பாஜக-வின் தோல்வியை சிறுபான்மையினருக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாமா? கேள்வி பதில்
– ஷாஜகான்.

ன்புள்ள ஷாஜகான்,

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் படி பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சட்டீஸ்கர் ஆகியவற்றில் பாஜக தோல்வி அடைந்திருப்பது முக்கியமானது. இந்த தோல்வியின் அடிப்படை என்ன?

இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிரான கட்சிகள், மக்கள் அனைவரும் இந்தத் தோல்வி குறித்து மகிழ்கின்றனர். ஆனால் இந்த தோல்வி உண்மையிலேயே முற்போக்கு பிரிவினரின் கொள்கையால் கிடைத்த ஒன்றா என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியாவின் மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாவது பெரிய மாநிலமும் மக்கள் தொகையில் ஐந்தாவது பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம். இங்கே கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் வாழ்கின்றனர். 70% அளவுக்கு கல்வியறிவுள்ள இம்மாநிலத்தில் இந்திதான் ஆட்சி மொழி

மாநில மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் கணிசமான அளவுக்கு இருக்கிறார்கள். அதேபோன்று தாழ்த்தப்பட்ட மக்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்கிறார்கள். 2011 சென்சஸ் கணக்குப்படி மத்திய பிரதேச மக்கள் தொகையில் ஆதிவாசி மக்களின் விகிதம் ஏறக்குறைய 21% இருக்கிறது. இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது. இதை எதிர்த்து தலித் மக்கள் நடத்திய போராட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகித்தது.

பொதுவில் பழங்குடி மக்கள் மதம் என்ற அளவில் இந்து மதத்திற்குள் வரமாட்டார்கள். பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாடு பார்ப்பனிய சடங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், இவர்களையெல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்துக்கள் என்ற வகையில் மோசடியாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தை பொருத்தவரை அரசு தந்திருக்கும் புள்ளிவிவரப்படி மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் இந்துக்கள். முஸ்லிம்கள் 6.5% இருக்கின்றனர். மற்ற மதங்கள் சொல்லிக்கொள்ளும் விகிதத்தில் இல்லை.

பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான். மக்கள்தொகையில் ஏழாவது பெரிய மாநிலமும் ஆகும். ஏறக்குறைய ஏழு கோடி மக்கள் வாழும் ராஜஸ்தானில் இந்திதான் அதிகாரபூர்வமான ஆட்சி மொழி. கல்வியறிவு சதவீதம் 66. மக்கள் தொகையில் மதத்தை பொருத்தவரை இந்து மதத்தினர் 88.1 சதவீதம், முஸ்லிம்கள் 9%, சீக்கியர்கள் 1.27 சதவீதம் என வாழ்கின்றனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-ம் ஆண்டில் இருந்து பிரிந்தது சட்டீஸ்கர் மாநிலம். இம்மாநிலத்தில் இரண்டரை கோடி மக்கள் வாழ்கின்றனர். மின்சாரம் மற்றும் இரும்பு உற்பத்தியில் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் சுமார் 50 சதவீத அளவுக்கு இருக்கின்றனர். அவர்களையும் இந்துக்களாக கணக்கில் கொண்டு, 2011 சென்சஸ் கணக்கின் படி இந்துக்கள் 93 சதவீதமும், முஸ்லீம்கள் 2 சதவீதமும், கிறித்தவர்கள் 2 சதவீதமும் வாழ்கின்றனர்.

அடிப்படையில் மூன்று மாநிலங்களும் விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாநிலங்கள்தான். அதாவது மாநில மக்களில் பெரும்பான்மையினர் விவசாய வேலைகளால்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். கனிமவளத்திற்கு பெயர் போன சட்டீஸ்கரில் கூட வேலை வாய்ப்பு என்பது விவசாயத்தில்தான்.

இந்தி மாநிலங்கள் மற்றும் பசு மாநிலங்களின் படுகை என்றழைக்கப்படும் இம்மாநிலங்களில் பண்பாட்டு ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பார்ப்பனியம் வலுவாக இருக்கிறது. அதாவது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பும் அது சார்ந்த சடங்கு, சம்பிரதாயங்கள், தண்டனைகளும் இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. பெண்ணடிமைத்தனம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறை, முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறி போன்றவற்றில் இந்த மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.

இத்தகைய பின்னணியில்தான் பாரதிய ஜனதா இங்கே வலுவாக காலூன்றியிருக்கிறது. இம்மாநிலங்களில் ஆட்சியில் இல்லாத முந்தைய ஆண்டுகளில் கூட பாரதிய ஜனதா இங்கே பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்கிறது. சங்க பரிவாரங்களின் அத்தனை உறுப்புகளும் இங்கே பீடு நடை போட்டு வளர்ந்திருக்கின்றன. 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சி ஏற்ற பின்னர் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் கணிசமான அளவு இந்த மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

மேலும் இங்கே இந்துத்துவ பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக எவரும் அவ்வளவு சுலபமாக பிரச்சாரம் செய்து விட முடியாது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது ராகுல்காந்தி என்ன சொன்னார் நினைவிருக்கிறதா? ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக மக்களை மோடி அரசு ஒடுக்குகிறது என்று அவர் டிவிட்டரில் சொன்னார். அதே ராகுல் காந்தி இந்த தேர்தலின் போது இம்மாநிலங்களில் கோவில்களுக்கு சென்று வந்தார்.  காங்கிரசின் தேர்தல் அறிக்கைகளிலும் சில பார்ப்பனியக் கொள்கைகளை ஆதரிக்கும் வாக்குறுதிகள் உள்ளன.

சட்டீஸ்கரிலும் மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா 15 ஆண்டுகளாக ஆண்டதற்கு பிறகு இங்கே இந்துத்துவா அமைப்புகள் மேலும் வலுவாக இருக்கின்றன. இந்நிலையில் இம் மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றாலும் அதை முற்றிலும் பின்னடைவு என்று கூறிவிட முடியாது

பதிவான வாக்குகளை வைத்துப் பார்த்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 38.8% வாக்குகளை பா.ஜ.க-வும், காங்கிரஸ் கட்சி 39.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. வேறுபாடு மிகவும் சொற்பம். அதே போன்று மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 41.3 ஆகும். காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 41.4. இங்கே கிட்டத்தட்ட இரு கட்சிகளும் ஒரே அளவில்தான் வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தின் பொருத்தவரை பாரதிய ஜனதா 32.9 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.2 சதவீத வாக்குகளையும் பெற்றன.

இதை வைத்து பார்க்கும்போது சத்தீஸ்கர் மாநிலத்தை தவிர ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் காங்கிரசும் கிட்டத்தட்ட சம அளவில்தான் வாக்குகளைப் பெற்று இருக்கின்றன.

கடந்த கால தேர்தல் வரலாறுகளைப் பார்த்தால் ராஜஸ்தானில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் மாறி மாறி வென்றிருக்கின்றனர். அதன்படி பார்த்தால் இப்போது பாரதிய ஜனதாவின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள் என்றும் சொல்லலாம். மத்தியப் பிரதேசத்திலும் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்த பாரதிய ஜனதாவிற்கு எதிரான போக்கு மக்களிடையே இருந்திருக்கும்.

மத்திய பிரதேசத்தில் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டது வெளிப்படை. இரண்டாவதாக மத்திய பிரதேசத்தில் நடந்த விவசாயிகளது போராட்டங்களும் அதை ஒடுக்க மாநில அரசு நடத்திய துப்பாக்கி சூடு வன்முறைகளும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

படிக்க:
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?

வர்க்கம் என்ற அளவில் விவசாயிகள், வணிகர்கள் போன்றோர் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர். தலித் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை அவர்களும் பாஜகவின் மீதான கோபம் ஒரு நிதர்சனம். சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது அம்மக்களிடையே ஒரு எதிர்ப்பை கண்டிப்பாக உருவாக்கியிருக்கும்.

இத்தகைய காரணங்களால் பாஜக இதற்கு முன்னர் வாங்கிய வாக்கு சதவீதத்தை இழந்திருக்கின்றது. அதே நேரம் இந்த எதிர்ப்பு வாக்குகள் அலை அலையாய் காங்கிரசிற்கும் கிடைத்து விடவில்லை. மாற்று ஏதுமில்லை என்பதால் வேறு வழியின்றி மக்கள் காங்கிரசை ஆதரித்திருக்கின்றனர்.

ஆகவே இந்த தேர்தல் முடிவுகளால் பாஜக தோல்வி அடைந்தது என்பதை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.

மேலும் இந்தியத் தேர்தல்களில் சிறுபான்மை மக்கள் தமது எண்ணிக்கையின் படியும் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. இந்துக்களில் ஊரகப்பகுதிகளில் வாழும் விவசாயிகள் பாஜகவை எதிர்ப்பது போல நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர வர்க்கம் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறது.

தேர்தல் முறைகளை தாண்டி பார்ப்பனியம் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்த்த வேண்டும்.

தமிழகம் போல இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை இந்த இந்தி மாநிலங்களில் யாரும் நடத்தி விட முடியாது. அந்த அளவுக்கு மக்கள் பார்ப்பனியத்தால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி என்ற பெயரில் காங்கிரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்தது பாஜக. அதற்கு பின்னர் வந்த உ.பி தேர்தலில் தெளிவாக மதவெறியை பிரச்சாரம் செய்தது. அடுத்த வருடம் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அவர்கள் இப்போதே ராமன் கோவில் என்று பேரணிகளை நடத்த துவங்கியுள்ளனர்.

மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள். மேலும் ஆத்திரத்தில் உள்ள வணிகர்கள், தொழிலாளிகள், விவசாயிகளை தணிப்பதற்கு நிச்சயம் முயல்வார்கள். அதன்படி பார்த்தால் அடுத்த தேர்தலில் பாஜக தோற்றுவிடும் என்று அறுதியிட்டு சொல்லும் நிலைமை இல்லை.

வினவு கேள்வி பதில் மேலும் தேர்தல் முறைகளை தாண்டி வலுவாக இருக்கும் பார்ப்பனியம் என்பது இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்த்த வேண்டும். பொருளாதார அடக்குமுறைகளில் இருந்து திசை திருப்பும் வண்ணமே இங்கு ராமன் கோவில், பசுவதை போன்றவை பேசப்படுகின்றன என்பதையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த போராட்டங்கள் நாடாளுமன்ற – சட்ட மன்றங்களுக்கு வெளியே எவ்வளவு அதிகமாய் நடக்கிறதோ அந்த அளவுக்கு பாஜக தனிமைப்படும்.

ஆகவே இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் வெல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும். இந்தப் பாதையில்தான் சிறுபான்மை மத மக்களும் பாதுகாப்பாக சமத்துவமாக வாழும் நிலை ஏற்படும். இந்தப் பாதையை உடைப்பதுதான் பாஜக-வின் குறி!

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. கேள்வி-பதில் பகுதியை கட்டுரை பகுதியாக மாற்றியிருக்கும் பெருமை கொண்ட ஒரே தளம் உங்கள் இணையதளம்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க