மக்கள் அதிகாரம் ஜூலை 17 சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக போராடுவோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறு!

தேதி : 13-7-2019

பத்திரிக்கைச் செய்தி

ன்புடையீர், வணக்கம் !

தமிழகத்தில் இன்று அறிவிக்கப்படாத போலீஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. எது ஜனநாயகம்? எது கருத்து சுதந்திரம் என்பதை உளவுப் பிரிவு, கீயூ பிரிவு போலீசுதான் முடிவு செய்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும்  கொலை, கொள்ளையில் ஈடுபடும் கிரிமினல்களைப் போலவே காவல்துறையால் நடத்தப்படுகிறார்கள்.

விழுப்புரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மாணவர்கள் மீது பேருந்துகளை கல்வீசி நொறுக்கியதாக பொய்வழக்கு போட்டு சிறை வைக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் ஸ்டெர்லைட் படுகொலைக்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மாணவர்கள் இருவர் தேசத்துரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டு, பிறகு நிபந்தனை பிணையில் ஒரு மாத காலம் காவல்நிலையத்தில் கையெழுத்திடுகிறார்கள். திரு வைகுண்டத்தில் கல்லூரி வாயிலில் துண்டறிக்கை விநியோகித்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டனர்.

காவிரி நீர் உரிமைக்காக நெய்வேலியில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பலர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு வேறு வழக்கில் கைதான த.வா.க. தலைவர் வேல்முருகன் அவர்களை நெய்வேலியில் போடப்பட்ட தேசதுரோக வழக்கிலும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த பேரா.ஜெயராமன் மற்றும் பலர் மீது எண்ணற்ற வழக்குகள். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும் எண்ணற்ற வழக்குகளை பல ஊர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, ஒரு வழக்கில் கைதானவுடன் அடுத்தடுத்த வழக்குகளுக்கு கைது செய்து, இறுதியில் உபா சட்டத்திலும் சிறைவைக்க முயற்சி நடந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு உதவிய வழக்கறிஞர்ள் மீது நூறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததுடன், தேசியப் பாதுகாப்பு சட்டத்திலும் நிறை வைத்தனர். இது சட்டவிரோதம் என்று மதுரை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் வரவழைத்து கண்டித்தது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்காக  தூத்துக்குடி மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் மீதும் போடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்து அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பின்னரும் தனக்கு அதிகாரமே இல்லாத குநச 107 ஐ தூத்துக்குடி காவல்துறை மக்களுக்கு எதிராகப்  பயன்படுத்தியது. இதையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன் அப்பட்டமாக கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதை விமர்சித்தது. இத்தனை முறை நீதிமன்றத்தால் விமரிசிக்கப்பட்ட பின்னரும் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக காவல்துறை நிறுத்திக்கொள்ளவில்லை.

மே- 22 துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓராண்டுக்குப் பின்னும் நினைவஞ்சலி செலுத்தக்  கூடாது” என்பதற்காக பல ஊர்களில் மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் முதல் நாளே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். “மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எந்த ஊரிலும் அரங்கம் தரக்கூடாது” என்று காவல்துறை தமிழகம் முழுவதும் வாய்வழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பு பெறாமல் ஒரு பொதுக்கூட்டம் கூட நாங்கள் நடத்தமுடியவில்லை.

அரங்கத்தில் கூட்டம் நடத்த சட்டப்படி காவல்துறை அனுமதி தேவையில்லை. ஆனால், மத்திய மாநில அரசுகளை விமரிசித்து அரங்குக் கூட்டம் நடத்த முயன்றால், அரங்க உரிமையாளர்களை காவல்துறை மிரட்டுகிறது.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்களில் ஒரு சாமியானா பந்தல் அமைத்து அங்கே அமர்ந்து பெண்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தடை, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றத் தடை, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஊர்களிலெல்லாம் கிராம சபைக் கூட்டம் ரத்து .. என எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாத ஒரு போலீசு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி மறுத்து காவல்துறை அளித்துள்ள கடிதங்களில் சிலவற்றை இத்துடம் இணைத்திருக்கிறோம். போலீஸ் சட்டம் 30(2) என்பதைக் காட்டி பல கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த சட்டம் அமலில் இருக்கும்  காலங்களில் கூட்டம் நடத்துவதற்கு போலீசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றுதான் அந்த சட்டம் கூறுகிறது. ஆனால் அந்த சட்டம் அமலில் இருந்தாலே அனுமதி மறுக்கலாம் என்று காவல்துறை ஒரு புதிய சட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை – போலீசு ஆட்சிதான் நடக்கிறது என்பதை புரிந்து  கொள்வதற்கு இது ஒரு சான்று மட்டுமே.

கோலார் சுரங்கத்தில் அணுக்கழிவைப் புதைக்கக் கூடாது என்று அங்கே பாஜக, காங் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி அதனைத் தடுத்து விட்டனர். ஆனால், தமிழகத்திலோ, கூடங்குளத்தில் அணுக்கழிவை புதைக்காதே என்று கருத்து சொல்வதற்கே தடை!

படிக்க:
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?
மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுக்கமுடியாது என்று குஜராத்திலும் மகாராட்டிரத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அந்த திட்டமே அங்கே முடக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் பேசுவதற்கே தடை!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். ஆனால் வேண்டாம் ஹைட்ரோ கார்பன் என்று துண்டறிக்கை விநியோகிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் சிறை!

ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான எங்களது சுவரொட்டிகளை போலீசு கிழிக்கிறது. சுவரெழுத்துகளை அழிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜனநாயக உரிமை பறிப்பு என்பதும் சட்டவிரோத போலீசு ஆட்சி என்பதும் தமிழகத்தில் நிறுவனமயமாகிவிட்டது. இதனை நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை. ஜனநாயக உரிமை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பும், அதே மாதிரியான வழக்கில் இன்னொரு நீதிபதி வழங்கும் தீர்ப்பும் முரண்படுகின்றன. ஒரு நிறுவனம் என்ற முறையில் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதாக நீதித்துறை இல்லை. ஒரு வழக்கு உண்மையா பொய்யா, நீதிமன்றக் காவல் தேவையா தேவையில்லையா என்ற பரிசீலனையே இல்லாமல், கைது செய்யப்படும் அனைவரையும் நீதித்துறை நடுவர்கள் ரிமாண்டு செய்கின்றனர்.

இந்த போலீசு ஆட்சியை நாம் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், மக்கள் மன்றத்தில் இயக்கங்களும் அறிவுத்துறையினரும் ஊடகங்களும்  குரல் எழுப்ப வேண்டும், போராட வேண்டுமென்று கோருகிறோம். இத்தகைய போலீசு ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசைக் கண்டித்து நாங்கள் 17.7.2019 அன்று நடத்தவிருக்கும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென்றும்  கோருகிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க