ரசியல் நன்கொடைகள் பெறுவதில் கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆறு தேசிய கட்சிகள் சேர்த்து பெற்ற மொத்த நன்கொடை ரூ. 985. இதில் பாஜக மட்டும் ரூ. 915 கோடியை அதாவது 92.5% நன்கொடையாகப் பெற்றுள்ளது. “ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ” வெளியிட்டுள்ள திறனாய்வு அறிக்கையில் மேற்கண்ட விவரம் தெரியவந்துள்ளது.

ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை கொடுத்தவர்கள் தங்களுடைய பான் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்கிற விதி இருக்கிற நிலையில், பல அரசியல் கட்சிகள் குறிப்பாக கருப்புப் பணத்தை ஒழிக்க களமிறங்கியிருக்கும் பாஜக அத்தகைய விவரங்களை நன்கொடையாளர்களிடமிருந்து பெறவில்லை.

ஜனவரி 2014-ம் ஆண்டு மேற்கண்ட அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2004-05 மற்றும் 2011-12 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் அரசியல் நன்கொடையாக ரூ. 378.89 கோடியைப் பெற்றுள்ளதாகவும் இதில் 87% நன்கொடை தெரிந்த மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் கூறியது.

மற்றொரு அறிக்கையில், 2012-13 மற்றும் 2015-16 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையான ரூ. 956.77 கோடியில் 89% நிதி தெரிந்த மூலங்களிலிருந்து பெற்றதாக கூறியது.

தற்போது வெளியாகியிருக்கும் 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதி ஆண்டுக்கான அறிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளில் 93% தெரிந்த மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.  கார்ப்பரேட்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது 160% உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பாஜக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஆறு தேசிய கட்சிகளின் நன்கொடை விவரங்களை திறனாய்வு செய்துள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு. இதில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் ரூ. 20,000-க்கும் அதிமான நன்கொடை எதையும் பெறவில்லை என தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஆறு கட்சிகளும் ரூ. 20,000-க்கும் மேல் தன்னார்வ பங்களிப்பாக  ரூ. 1059. 25 கோடியைப் பெற்றுள்ளனர். இதில் பாஜக மட்டும் ரூ. 915.59 கோடியை 1731 கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடை பெற்றுள்ளது.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். !

இரண்டாம் இடத்தில் இருக்கும் காங்கிரஸ் ரூ. 55.36 கோடியை 151 நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது. மேற்கண்ட இரண்டு நிதி ஆண்டுகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ரூ. 20,000-க்கும் மேற்பட்ட நிதியை வணிக நிறுவனங்களிடமிருந்து முறையே 94% மற்றும் 81% பெற்றிருக்கின்றன. குறைந்த அளவாக சிபிஐ, 2% மட்டுமே கார்ப்பரேட் நன்கொடையைப் பெற்றுள்ளது.

இந்த திறனாய்வில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காட்டிலும் வளர்ந்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களே அதிக அளவில் நிதியளித்திருப்பது தெரிய வந்துள்ளது. ‘ப்ரூடண்ட் சத்யா எலக்ட்டோரல் டிரஸ்ட்’ என்ற நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் 46 நன்கொடைகள் மூலம் ரூ. 429. 42 கோடியை அளித்துள்ளது. இதில், பாஜக மட்டும் ரூ. 405. 52 கோடியை பெற்றுள்ளது. அடுத்ததாக காங்கிரஸ் 23.90 கோடியை பெற்றுள்ளது.

இரண்டாவதாக அதிக நன்கொடை கொடுத்த பெரு நிறுவனமாக ‘பத்ராம் ஜத்ஹித் ஷாலிகா டிரஸ்ட்’ உள்ளது. ரூ. 41 கோடியை 10 நன்கொடைகள் மூலம் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இந்த நிறுவனம் அளித்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு மேற்கொண்ட திறனாய்வில் ‘தேர்தல் அறக்கட்டளைகள்’ மூலம் இரண்டு நிதி ஆண்டுகளில் அதிகப்படியான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் ரூ. 488. 42 கோடி நிதி தேசிய கட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இவை அல்லாது தெரியாத நிதி மூலங்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. அரசியல் கட்சிகள் பெற்ற 916 நன்கொடைகளின் விவரங்கள் எதையும் அவை அளிக்கவில்லை. 76 நன்கொடைகளுக்கு பான் விவரங்களும் இல்லை. ரூ. 20,000-க்கும் அதிகமான நன்கொடை பெறும்போது பான் விவரம் கட்டாயம் என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. ஆனால், பாஜக பெற்ற நன்கொடைகளில் 98% நன்கொடைகளுக்கு பான் விவரங்கள் இல்லை.

மேலும்,  இணையதளமோ என்ன தொழில் செய்கிறார்கள் என்கிற விவரமோ இல்லாத நிறுவனங்கள் 347 நன்கொடைகள் மூலம் ரூ. 22. 59 கோடியை நிதியாக அளித்துள்ளன.

மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிக அளவிலான நிதி அளிப்பதில் இரண்டாம் இடத்தில் உள்ளன. 2016-17-ம் ஆண்டில் ரூ. 49.94 கோடியை இந்த நிறுவனங்கள் அளித்துள்ளன. 2017-18 -ம் ஆண்டுகளில் உற்பத்தித் துறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய கட்சிகளுக்கு இந்தத் துறையிலிருந்து ரூ. 74.74 கோடி நன்கொடை போயிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள், தேர்தல் ஆணைய விதிகள் உள்ளிட்ட எதையும் அரசியல் கட்சிகள் பொருட்படுத்தவில்லை என்பதை இந்த அமைப்பின் திறனாய்வு சுட்டிக்காட்டுகிறது.  ஆனால், கடைபிடிக்கவோ வலியுறுத்தவோ எதிர்க்கட்சிகள்கூட தயாராக இல்லை.


கலைமதி
நன்றி: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க