துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜரான வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான தீபிகா சிங் ராஜவத்,  ஜம்முவில் தனக்கு வீடு வாடகைக்குத் தர எவரும் தயாராக இல்லை என்கிறார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவாவில் வெறியர்களால் சித்திரவதை செய்யப்பட்டு,  பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி சிறுமி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.  இந்து காவி வெறியர்களுக்கு பயந்து சிறுமியை படுகொலை செய்த கும்பலுக்கு எதிராக வாதாட வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை.  இந்நிலையில் செயல்பாட்டாளர் தீபிகா சிங் ரஜாவத், இறுதிவரை நீதிக்காக போராட துணை நிற்பதாகக்கூறி வழக்கில் வாதாட முன்வந்தார்.

தீபிகா, கதுவா சிறுமி வழக்கில் ஆஜரானதைத் தொடர்ந்து, காவி வெறி கும்பல் சமூக வலைத்தளங்களில் அவதூறுகளில் இறங்கியது. கொன்றுவிடுவதாகவும் பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாகவும் இந்த கும்பல் நேரடியாக தீபிகாவை மிரட்டியது.  இந்த வழக்கில் ஆஜராகக்கூடாது என காவி கும்பல் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியது.

தீபிகா சிங் ராஜவத்.

காவி வெறி கும்பலின் மிரட்டல் அதிகரிக்கவே, இவருக்கும் இவருடைய ஆறு வயது மகளுக்கும் பாதுகாப்புக்காக காவலர்களை நியமித்தது அப்போதைய மெகபூபா முப்தி அரசு.  பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இருப்பிடத்தையும் வழக்கறிஞருக்கு அரசு வழங்கியது.  இதனிடையே,  கதுவா சிறுமியின் குடும்பம் காவிவெறியர்களின் மிரட்டலுக்கு பயந்து,  தீபிகாவை தங்களுடைய வழக்கிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.  பாஜக துணையுடன் ஆட்சியமைத்திருந்த மெகபூபா முப்தி,  உறவை முறித்துக்கொண்டு பதவி விலகினார்.

மெகபூபா முப்தியின் வாய்மொழி உத்தரவின் கீழ் அரசு இருப்பிடத்தில் வசித்த தீபிகாவை அங்கிருந்து காலி செய்யுமாறு இப்போது அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆளுநர் ஆட்சி நடந்துவரும் நிலையில், அவருடைய மகளுக்கு வழங்கப்பட்டிருந்த போலீசு பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் தந்த நெருக்கடியின் காரணமாக,  ஜம்முவில் வாடகைக்கு வீடு பார்த்துள்ளார் தீபிகா.  ஆனால்,  இவரைப் பற்றி கேள்விப்பட்ட எவரும், காவிகளின் மிரட்டலுக்குப் பயந்து வீடு தர தயாராக இல்லை.  இதனால் தனது ஆறு வயது குழந்தையுடன் வீடில்லாமல் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் தீபிகா.

“அரசு வழங்கிய இல்லத்தில் வசிக்க விரும்பவில்லை.  எங்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதாலேயே இங்கு வந்தேன்.  இப்போது வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறேன்.  ஆனால்,  எல்லோரும் எனக்கு எதிராக இருக்கிறார்கள்.  எவரும் எனக்கு வீடு வாடகைக்குத் தர தயாராக இல்லை.  இதுதான் ஒரு செயல்பாட்டாளரை சமூகம் மதிக்கும் விதமா?” எனக் கேட்கிறார் தீபிகா.

தன்னைப் பற்றி கேள்விப்பட்டதும் வீடு தருகிறேன் என்று சொன்னவர்கள்கூட, தங்களுக்கு பிரச்சினை வரும் என சொல்லி தர மறுக்கிறார்கள் என்கிற தீபிகா, “நான் எங்கே போனேன்?”  எனக் கேட்கிறார்.

தன் மகளின் பாதுகாப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது குறித்து கவலை தெரிவிக்கும் தீபிகா,  ஜம்மு காவல்துறை தனது மகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்பதாகக் கூறுகிறார்.  இதுகுறித்து ஜம்மு போலீசு ஐஜியிடம் த வயர் கேட்டபோது, “அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது” என்கிறார்.  அதுபோல,  தீபிகாவை அரசு அதிகாரிகள் வீட்டை காலிசெய்யச் சொல்லி துன்புறுத்தியதாக எந்த வழக்கும் தங்கள் கவனத்துக்கு வரவில்லை என்கிறார்.  அரசு இல்லங்களுக்கான இயக்குனர்,  தீபிகாவுக்கு வீடு ஒதுக்கியிருப்பதற்கான ஆணை இல்லாதபட்சத்தில் காலி செய்யத்தான் வேண்டும் என்கிறார்.

படிக்க:
கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !

மிகக் கொடூரமான காவிவெறி கொலையாளிகளுக்கு எதிராக நின்ற ஒரே குற்றத்துக்காக பொதுவெளியில் புறக்கணிப்பை சந்தித்ததோடு, அரசு தரப்பிலும் அலைகழிப்புகளை சந்தித்து வருகிறார் தீபிகா. பெரும்பான்மைவாதமும் மதவெறியும் இப்படித்தான் தங்களுக்கு எதிராக நிற்பவர்களை மூச்சுத் திணற வைக்கும்.  இவர்களைத் தூக்கியெறியாவிட்டால் நாளை சுதந்திரமாக மூச்சு விடுவதுகூட பெரும் பிரச்சினையாக மாறும்!


கலைமதி
நன்றி: த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க