கல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்

இந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா? இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.

‘’அண்மைக் காலங்களில் கல்வி நிறுவனங்களில் மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசாங்கமும் ஆர்.எஸ்.எஸ்.-சும் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான சில நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன.’’ என்பதை சுட்டிக்காட்டி, இதன் அரசியல் பின்னணியை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், குடியாத்தம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான பேரா ப.சிவக்குமார்.

‘’சென்னைப் பல்கலைக் கழகத்தின் சைவ சித்தாந்தத் துறை தலைவராக இருப்பவர் பேராசிரியர் சரவணன். மாணிக்க வாசகர் தொடர்பான ஒரு நூலை குறித்து அவர் பேசியதற்கு, இந்து மதத்திற்கு எதிராக உள்ளார் எனவே அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்று சிவனடியார்கள் என்ற பெயரில் ஒரு காவிக் கும்பல் கோஷமிட்டுக்கொண்டே ஊர்வலமாக பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்கள். அப்பொழுது, அங்கே இருந்த கல்லூரி மாணவர்கள் எதிர்வினையாற்றினார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்  திருமதி சாந்தி என்பவர் பள்ளி விடுமுறையில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். எதற்காக இந்தப் பயிலரங்கு? என்ன தலைப்பில் யாரெல்லாம் பேசப்போகிறார்கள்? என்ற எந்த தகவலும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. மாநகராட்சிப் பள்ளியொன்றில் நடைபெற்ற இப்பயிலரங்கில் சுப்பிரமணியம் மற்றும் டி.வி. ரெங்கராஜன் என்பவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வியாசை யோகா பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் சுப்பிரமணியம். இதிகாச சங்கள சமிதியைச் சேர்ந்தவர் டி.வி. ரெங்கராஜன். அறிவியலின் ஆணிவேர் எல்லாம் இதிகாசங்களில் இருக்கிறது என்று கருத்துத் திணிப்பை செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், சென்னை, கிண்டி அண்ணா பல்கலைகழகத்தில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயங்கும் தளத்தில் பணியாளர் ஒருவர் தவறி கீழே விழுந்து இறந்துள்ளார். ‘’ நம்ம தளத்தில் கெட்ட ஆவி ஒன்று இருக்கிறது. அதனை விரட்ட வேண்டும்’’ என்று கூறி, கணபதி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார், துறைத்தலைவர் சாசுவதி முகர்ஜி. மேலும், ‘’பிப்-3 அன்று, கணேஷ் பூஜை நடைபெறவிருக்கிறது, அனைத்துப் பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்று விநாயகர் அருளைப் பெறுங்கள்’’ என்று அழைப்பு விடுத்து சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலையில் கணபதிக்கு சிலை வைத்து மாடம் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அன்றாடம் விளக்கும் வைக்கப்படுகிறது.

படிக்க:
எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
இந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்

அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலிருந்து அண்ணாவின் நீதிதேவனின் மயக்கம் நாடகத்தை நீக்கிவிட்டு, பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள ராஜராஜசோழன் என்ற நூலை வைத்திருக்கிறார்கள். அண்ணாவின் நாடகத்தை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு கைடு – நோட்ஸ் இல்லையாம். கல்விக்குழு மற்றும் ஆட்சிக்குழுவின் ஒப்புதலோடு கொண்டுவரப்பட்ட பாடத்தை தன்னிச்சையாக நீக்கியிருக்கிறார்கள். இந்த நாடகத்தில் யாகங்களைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் விவாதங்கள் இடம்பெற்றிருக்கிறது என்பதும் திராவிட அரசியல் பார்வையிலிருந்து ஆரியக் கருத்துகளை கேள்விக்குள்ளாக்கியதும்தான் அவர்களின் பிரச்சினை.

வினவு செய்திப் பிரிவு நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? இந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா? இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான கருத்தியல் ரீதியான சிந்தனையை மழுங்கடிக்கின்ற சிந்தனையில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை திணிக்கின்ற ஒரு கல்விமுறை கூட எதிர்காலத்தில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.

முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள் ! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க