மும்பை மெட்ரோ திட்டத்திற்கு இடையூறாக இருந்த “100 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய ஆலமரம் வெட்டப்படாது” என்று கடந்த ஜூன் மாதம் செய்தி வெளிவந்தது. இது சமூக ஆர்வலர்களுக்கும் மரங்களை நேசிப்பவர்களுக்கும் தற்காலிக மகிழ்ச்சியளித்தது. ஆனால் இது ஒரு சிறிய ஆறுதல்தான். வளர்ச்சியின் பெயரில் மாநகரின் மற்ற பகுதிகளில் இன்னும் கொடூரமான அழித்தொழிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழலுக்கு நேரடி கேடு விளைவிக்கும் மூன்று பெரிய திட்டங்களுக்கும் பல்வேறு நடுத்தர திட்டங்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. ஏனைய புல்லட் ரயில் திட்டங்களைப் போலவே ஆரவாரமான மும்பை கடற்கரை வழி புல்லட் ரயில் திட்டமும் சதுப்புநிலக் காடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மரங்களை அழிப்பதுடன் பல்வேறு பழங்குடி சமூகங்களின் வாழ்விடங்களையும் காலி செய்ய இருக்கிறது.

மும்பை – அகமதாபாத் புல்லட் இரயில் திட்டத்தால் 13.36 ஹெக்டேரில் பரவியுள்ள 54,000 சதுப்புநில மரங்கள் பாதிக்கப்பட உள்ளதாக மகாராஸ்டிர சட்டமன்ற அவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் திவாகர் ரோட்டே ஜூன் 24 -ம் தேதி தெரிவித்தார்.

குஜராத் (724.13 ஹெக்டேர்) மற்றும் மகாராட்டிரத்தின் (270.65 ஹெக்டேர்) இரண்டு மாவட்டங்களில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புல்லட் ரயில் திட்டத்தால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் அழிவு குறித்து முதன்முறையாக மாநில அரசு ஒப்புக்கொண்டது.

புல்லட் இரயில் பாதையானது பல ஹெக்டேர் விவசாய நிலங்கள், மலைப்பாங்கான பகுதிகள், தரிசு நிலங்கள், பழத்தோட்டங்கள், பழங்குடிப் பகுதிகள், வனப்பகுதிகள், மலைகள், ஆறுகள், உப்பங்கழிகள் மற்றும் பிற நகர வசிப்பிடங்களின் வழியாகச் செல்லும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் மும்பையில் அடாத பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பது நிலைமையை இன்னும் கடுமையானதாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக கடற்கரைகளில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க இந்திய சதுப்பு நில சமூக அமைப்பு (The Mangrove Society of India – MSI) முயன்று வருகிறது. இந்த அமைப்பும் ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையும் (Jawaharlal Nehru Port Trust) புல்லட் ரயில் திட்டங்கள், கடற்கரை வழிச் சாலை, நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIA) போன்ற திட்டங்கள் குறித்த அச்சத்தை வெளியிட்டிருக்கின்றன.

ஜூலை 26, 2005-ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கினால் 1,000 பேர் பலியானார்கள். ஜூலை 1 முதல் 2 வரை மும்பையில் 200 மிமீ கனமழை பெய்தது. நாம் இயற்கையுடன் விளையாடினால் அதன் எதிர்வினை இப்படித்தான் கடுமையாக இருக்கும் என்று மழைக்கு பிறகு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சதுப்பு நில சமூக அமைப்பின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் உண்ட்வாலெ கூறியுள்ளார்.

கடற்கரை சாலையும் அழிவின் தொடர்ச்சியும்

கடற்கரை சாலைக்காக 164 ஹெக்டேர் நிலப்பகுதி மொத்தமாக அக்கிரமிக்கப்பட வேண்டும். இதற்காக பல்வேறு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தளார்த்தப்பட இருப்பதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1,400 கோடி ரூபாய்க்கான கடற்கரை சாலை திட்டம் 2018-ம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட மறுகணமே அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த ஐந்து வழக்குகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.

மாற்று இடத்திற்கான கூட்டுமுயற்சி (Collective for Spatial Alternatives) உறுப்பினரும், கட்டிடக் கலைஞருமான ஸ்வேதா வாக், இத்திட்டத்தைத் தடை செய்யக் கோரி 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் உயர் நீதிமன்றத்தை நாடினார். தற்போதைய நில ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்லாமல், கடலோர உருவவியல் (coastal morphology), பல்லுயிர் மற்றும் பாரம்பரிய சுற்றுச்சூழல் நடைமுறைகளை மீள முடியாத வகையில் அழித்துவிடும் என்று கூறினார். கடற்கரை சாலை மற்றும் மற்ற திட்டங்களுக்காக நடந்து கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் சுற்றுச்சூழல் அனுமதி, பாரம்பரிய நில உரிமைகள் ஆகியவற்றின் மீதான அப்பட்டமான உரிமை மீறல்களாகும் என்றும் கூறினார்.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
♦ அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி

மேலும் கோலிவாடா நகவா மீன்வள சங்கம் (Koliwada Nakhawa Fisheries) மற்றும் வொர்லி மச்சிமார் சர்வோதய கூட்டுறவு சங்கம் (Worli Machhimar Sarvoday Co-operative Society) ஆகிய இரு மீனவ சங்கங்களும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்தை தடை செய்யக் கோரியுள்ளன. இத்திட்டத்தால் கடற்கரையில் உள்ள சிப்பி படுகைகள் அதிகபடியாக பாதிப்பிற்குள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவர்களின் அச்சத்திற்கு காரணமில்லாமல் இல்லை என்று வனசக்தி என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த சரிதா ஃபெர்னாண்டஸ் கூறுகிறார். கடற்கரை சாலையெங்கும் உள்ள மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளது. மும்பையில் வோர்லி மீனவர்களை பொருத்தவரையில் பாரம்பரிய மீன்பிடி வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக தெற்கு மும்பையில் உள்ள வோர்லி கோலிவாடா மீனவர்கள் பன்ரா-வோர்லி (Bandra-Worli) கடற்கரைப் பாறைகளை மீன்பிடிக்கு நம்பியுள்ளனர்.

ஏனைய வளர்ச்சி திட்டங்களை போலவே இதற்கும் பணத்தை கொடுத்து சரிகட்ட மாநில அரசும் முயற்சித்தது. ஆனால் மீனவர்கள் நிராகரித்து விட்டனர்.பல பத்தாண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் நூற்றாண்டுகளாக அவர்கள் சார்ந்திருந்த அந்தக் கடற்கரையை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கவே, அரசாங்கத்தின் பண நிவாரணத்தை அவர்கள் நிரகரித்தனர். அவர்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டால் அவர்களது குழந்தைகளின் நிலை என்னவாகும்?” என்று கேட்கிறார் ஃபெர்னாண்டஸ்.

கடற்கரை சாலைத் திட்டத்தின் விசயத்திலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பாதிக்கப்படும் சதுப்பு நிலக்காடுகளை மீட்டுருவாக்கம் செய்து விடுவோம் என்று அரசாங்கம் தீவிரமாக வாதிடுகிறது. ”இழந்து போன சதுப்பு நிலக்காடுகளை ஐந்து மடங்குக்கு மீட்டுருவாக்கம் செய்வதற்கு நிலம் எங்கே இருக்கிறது? இது முதல் சிக்கல். ஏற்கெனவே இது போன்ற பல முயற்சிகள் உயிர் இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தோல்வியடைந்திருக்கின்றன. மேலும் சதுப்பு நிலக்காடுகளின் தனிச்சிறப்பான உயிரிகளை நம்பியுள்ள காட்டுயிர்களின் நிலை ஒரு இன்றியமையாத சிக்கலாகும். காட்டைப் பெயர்த்து மீட்டுருவாக்கம் செய்வது என்பது ஒருபோதும் வெற்றிகரமான தீர்வல்ல” என்று அவர் மேலும் கூறுகிறார்.

மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் அதன் வழியிலுள்ள பழத்தோட்டங்களைக் கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் போராடுவதற்கு முதன்மையான காரணியாக இது இருக்கிறது. இத்திட்டத்தினால் 26,980 பழமரங்களும் 53,457 மரசாமான்கள் தயாரிக்க பயன்படும் மரங்களும் பாதிக்கப்படும் என்று இத்திட்டத்தின் முதன்மை புரவலரான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency) கடந்த 2015-ம் ஆண்டில் செய்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள் “இடமாற்றம் செய்யப்படும்” என்று தேசிய அதிவேக இரயில் நிறுவன (NHSRCL) அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தக் கூற்றுக்களை கேள்வி எழுப்பியுள்ளனர். “மரங்களை அவற்றின் அசல் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்திற்கு பிடுங்கி நடுவதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களில் இந்த செயல்பாட்டினால் மரங்கள் அழிந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அமிர்தா பட்டாச்சார்யா சுட்டிக்காட்டுகிறார்.

அது மட்டுமல்லாமல் மரங்களை மீண்டும் நடுவதற்கு வேறு இடத்தை தேசிய அதிவேக இரயில் நிறுவனம் இன்னும் பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். நிலப்பற்றாக்குறை கொண்ட மும்பை மற்றும் தானே போன்ற மாவட்டங்களில் மரங்களை பிடுங்கி நடுவது ஒருபோதும் எளிதான செயலல்ல. சரியாக திட்டமிடவில்லை எனில் முடிவில் 50,000 மரங்களுக்கு மேல் நாம் இழக்க நேரிடும் என்று அவர் மேலும் கூறினார்.

சுற்றுச்சூழல் மட்டுமல்ல மக்களை அகதிகளாக்குவதும் கூடுதலான சிக்கல். மும்பைக்கு வெளியே தானே மற்றும் பல்ஹர் இரண்டு மாவட்டங்களும் பல கோடி மதிப்புமிக்க திட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. சான்றாக ஏழு கிலோமிட்டர் நீளம் கொண்ட கடல் வழி சுரங்கப்பாதையின் காரணமாக குன்பி மற்றும் ஆக்ரி போன்ற விவசாய சமூக மக்களும் தானே மாவட்டத்தில் பாதிக்கப்பட இருக்கின்றன.

தானே மாவட்டத்தில் உள்ள தனது சிறு நிலத்தை காண்பிக்கும் வழக்குரைஞர் பரத்வாஜ் சவுத்ரி.

பாதிக்கப்பட்ட தானே மாவட்ட கிராமமொன்றில் தனக்கு சிறிய நிலம் இருந்ததாக மும்பையை சேர்ந்த வழக்குரைஞரான பரத்வாஜ் சவுத்ரி கூறினார். கடுமையாக எதிர்ப்பு இருந்த போதிலும் நிலங்களை கொடுக்க கிராம மக்கள் கடுமையாக நிர்பந்திக்கப்பட்டனர். “இப்படி நிலங்களை இழப்பதென்பது முதன்முறையல்ல. முன்னரும் நிலங்களை இப்படியான திட்டங்களுக்கு நாங்கள் இழந்துள்ளோம். மேலும் இப்படியான இழப்புகளுக்கு எவ்விதமான முறையான இழப்பீடுகளும் வழங்கப்பட்டதில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால் புல்லட் இரயில்கள் மூலம் மாநகரங்களை இணைப்பது கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு எவ்விதமான அறிவியல்பூர்வமான பின்னணியும் இல்லை. இத்திட்டம் சுற்றுப்புறச் சூழலை இன்னும் கடுமையாகப் பாதிக்கும் என்றே தோன்றுகிறது.

“கிராம மக்கள் கூற்றுக்கு மாறாக 2,200 பேர்களது ஒப்புதலின் பேரில்தான் 40 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வங்கி சேமிப்புகளுக்கு பணமும் செலுத்தப்பட்டுள்ளது. உரிமையாளர்களது ஒப்புதலின் பேரிலேயே நிலம் பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்” என்று தேசிய அதிவேக இரயில் நிறுவன செய்தித்தொடர்பாளர் சுஷ்மா கவுர் கூறினார். மேலும்  2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் மீதி நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பட்டாச்சார்யா மற்றும் ஃபெர்னாண்டஸ் இருவரது பீதிக்கும் காரணமில்லாமல் இல்லை. மெட்ரோ திட்டத்திற்காக “2017 முதல் இன்று வரை 1,200 -க்கும் அதிகமான மரங்கள் தெற்கு மும்பையிலிருந்து ஆரேய் (Aarey) காலனிக்கு பிடுங்கி நடப்பட்டன. அவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேல் புதிய இடத்திற்கு போவதற்குள் மடிந்து விட்டன. வேரோடு பெயர்ப்பது, எடுத்து செல்வது மற்றும் மீண்டும் நடுவது போன்ற செயல்கள் முறையாக நடக்காததால் மரங்கள் சில நாட்கள் கூட உயிருடன் இல்லை” என்று பட்டாச்சார்யா கூறினார்.

படிக்க:
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
♦ கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !

மெட்ரோ-3 திட்டத்தின்போது ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களில் மரங்கள் வாடி விடுவதும் ஒன்று. ஆரேயில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான பழங்குடி மக்கள் ஆரேய் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள தங்களது வாழ்வாதாரமான பாரம்பரிய விவசாய நிலங்களை இழந்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக மெட்ரோ-3 (கொலாபா – பந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலம்) திட்டத்திற்காக கார் நிறுத்த கொட்டகை ஒன்றை அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் பசுமை தீர்ப்பாயம், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை போராடி வருகின்றனர்.

மெட்ரோ கார் நிறுத்த கொட்டகைக்கு அருகிலேயே 190 ஏக்கர் நிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்க மும்பை நகராட்சி திட்டம் தீட்டியுள்ளது. அங்கு சபாரி வசதியை ஏற்பாடு செய்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் அழிந்து வரும் விலங்குகளை அங்கு வைத்து பாதுகாக்கவும் திட்டமிட்டு வருகிறது.

திட்டத்திற்கான பரிந்துரை தயாரான மறுகணமே நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மும்பை நகராட்சி தொடங்கியது. உயிரியல் பூங்காவை அமைக்க நகராட்சி ஆணையர் பிரவீன் பரதேசி வனத்துறையுடன் கைகோர்த்திருக்கிறார்.

இந்த முனைப்பான திட்டம் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும் அதன் நேரடியான பாதிப்பு ஆரேய் வனப்பகுதியில் ஏழு கிராமங்களில் வாழ்ந்து வரும் வார்லி சமூகத்திற்கு தான்.

மனிஷா திண்டே தன் தாயாருடன் அவர்களது நிலத்தில் இருக்கும் புகைப்படம். இது போன்ற நூற்றுக்கணக்கான பழங்குடிகளின் நிலங்கள் உயிரியல் பூங்காவுக்காக அரசால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட இருக்கும் ஏழு கிரமங்களில் மனிஷா திண்டேவுடைய மொராஷி கிராமமும் ஒன்று. இப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் பழங்குடிகளை அழித்து, விலங்குகளை பாதுகாக்க இங்கே உயிரியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது என்று அவர் கூறினார். திண்டெவுக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் விளைச்சலை நம்பி 8 பேர் கொண்ட குடும்பம் இருக்கிறது.

”எங்களுக்கு வேறு வருமானம் எதுவும் கிடையாது. ஒருவேளை இந்த அரசு எங்களுக்கு இழப்பீடு கொடுத்தாலும் மாற்றுத் தொழில் எதுவும் எங்களுக்கு கிடையாது. பழங்குடிகளை கட்டாயமாக வெளியேற்றி எந்த வளர்ச்சி திட்டங்களும் இருக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

மக்கள் இயக்கங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் கூட அதிகாரிகளுடைய முடிவுகளை மாற்ற அழுத்தம் கொடுத்திருக்கின்றன. சான்றாக புல்லட் ரெயில் திட்டத்திற்காக 54,000 சதுப்பு நில மரங்கள் வெட்டப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் கூறியிருந்தார். அதற்கு ஒரு வாரம் கழித்து போக்குவரத்து அமைச்சகத்தின் தலையீட்டிற்கு பின்னர் தானே மாவட்ட இரயில் நிலைய வடிவமைப்பு சதுப்பு நிலப்பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு மாற்றப்பட்டதாக தேசிய அதிவேக இரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் அச்சல் காரே தி வயர் பத்திரிகைக்கு கூறினார்.

”இதன் மூலம் 21,000 சதுப்பு நில மரங்களை பாதுகாத்து விட்டோம். 32,044 மரங்கள் மட்டுமே தற்போது வெட்டப்பட உள்ளன” என்று காரே கூறினார். பாதிக்கப்படும் சதுப்பு நில மரம் ஒன்றிற்கு பதிலாக 5 மரங்களுக்கான நிதியை ”சதுப்பு நில செல்” ஒன்றிற்கு ஒதுக்கி அதன் மூலம் புதிய சதுப்பு நில காடுகளை தேசிய அதிவேக இரயில் நிறுவனம் உருவாக்க இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் எண்ணிக்கை குறைந்தாலும்கூட அது ஆபத்தானது. கடந்த காலங்களில் மரங்களை நடுவதில் தோல்வியடைந்த திட்டங்களை பார்க்கும் போதும் புதிய மரங்கள் வளர நீண்ட ஆண்டுகள் பிடிக்கும் என்பதாலும் இந்த திட்டங்கள் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சுற்றுச்சூழலின்பால் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தும்.


கட்டுரையாளர் : Sukanya Shantha
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க