குஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் !

விவசாய நிலங்களைப் பறித்து வீதியில் வீசியெறியப்படுவதற்குப் பதிலாக, இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர், குஜராத் விவசாயிகள்.

குஜராத் மாநிலத்தின் 12  கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 5,259 பேர் குஜராத் அரசின் நிலக் கையப்படுத்தலுக்கு எதிராக போராடி வருகின்றனர். தங்களது விளைநிலங்களை, அரசு மின் நிறுவனமான குஜராத் பவர் கார்ப்பரேசன் நிறுவனமும், குஜராத் அரசும் சேர்ந்து சட்டவிரோதமாகக் கையகப்படுத்த விளைவதைக் கண்டித்து, கிராமத்தினர் அனைவரும் மொத்தமாக மரணிப்பதற்கு அனுமதி கேட்டு ஒருமாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், கோகா தாலுகாவைச் சேர்ந்த 12 கிராமங்களின் வயல்வெளிகளில் இருக்கும் பழுப்பு நிலக்கரியை எடுக்க கடந்த 1993 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் நில கையகப்படுத்துதலை குஜராத் பவர் கார்ப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டது. 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சுமார் 1355 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியது. விளைச்சலற்ற நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 48,000, விளைச்சல் நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 72,000 என அடிமாட்டு விலைக்கு நிலத்தைக் கையகப்படுத்தியது.

சுமார் 23 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கட்டிடங்களுக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறது குஜராத் பவர் கார்ப்பரேசன் நிறுவனம். மீதமுள்ள இடங்களில் இன்றளவும் விவசாயிகள் குடியிருந்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அப்பகுதியிலிருந்து வெளியேறச் சொல்லி மிரட்டுகிறது குஜராத் அரசு.

மேலும், நிலத்திற்கான பணம் கொடுக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகளுக்கு அந்த இடத்தில் உரிமை இல்லை என்றும் கூறியிருக்கிறது. ஆனால் கடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதல்’ சட்டப்படி பொது நோக்கத்திற்காக அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்கள் ஐந்தாண்டுகளுக்குள் பொது நோக்கத்திற்காக முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அந்த நில கையகப்படுத்துதல் செல்லுபடியாகாது.

அவ்வகையில் கையகப்படுத்தி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதனை எதற்கும் உபயோகிக்காமல் விட்டுவிட்டு சட்டப்படி தனக்கு உரிமையில்லாத நிலத்தின் மீது உரிமை கொண்டாடி, விவசாயிகளை போலீசு கொண்டு மிரட்டி வெளியேற்றப் பார்க்கின்றன குஜராத் அரசும், குஜராத் பவர் கார்ப்பரேசன் நிறுவனமும்.

‘நில கையகப்படுத்துதல் சட்டம் 2013’-இன் படி நிலத்தை தங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்றனர் ’படி’ எனும் கிராமத்தைச் சேர்ந்த 93 விவசாயிகள்.

விவசாயிகளின் போராட்டங்களை ஒடுக்க அந்த 12 கிராமங்களிலும் 144 தடையுத்தரவு கடந்த ஒரு மாதமாகப் போடப்பட்டுள்ளது. அதைத் தாண்டி தங்களது வாழ்வுரிமைக்காக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, போலீசைக் கொண்டு தாக்குதலும் தொடுத்திருக்கிறது போலீசு.

இத்தாக்குதல்களை ஒட்டி, பாவ்நகர் ஆட்சியர், குஜராத் முதல்வர், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு அப்பகுதி விவசாயிகள் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நிலத்தையும் விவசாயத்தையும் நம்பி வாழும் தங்களை, நிலத்திலிருந்து விரட்டி விட்டால் சாவதைத் தவிர பிழைப்பதற்கு தங்களுக்கு வேறு வழியில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அக்கடிதத்தில், உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தங்களை, 144 தடையுத்தரவு முதல் கண்ணீர்ப்புகை குண்டு வரை பிரயோகித்து போலீசு வெளியேற்ற முயற்சிக்கிறது என்றும் தங்களை தீவிரவாதிகள் போல பாவிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தரும்படியும் அக்கடிதத்தின் மூலம் தெரிவித்திருக்கின்றனர் விவசாயிகள்.

விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறித்துவிட்டு, ” பழுப்பு நிலக்கரியை எடுத்து கூடுதலாக மின்சாரம் தயாரிப்பதற்கான பொதுநலத்திட்டம் இது. கூடுதலாக வேலைவாய்ப்புகளை வழங்கப் போகும் திட்டம் இது” என்று கூறுகிறார் பாவ்நகர் கலெக்டர்.

நிலம், எரிபொருள், மின்சாரம், வளர்ச்சி என அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் குஜராத் அரசின் பொதுநலத் திட்டங்களைப் பற்றிய மயக்கம் இப்போது யாருக்குமில்லை. ஃபோட்டோஷாப் மென்பொருளின் உதவியில் பா.ஜ.க செட்டப் செய்த வளர்ச்சிதான் அனைவரும் பார்த்த வளர்ச்சி. மோடியின் ஆட்சியில் 13 ஆண்டுகள் குப்பை கொட்டிய விவசாயிகளுக்குத் தெரியாதா என்ன, அது யாருக்கான வளர்ச்சி என்று?

– வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:

Farmers protest against acquisition of land, seek ‘right to die’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க