மோடி அரசு ஆர்ப்பாட்டமாக அறிவித்த புல்லட் ரயில் திட்டத்தை குஜராத்தின் விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்கள் ஒப்புதல் பெறாமலேயே நிலம் கையகப்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் திட்டத்தால்  பாதிக்கப்பட்ட  1,000 -த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (18.09.2018) அன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

துட்டு ஆதாயம் ஜப்பானுக்கு, செல்பி விளம்பரம் மோடிக்கு, நிலத்தை இழப்பதோ விவசாயிகள்!

தலைமை நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி எம்.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு,  இந்த அதிவேக ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரும் ஐந்து மனுக்களை விசாரித்து வருகிறது.

இந்த மனுக்கள் போக, 1,000 விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தமது வாக்குமூலங்களை சமர்ப்பித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் மைய அரசின் லட்சிய திட்டமான ரூ. 1.10 லட்சம் கோடி புல்லட் ரயில் திட்டத்தை தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். புல்லட் ரயில் பாதை கடந்து செல்லும் இடங்களில், தமது நிலம் பறிக்கப்படுவதை விரும்பவில்லை என்று மனுவில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

புல்லட் ரயில் திட்டத்திற்கு கடன் வழங்குவது ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) ஆகும். ஜப்பான் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்திற்காக நடப்பில் இருக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013, மீறப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனம், செப்டம்பர் 2015 -ல் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டது. இதற்காக குஜராத் அரசாங்கம் 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நீர்த்துப் போக வைத்துவிட்டது. மேலும் ஜப்பான் நிறுவனத்தோடு உள்ள ஒப்பந்த வழிகாட்டுதல்கள் படி கூட குஜராத் அரசு செய்திருக்கும் நிலம் தொடர்பான திருத்தங்கள் பகிரங்கமான மீறலாகும்.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமது அனுமதியோ, ஆலோசனைகளோ கேட்கப்படவில்லை என விவசாயிகள் நீதிமன்றத்தில் கூறினர்.

மாதிரிப் படம்

இந்த திட்டத்தின் பாதிப்பையொட்டி விவசாயிகளின் மறுவாழ்வு, மீள் குடியேற்றம் தொடர்பான எந்த ஒரு மதிப்பீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அரசு நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் எவையும் தமக்கு தெரியாது எனவும் கூறினர்.

இந்த விசாரணையின் போது தனது பதிலை அளிக்க இன்னும் அதிக நேரம் வேண்டும் என மத்திய அரசு கூறியது. இப்படி இழுத்து இழுத்து இறுதியில் எதிர்ப்பை அழிக்க நினைப்பது ஒரு அதிகார வர்க்க உத்தி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு நீதிமன்ற விசாரணைகளெல்லாம் ஒரு கண்துடைப்பே.

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

கடந்த ஐந்து வாரங்களாக மத்திய அரசு நாளைக் கடத்துவதை உயர்நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை என விவசாயிகளது வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இப்படித்தான் மத்திய அரசும் நீதித்துறையும் பரஸ்பர புரிந்துணர்வோடு செயல்படுகின்றன.

“பாதிக்கப்பட்ட 1000 விவசாயிகளும், இந்த திட்டத்தை தடை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மன்றாடி வருகிறார்கள். புதன்கிழமை அன்று தாமதப்படுத்தும் மத்திய அரசின் பிரச்சினையை உச்சநீதிமன்றத்தில் அவசர விசாரணையாக கோருவோம்” எனவும் யாக்னிக் கூறினார். ஆனால் மக்களது அவசரம் ஆட்சியாளர்களுக்கோ நீதிமன்றத்திற்கோ எப்படிக் கேட்கும்?

விவசாயிகலின் வாழ்வை அழிக்க போகும் புல்லட் ரயில் திட்டம்.

புல்லட் ரயில் திட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களோடு தொடர்புடையதால் (குஜராத் மற்றும் மகாராஷ்டிரா) நிலம் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுதான் பொருத்தமான அரசு, என்று விவசாயிகள் தமது மனுவில் குறிப்பிடுகிறார்கள். குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகள் கடந்த ஜூலை மாதத்தில் தாக்கல் செய்த மனுவில் அப்படி தெரிவித்திருக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 26-ன்படி நிலத்தின் சந்தை மதிப்பு தேவைப்பட்டால் திருத்தப்படவேண்டும் என்பதும் இங்கே பின்பற்றப்படவில்லை எனவும் மனுவில் விவசாயிகள் கூறியிருக்கின்றனர்.

குஜராத்தின் 2013-ம் ஆண்டு நிலம் தொடர்பான சட்டத்தை 2016-ல் அரசு திருத்தியது செல்லாது எனவும் அவர்கள் தமது மனுவில் கூறினர். ஒரு திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக நல பாதிப்பில் இருந்து பொது மக்களின் நலனை விலக்குவதை இச்சட்ட திருத்தம் மாநில அரசிற்கு வழங்குகிறது. ஆக நிலம் கையகப்படுத்தும் சட்டம் வைத்திருந்த குறைந்த பட்ச பாதுகாப்பு கூட இங்கே பகிரங்கமாக மீறப்படுகிறது. இதுதான் மோடி கால ஜனநாயகம் வழங்கும் புதிய குடியாட்சி உரிமை.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முகமாக இத்திட்டத்திற்கான அனைத்து நிலங்களும் முறைப்படி பெறப்பட்டு விட்டன, தற்போது வெறும் 17.5 மீட்டர் நிலம் மட்டுமே தேவைப்படுவதால் இப்பிரச்சினை மிகச்சிறிய ஒன்று என குஜராத் மாநில அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்படிப் பார்த்தால் வழக்கு போட்ட ஆயிரம் விவசாயிகளுக்கும் சில பல சென்டி மீட்டர் நிலம் மட்டுமே சொந்தம் போலும்!

இத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி மற்றும் ஜப்பானின் பிரதமர் ஷன்சோ அபே-வால் துவங்கப்பட்டது.

மும்பை – அகமதாபாத் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் பாதையின் நீளம் 500 கி.மீ. இதில் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். புல்லட் ரயிலின் வேகம் 320 – 350 கி.மீ. ஆகும்.

வளர்ச்சியின் பெயரால் நிலம் பிடுங்கப்படும் மக்கள். – எட்டு வழிச்சாலை போராட்டக் காட்சி!

இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலம் சுமார் 1,400 ஹெக்டேர் ஆகும். அதில் 1,120 ஹெக்டேர்கள் அதாவது 2,767 ஏக்கர் நிலங்கள் மக்களுக்கு சொந்தமானவையாகும். அதன் படி சுமார் 6,000 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

புல்லட் ரயில் திட்டத்தினால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, போக்குவரத்திற்கோ எந்த பலனுமில்லை. நீண்ட கால கடன் என்ற முறையில் இதில் ஆதாயம் அடையும் ஜப்பான் தனது புல்லட் ரயிலை தேவையே இல்லாத இந்தியாவை வாங்க வைத்திருக்கிறது. மோடிக்கோ புல்லட் ரயில் கொண்டு வந்த தீரர் எனும் பட்டம் வரலாற்றில் தமக்கு இருக்க வேண்டும் என்பதால் இந்த ஆடம்பர திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.

எட்டுவழிச்சாலையில் தமிழக அரசு என்னென்ன கூறியதோ அவற்றையே குஜராத்திலும் பார்க்கிறோம். பெரும்பான்மை விவசாயிகள் ஏற்றனர், சிலர்தான் ஏற்கவில்லை, பெரும்பான்மை நிலங்கள் சமூகமாக பெறப்பட்டது, ஓரிரண்டுதான் பிரச்சினை, அதிக நட்ட ஈடு கொடுக்கப்படும் என அடித்து விட்டார்களே அவைதான் இங்கும்.

மற்றபடி தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், கட்சியினர் கைது செய்யப்பட்டனர். குஜராத்தில் அப்படி போராட முடியாது என்பதால் மக்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.

வினவு செய்திப் பிரிவு

மேலும் :

1 மறுமொழி

  1. அதானிக்கு அகமதாபாத், அம்பானிக்கு மும்பை. இவர்களுக்காதத்தான் புல்லட்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க