கிண்டி வளாகத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைகளும் அண்ணா பல்கலைக் கழகமும் இயங்கி வருகிறது. இரு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து போகிற இடமாக மட்டுமல்லாமல் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்களது ஆய்வுப் பணிக்காக அன்றாடம் வந்து செல்கின்றனர். இரண்டுமே அரசு கல்வி நிறுவனங்கள் என்ற வகையில் மருத்துவமனை, தபால் துறை, வங்கிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் தீயணைப்புத்துறை வண்டிகள் வந்து செல்வதற்காக பொதுவழிப்பாதைகள், பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் கிண்டிவளாகம் வனஉயிரினங்களின் மேய்ச்சல் நிலமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் இரண்டு பல்கலையைச் சேர்ந்த பெரும்பான்மை ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ தெரியாமல் பொதுவழிப்பாதையை மூடும் வகையில் நிரந்தர மதில் சுவரை கட்டி வருகிறது பல்கலைக்கழக நிர்வாகம். இந்நிலையில் சென்னைப் பல்கலைக் கலையின் அன்றாட அலுவல்கள் முற்றிலும் முடங்கும் படி அண்ணா மற்றும் சென்னைப் பல்கலையை இணைக்கும் முக்கிய சாலையை திருட்டுத்தனமாக விடுமுறை நாளான ஞாயிறன்றே (07-அக்டோபர்-2018) கட்டிமுடிக்க முயற்சி செய்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்.

ஏற்கனவே ஒரு முறை மதில் சுவர் பிரச்சனை சென்னை பல்கலைக் கழக மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் எழுப்பப்பட்டு முதன்மை சாலையை அடைக்கும் பணி சற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதில் சுவர் கட்டும் ஒப்பந்தம் யாரால் எங்கு இறுதியானது என்பதே இரு பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ புரியாத புதிராக தற்பொழுதுவரை இருந்து வருகிறது.

ஏனெனில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் சரி அண்ணா பல்கலைக் கழகத்திலும் சரி, ஒழுங்கான குடிநீர் வசதியோ, போதுமான கழிப்பறைகளோ, கழிப்பறைகளில் கதவுகளோ கூட இல்லாதிருக்கும் பொழுது அண்ணாபல்கலைக் கழகமும் சென்னைப் பல்கலைக் கழகமும் 50%-50% என்ற கணக்கில் 90 இலட்சம் செலவழித்து மதில் சுவர் கட்டுவது ‘கட்டிங் அடிப்பதற்கே’ என்று ஒரு சேர கூறுகிறார்கள் மாணவர்களும் னநாயக உணர்வு கொண்ட ஒரு சில பேராசிரியர்களும்.

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் மதில் சுவரை கட்டியெழுப்பிவிடலாம் என்று நினைத்த நிர்வாகத்தின் நைச்சியத்தை மாணவர்கள் தங்களது ஒருமித்த போராட்டத்தால் நொறுக்கியிருக்கிறார்கள்.

08-அக்டோபர்-2018 திங்கள் காலை 9 மணியிலிருந்தே சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் பொதுவழியை அடைத்து முன்வைக்கப்பட்டிருந்த காண்கீரிட் தடுப்பை அகற்றக்கோரி சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பெருந்திரளான முதுகலை மாணவர்கள், அலுவலர்கள், ஒரு சில பேராசிரியர்கள் ஒன்று கூடி சாலையில் அமர்ந்து போராடினர்.

(இரவோடு இரவாக பாதையை மறித்து எழுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள காங்கிரிட் கம்பிகள்)

மதில் சுவரின் ஒருபுறம் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்களும் மறுபுறத்தில் அண்ணாபல்கலைகழக நிர்வாகிகளும் தனியார் ஒப்பந்த காரர்களும் வண்டி நிறைய காவல்துறையினரும் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவதற்கு யார் அனுமதி அளித்தது? என்ற கேள்விக்கு விடை எளிதே. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மேல் இருப்பவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.க. அடிமைகளாகவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலாகவே இருக்கிறார்கள். ஒப்பந்த பணிகள் மூலமாக வந்தவரை வாரிச்சுருட்டலாம் என்பதற்கு இதுபோன்ற போராட்டங்களால் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக கல்வி நிலையத்திற்குள் காக்கிகளை ஏவி மாணவர்களை ஒடுக்க நினைக்கிறது நிர்வாகம். இதில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக யாரும் போராடி விடக்கூடாது என்பதற்காக நிர்வாகம் தனது அடிமைப் பேராசிரியர்களை தனியார் செக்யுரிட்டிகளுடன் நிற்க வைத்து மாணவர்களை போராட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் மிரட்டிக்கொண்டிருந்தது. மேலும் அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் செல்வதற்காக அப்பல்கலையின் மாணவர்களும் போராட்டத்தைப் பார்த்துக்கொண்டே அடைபடவிருக்கும் பொதுவழியின் வாயிலாகவே தங்களது வகுப்பு நோக்கி போவதை தடுத்து நிறுத்தி சுற்றிப்போகும் படி மிரட்டிக் கொண்டிருந்தது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்!

நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகரித்து சற்றேறக்குறைய 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பேச்சு வார்த்தைக்காக வந்த சென்னைப் பல்கலைக்கழக கிண்டி வளாக இயக்குநர் மற்றும் சில மூத்த பேராசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்பது போல பாவனை செய்தனர். இவர்கள் இப்படி பாவனை செய்வது வழக்கமான ஒன்று. இதே மதில் சுவர் பிரச்சனை சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பொழுது புதிதாக பதவியேற்றுக்கொண்ட கிண்டி வளாக இயக்குநர் பேராசிரியர் முருகன், தான் இந்த பிரச்சனையை துணைவேந்தரிடம் கொண்டு செல்வதாக கூறினார். பலமாதங்கள் கழித்து இன்றைக்கு மாணவர்களிடமும் இதே வார்த்தையைத்தான் சொல்கிறார். மேலும் மாணவர்கள் ஏதோ தேவையற்று யாருக்காகவோ போராடுகிறார்கள் என்ற தொனியில் பிரச்சனையை பேராசிரியர்கள் கவனத்திற்கு கொண்டுவந்துவிட்டால் அத்தோடு கலைந்து செல்ல வேண்டும் என்று கூட்டத்தைக் கலைப்பதிலேயே குறியாக இருந்தார். மேலும் எல்லாம் சட்டப்படி நடக்கிறது என்று லீகல் பாயிண்டுகளைப் பேசினார்.

படிக்க:
அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
சென்னை பல்கலை மாணவர்களின் தினமலர் அலுவலக முற்றுகை !

இரு பல்கலைக்கழகமும் இதுவரை பொதுவாக பயன்படுத்தி வந்த பொதுவழியை அடைத்து மதில் எழுப்பது நவீன தீண்டாமைச்சுவரைப் போன்று இருப்பது எந்த சட்டத்தில் வருகிறது என்பதற்கும் வன உயிரினங்கள் வந்து செல்லும் இடத்தில் யார் இது போன்று சுவர் எழுப்புவதற்கு அனுமதி அளித்தனர் என்பதற்கும் நிர்வாகத்தினர் பதில் தரவில்லை என்பதுடன் ஏதோ இப்பிரச்சனை இவர்களுக்கு இப்பொழுதுதான் தெரியும் என்பது போல காட்ட நினைத்து மாணவர்களிடையே அம்பலப்பட்டு போனார்கள். இதில் கோட்பாட்டு இயற்பியல் துறைத்தலைவர் ரீட்டா ஜான் ஒருபடி மேலே போய் மாணவர்களைப் பார்த்து மரியாதையா கலைஞ்சு போயிரு என்று மிரட்டினார். வழக்கமான பாணியில் மாணவர்களை அடிமைகளாக நடத்தி மிரட்டி காரியம் சாதிக்கலாம் என்று எண்ணியது பெருந்திரளான மாணவர்கள் கூட்டத்திற்கு முன் ஒப்பேறவில்லை. மாணவர்கள் உறுதியுடன் நின்று போராடினர்.

இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் வாயிலாக கீழ்க்கண்ட பல விசயங்களைக் அனுபவமாகப் பெற்றனர்.

• மதில் சுவரை அகற்றுவோம் என்ற கோரிக்கையில் உறுதியாக பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் துறை வளாகத்திற்கு இத்தீ புதிய வரவு! பெண்களின் பங்களிப்பு அசாதாரணமான ஒன்றாக இருந்தது.

• தற்காலிகமாக பல்கலைக் கழக நிர்வாகம் மதில் சுவரை எழுப்புவதிலிருந்து நைச்சியமாக பின்வாங்கியிருக்கிறது. ஆனால் பொதுச்சொத்தான பல்கலைகழகம் கூறுபோடப்படுவதை மாணவர்களும் பேராசிரியர்களும் வீதிக்குவந்து மக்களிடையே அம்பலப்படுத்தினால் அன்றி இப்பிரச்சனைக்கு தீர்வில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இத்தகைய போராட்டம் அணையாமல் தமிழகமெங்கும் மாணவர்களால் கட்டியைமைக்கப்படும் பொழுது தான் பல்கலைக்கழகத்தை மட்டுமல்ல தமிழகத்தையே காக்கமுடியும் என்ற நிதர்சனம் நம் முகம் முன் நிற்கிறது என்பது மிகையல்ல!
வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க