்பையைக் கிளப்பிவிடதான் இத்தகைய பிரச்சாரங்கள் ஆளும் வர்க்கங்களுக்குது துணை புரிகின்றன. அதற்கு மேல் இந்நிகழ்வுகளில் ஒன்றும் இல்லை.


வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க