புல்வாமா தாக்குதல் குறித்து கேள்வி கேட்ட “தேஷ விரோதிகளைக்” குறி வைத்துத் தாக்குதல் தொடுத்த “தேசத்தை சுத்தம் செய்” (CleanTheNation) என்ற முகநூல் குழுவிற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது சங்க பரிவாரம்.

கடந்த ஜுன் மாதம் 29-ம் தேதியன்று டில்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் விழா ஒன்றில் இந்தக் குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் சங்க பரிவாரக் கும்பலின் ஒரு பிரிவான இந்திரப்பிரஸ்தா விஸ்வ சம்வாத் கேந்திரா (“ஐ.வி.எஸ்.கே”) என்ற அமைப்புதான், “சமூக வலைத்தள பத்ரகாரிதா நரத் சம்மன்” (Social Media Patrakarita Narad Samman) என்ற பெயரில் விருது ஒன்றைக் கொடுத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணைப் பொதுச் செயலர் மன்மோஹன் வைத்தியா ஆகிய இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு “தேசத்தை சுத்தம் செய்” குழுவினரைப் பாராட்டினர்.

அப்படி எவ்வகையில், இந்த ‘தேஷத்தைச்’ சுத்தம் செய்தது இந்தக் குழு? சில மாதங்கள் பின்னோக்கிப் பயணித்தால் இந்தக் குழுவின் தோற்றமும் செயல்பாடும் குறித்துப் புரிந்து கொள்ளலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, மோடி அரசின் ஊதுகுழல்களாக ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தது நாம் அறிந்ததே. புல்வாமா தாக்குதல் குறித்து இயல்பாக எழுந்த பல்வேறு சந்தேகங்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?

கடுமையான பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அவ்வளவு வெடிமருந்தும் எவ்வாறு உள்ளே வந்தது? எப்போதும் தனித்தனியாக இடம் பெயரும் துருப்புகளை ஒரே நேரத்தில் இடம்பெயர உத்தரவிட்டதன் பின்னணி என்ன? மோடி அரசின் பாதுகாப்பு யோக்கியதை இதுதானா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளங்களில் கேட்கப்பட்டன.

இராணுவத்தையும், மோடியின் ஆட்சியின் கீழ் உள்ள இந்த “தேஷத்தையும்” இப்படிப்பட்ட சந்தேகப் பிராணி கயவர்கள் கேள்வி கேட்டால், அது அந்த ஆண்டவனுக்கே அடுக்குமா? தேஷபக்தர்களால் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியுமா ?

அப்படிப் பொங்கி எழுந்தவர்கள்தான் இந்தக் குழுவை உருவாக்கிய அசுதோஷ் வஷிச்தா மற்றும் அங்கிட் ஜெயின். இதில் அங்கிட் ஜெயின் என்பவர் டிவிட்டரில் பிரதமர் மோடியால் பின்தொடரப்படுகிறார்.

புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “தேசத்தை சுத்தம் செய்” முகநூல் குழு. “தேஷ விரோதிகளை சுத்தம் செய்வதையும், களையெடுப்பதையும்” தமது நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது இந்தக் குழு.

இக்குழுவின் மையக்குழு உறுப்பினரான, மாதூர் சிங், இந்தக் குழுவில் ஒரு காணொளியைப் பேசி பதிவு செய்திருக்கிறார். அதில் “உங்களது முகப்புப் படத்தை மாற்றுவதற்கும், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் செல்வதற்குமான நேரம் அல்ல இது. நமது படைவீரர்களைப் பார்த்து நகைப்பவர்களைக் கண்டறியுங்கள். அவர்களுக்கு பணியளிப்பவர்களையும், அவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்களையும் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களை அவர்களது பணியிலிருந்தும் படிப்பிலிருந்தும் வெளியேற்றப்படச் செய்யுங்கள். இப்படித்தான் அவர்களுக்கு புத்தி புகட்ட முடியும்” என்று பேசியிருக்கிறார்.

“மேலும், இத்தகைய ‘தேஷ விரோத சக்திகள்’ குறித்த தனிப்பட்ட விவரங்கள், முகநூலின் மூலமாக எளிமையாகக் கிடைப்பதாகவும், அதன் மூலம் இதுவரை சுமார் 45 ”தேஷ விரோத சக்திகள்” மீது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

இவர்களது இந்த பொன்னான சேவையை கிழக்கு டில்லியின் பாஜக எம்.பியான மஹேஷ் கிரி கடந்த பிப்ரவரி மாதத்தில் பாராட்டியுள்ளார்.

இந்தக் குழுவினருக்கு விருதளித்தது குறித்து “ஐ.வி.எஸ்.கே” அமைப்பின் செயலாளர் வகிஸ் இஸ்ஸார் இந்தியன் எக்ஸ்பிரஸ்-டம் பேசுகையில், “தேசத்தின் மீதான அவர்களது பக்தியைக் கண்டுதான் நாங்கள் இந்த விருதை அளித்தோம். பலரும் இந்த தேசத்தை விரும்புகிறார்கள். ஆனால் சிலர்தான் துடிப்புடன் விரும்புகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்தக் கும்பல், புல்வாமா தாக்குதல் மற்றும் பாலாகோட் தாக்குதல் குறித்து முகநூலில் மோடிக்கு எதிராகப் பேசியவர்களில் சில மாணவர்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளது.

கவுகாத்தியில் பணிபுரிந்த பெண் ஆசிரியர் ஒருவரின் மீது இரண்டு வழக்குகள் தொடுத்து, அவரைப் பணியிலிருந்து துரத்தியடித்தது இந்தக் கும்பல்.

ராஜஸ்தானில், புல்வாமா தாக்குதல் குறித்து வாட்ஸப் ஸ்டேட்டஸ் போட்ட நான்கு காஷ்மீரி மாணவர்கள் மீது, தேசத் துரோக வழக்கு (124A)  தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பது (153B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து அவர்களைக் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்ய வைத்தது.

இது போல இன்னும் பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது இந்தக் கும்பல். ஏவல் நாய்ச் சேவகத்தை செவ்வனே செய்து முடித்த இந்தக் கும்பலைப் பாராட்டி, விருது வழங்கியிருக்கிறது சங்கபரிவாரம்.


நந்தன்

செய்தி ஆதாரம் : தி வயர் 

1 மறுமொழி

  1. எப்படி முட்டுக்கொடுத்தாலும் பொருளாதாரம் வளரப்போவது இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க