“தெற்காசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஆறு நாடுகளின் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த நான்காண்டுகளில் நான்காமிடத்திற்குச் சென்றுவிட்டது” என பிரபல பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்த்தியா சென் கூறியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி
‘எதிர்பார்த்திராத பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ நூல் வெளியீட்டு விழாவில் அமர்த்தியா சென் மற்றும் ஜியான் திரெஜ்

ஜியான் திரெஜ் என்பவருடன் இணைந்து அமர்த்தியா சென் எழுதிய “நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” – (An Uncertain Glory: India and its Contradiction) என்ற நூலின் இந்தி மொழிப்பதிப்பு வெளியீட்டு விழா கடந்த 08.07.2018 அன்று டெல்லியில் நடந்தது. அந்த விழாவில் அமர்த்தியா சென் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தலைகீழான திசையை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய ஆறு நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடத்தில் இருந்து வந்தது. தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அப்பட்டியலில் கடைசியிலிருந்து இரண்டாம் இடத்திற்கு வந்தடைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், சாதி ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து இந்த அரசு தன்னை முற்றிலும் விலக்கிக் கொண்டுவிட்டது என்றும் கூறினார். இது குறித்துப் பேசுகையில் மனித மலத்தை கைகளால் அள்ளி சுத்தம் செய்பவர்கள், பாதாள சாக்கடையில் எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இறங்கி சுத்தம் செய்பவர்கள் என இந்த வேலைகளைச் செய்துவரும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தலித் ஒடுக்குமுறை
வளர்ச்சியின் நாயகனின் ஆட்சியில் இன்னும் கையால் மலமள்ளும் அவலம்

மத்தியப்பிரதேசத்தில் பெட்ரோல் பங்க்-கில் வேலை பார்த்த தலித் இளைஞர் சம்பள உயர்வு கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மேலாளரால் அடித்துத் துவைக்கப்பட்ட சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட அமர்த்தியா சென், அடுத்த வேளை கஞ்சிக்கு என்ன வழியென்று கூடத் தெரியாமல் பெரும்பான்மை தலித் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றும்  அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை தலித் மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது என்று கூறினார்.

மேலும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் கூட “இந்து” என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் களத்தில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த அபாயகரமான நிலைமையை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம் என்றும் கூறினார்.

”இது வெறுமனே மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான பிரச்சினையல்ல. இந்தியாவுக்கான பிரச்சினை” என்றார்.

அந்நூலின் மற்றொரு ஆசிரியரான, பொருளாதார நிபுணர் ஜியான் திரெஜ் அவ்விழாவில் பேசுகையில், 50 கோடி ஏழை பயனாளிகளை இலக்காக வைத்து செயல்படுத்தப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற பிரம்மாண்டமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உண்மையில் மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டார்.

“இந்தத் திட்டத்திற்காக நடப்பாண்டு நிதியறிக்கையில் ரூ.2000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் செலவிடப்பபட்டாலும் கூட ஒரு நபருக்கு ரூ.20-க்கும் குறைவான தொகையே செலவிடப்படும்” என்று கூறினார்.

வேலை வாய்ப்பிழப்பு, சிறு குறு தொழில் நசிவு என பெரும்பான்மை மக்களை ஏதுமற்றவர்களாக மாற்றும் மோடி அரசு அதற்குப் பதிலாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. அமர்த்தியா சென்னும், திரெஜ்ஜும், முதலாளித்துவவாதிகளே விதந்தோதும் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள்தான். ஆனாலும் பா.ஜ.க அரசு பேசும் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்திற்கே நல்லதல்ல எனும் அடிப்படையில் பேசுகிறார்கள்.

வேலையிழப்பும், சிறு குறு தொழில் நசிவும் இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்கி போடுவது குறித்து அவர்கள் பரிசீலிக்கிறார்கள். அடிப்படையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தினாலும் சரி, இத்தகைய நிபுணர்கள் கருதும்படி நல்லவிதமாக அமல்படுத்தனாலும் சரி, விளைவு இதுதான்.

சுதேசி பொருளாதாரத்திற்கான கொள்கை இல்லாத வரை இத்தகைய ’மனிதாபிமான’ பார்வை மோடி அரசின் பொருளாதார தாக்குதலை வீழ்த்தி விடாது என்றாலும் மத்திய அரசின் பித்தலாட்ட புள்ளிவிவரங்களை முதலாளித்துவ அறிஞர்களே ஏற்கவில்லை எனுமளவுக்கு நிலைமை கடுமையாகிவிட்டது.

  • வினவு செய்திப் பிரிவு

நன்றி: என்.டி.டி.வி இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க