குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மெட்ரோல் ரயில் பாதை அமைப்பதற்காக தொழிலாளர்களின் குடியிருப்புகளை பலவந்தமாக அகற்றி அவர்களை வீடற்றவர்களாக மாற்றி வீதியில் வீசியிருக்கிறது குஜராத் அரசு.

அகமதாபாத் நகரத்தில் மேதெரா என்னும் பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர். அவர்கள் அனைவரும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் மாநகர மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அகமதாபாத் நகராட்சி, “ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை” எனும் நிறுவனத்தின் ஆதரவோடு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஏழை, எளியவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கிறது குஜராத் அரசு.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
♦ இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!

அந்த வகையில் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாழும் குடிசைப் பகுதிகளையும் கடந்த 02-04-2021 அன்று குடிசைகளை உள்ளே இருக்கும் உடைமைகளோடு சேர்த்து இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது. ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் நிதி மூலதனம் குட்டி போடுவதற்காக, அந்தப் பகுதியில் இருக்கும் இந்தியக் குடி மக்கள் வீடற்றவர்களாக வீதியில் வீசப்பட்டனர்.

கார்பப்ரேட்டுகளின் நலன்களுக்காக சாதாரண மக்களை இப்படி வீசி எறிவது என்பது இந்தியாவில் எங்கும் புதிதல்ல. அன்று சிங்காரச் சென்னை என்ற பெயரிலும், இன்று ஸ்மார்ட் சிட்டி எனும் பெயரிலும் தமிழகத்தின் பெரு நகரங்களில் வாழும் பல நூறு குடும்பங்கள் வீதியில் வீசப்பட்ட வரலாறு நம் கண் முன்னேயே இருக்கிறது.

அகமதாபாத மெதேரா பகுதியில் நடந்த இந்த் ஆக்கிரமிப்புச் சம்பவத்தில், தனது மகனுடன் வசித்து வரும் விதவை பெண் இது குறித்துக் கூறுகையில், தான் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் ஒரு வண்டி அனைத்தையும் இடித்து வீட்டதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள், தானியங்கள் எல்லாம் நாசமாக்கப்பட்டு விட்டன என்றும் புலம்புகிறார். குடியிருக்கும் இடங்களில் இருந்து அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் நிர்பந்தத்தின் காரணமாக விரட்டப்பட்டு வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திறந்தவெளியில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

மஜீர் அதிகார் மஞ்ச்’ எனப்படும் ஒரு தொழிற்சங்கம், மக்களை அத்துமீறி துரத்துவது சட்டவிரோதமானது எனவும், அங்கு குடியிருப்பவர்களுக்கு முழு இழப்பீடு அளிக்கும் வரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளது.

தமது இடிபட்ட குடிசைகளை கலக்கத்துடன் காணும் தொழிலாளர்கள்.

மேலும், தங்களது உடைமைகளையும் இருப்பிடத்தையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.50,000-மும் ஒரு வருட காலத்திற்கு மாதம் ரூ.3000 தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இவர்கள் கூறிய எதற்கும் அகமதாபாத் நகராட்சி செவி சாய்க்கவில்லை.

இவ்வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், “பத்து நாட்கள் அல்லது இரண்டு வாரங்கள் அவகாசமளிக்கிறோம். அதற்குள் நீங்களாகவே அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அகமதாபாத் நகராட்சியே உங்களை அப்புறப்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது” என்று கூறியதோடு, நகராட்சி மீது குடியிருப்போர் எவ்வித புகாரும் அளிக்க முடியாது என்றும் கூறி கட்டப்பஞ்சாயத்து நடத்தியிருக்கிறது.

பார்ப்பன பாசிச அரசு இவ்வித தீண்டாமையை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இந்த நிகழ்வும் சென்னை தீவுத்திடலில் கூவம் கரையோரம் வாழும் மக்களுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அதே போல சுமார் 8 மாதங்களுக்கு முன்னர், தஞ்சையிலும் இத்தகைய ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மக்களை நகரத்திலிருந்து விரட்டியடிக்க முற்பட்டது அரசு.

மாநகரங்களில் உழைக்கும் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட சேரிப் பகுதிகளிலும் கூட அவர்களை இருக்க விடாமல் சேரியையே நகரத்தை விட்டு வெளியேற்றும் நவீன கால பார்ப்பனியத் திட்டம் தான் ஸ்மார்ட் சிட்டி.

இந்த ஸ்மார்ட் சிட்டிக்கள் உருவாக்கப்பட்ட பின்னர் விதிக்கப்படவிருக்கும் சிறப்பு வரிகள் மற்றும் உயரவிருக்கும் வாடகை, விலைவாசி ஆகியவற்றிற்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல், நடுத்தரவர்க்கமே தாமாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆகவே இது ஏதோ, அடித்தட்டு மக்களது பிரச்சினை மட்டுமல்ல.

படிக்க :
♦ அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !
♦ மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

பல வருடங்களாக காடுகளாகவும், புதர்களாகவும், இருந்த இடங்களை தனது கரம் கொண்டு கட்டிடங்களாகவும் வீடுகளாகவும், நகரங்களை உருவாக்கி அழகாக்கிய உழைப்பாளர்கள் இன்று அந்த இடங்களுக்கே அழுக்காக தெரிகின்றனர். நோகாமல் இவர்களின் உழைப்பில் வாழ்ந்தவர்களுக்கு இன்று இவர்கள் இங்கு வாழுவதே கண்ணை உறுத்துகின்றன.

மெட்ரோ ரயில் திட்டம், புல்லட் ரயில் திட்டம் என, அந்நிய நாடுகளின் நிதியாதிக்கக் கும்பல்களின் நயவஞ்சகத் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவந்து, மக்களை அக்கும்பலிடம் காவு கொடுக்கிறது இந்த அரசின் தனியார்மய தாராளமயக் கொள்கைகள்.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தெடுக்கும் தனியார்மய தாராளமயத்தை வெறித்தனமாக அமல்படுத்தி வரும் பாசிச கும்பலை துடைத்தெறியத் தவறினால், நமது இருப்பிடங்கள் பிடுங்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.


சாதனா
செய்தி ஆதாரம்
:
தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க