ஜம்மு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பிரிவு பேராசிரியரான முகமது தாஜுதீன் புரட்சியாளர் பகத்சிங் குறித்து வகுப்பெடுத்த காரணத்துக்காக இந்துத்துவ கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இந்துத்துவ கும்பலின் அழுத்தத்தால் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். 16 ஆண்டுகளாக ஜம்மு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் இவர் மீது ‘சில மாணவர்கள்’ பதிந்த ‘குற்றச்சாட்டை’ விசாரிக்க விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் ஜார் மன்னராட்சிக்கு எதிராக லெனினுடைய அரசியல் போராட்டம் குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருந்த முகமது தாஜுதீன், அதை விவரிக்கும் விதமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய பகத்சிங்கை உதாரணமாக சொல்லியிருக்கிறார். அப்போது பகத்சிங், தீவிரவாதி எனக்கூறப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். எப்படி லெனினை ஜாரட்சி தீவிரவாதி என சித்தரித்ததோ அது போன்று பகத்சிங்கை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தீவிரவாதிகள் எனச் சித்தரித்தார்கள். இதுதாதன் அவரது சான்று கூறிய செய்தியின் பொருள்.
கற்கும் நோக்கத்தோடு வகுப்பறையில் எடுக்கப்பட்ட இந்த விவாத வீடியோ, மாட்டு மூளை இந்துத்துவ வெறியர்களிடம் சிக்கியுள்ளது. அதை அவர்கள் கத்தரித்து சமூக ஊடகங்களில் திரித்து பரவ விட்டுள்ளனர். ஜம்மு பேராசிரியர் பகத்சிங்கை தீவிரவாதி என சொல்லிவிட்டார் என சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதால் முகமது தாஜுதீன் இப்போது இடைநீக்கத்துக்கு உள்ளாகியுள்ளார்.
“வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவர்கூட ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. என்னுடைய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நமக்கு சுதந்திரம் தேவை. தேசியத்தையும் சர்வதேசியத்தையும் கருவிகளாக பயன்படுத்தி அதைச் செய்கிறோம். இல்லையெனில் அரசியல் அறிவியல் சொல்லித் தருவதை இது பாதிக்கும்” என தன் கருத்து திரிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்வினையாற்றுகிறார் தாஜுதீன்.
இந்துத்துவ கும்பலின் திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தின் காரணமாக, வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கிறது இவருடைய குடும்பம். கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய அச்சம் இருப்பதால், ஊடகங்களிடம் பேசுவதில் தயக்க காட்டுகிறார் ஜம்மு பேராசிரியர்.
பேராசிரியருக்கு எதிராக, அவருடைய கருத்தை திரித்து பரப்பி வருகிறது பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொண்டிருந்த ஆர். எஸ். எஸ். கும்பல், போலி தேசியவாதம் பேசி, பேராசிரியரை பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்க வேண்டும் என்கிறது.
“வழக்கமாக வகுப்பறையில் நடக்கும் விவாதம் இது, அதை பெரிது படுத்திவிட்டார்கள். வெளிப்படையான விவாதங்களை இனி வகுப்பறைகளில் நடத்த முடியாது என்பது அச்சத்தைக் கூட்டுகிறது. மீண்டும் நினைவுகூர்வதற்காக வகுப்பறையில் வீடியோ எடுப்பதுண்டு. இப்படி கருத்து சொல்லவந்த விதத்திலிருந்து திரிக்கப்படும் என்பதை நாங்கள் அறியவில்லை” என்கிறார் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர் சரவண் சிங்.
நதீம் என்ற மற்றொரு மாணவர், “அரசியல் படிக்கும் மாணவர்கள் என்ற வகையில் இதுபோன்ற கருத்துக்கள் எந்த கோணத்தில் சொல்லப்படுகின்றன என்பதை நாங்கள் புரிந்து கொள்வோம். பேராசிரியர் தவறாக எதையும் கூறவில்லை. அவர் வேறொரு கோணத்தை சொன்னார். அதாவது பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்” என்கிறார்.
பேராசிரிய தாஜுதீனுக்கு ஆதரவாக பெருவாரியான மாணவர்கள் துணை நிற்கிறார்கள். அவரை பல்கலையை விட்டு நீக்குவதோ, இடைநீக்கம் செய்வதோ தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிறார்கள் மாணவர்கள்.
படிக்க:
♦ பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !
♦ நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் பல்கலை பதிவாளர், ‘’பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்படவில்லை, வகுப்பெடுப்பதை மட்டும் இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளோம்’’ என்கிறார். ‘’பேராசிரியர் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டி விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தவுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்’’ என்கிறது பல்கலை நிர்வாகம்.
வகுப்பறையில் நடந்த விவாதம் ஒரு பேராசிரியரை பணிநீக்கும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. அவரும் அவருடைய குடும்பத்தாரும் கும்பலால் தாக்கப்படும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மதவெறி பிடித்த சர்வாதிகாரிகளின் ஆட்சியில்தான் இதெல்லாம் நடக்கும்.
செய்தி ஆதாரம்:
• Jammu University Professor Targeted for Classroom Remarks Taken Out of Context
இதையும் கேளுங்க:
பகத்சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை!