வினவில் ‘ஆட்டோ இலக்கியம்’ பற்றிய வாசகர் புகைப்படஙகளை கோரும் அறிவிப்பு வந்த போதே, மனதில் பல மலரும் நினைவுகள் வந்து போயின.

எங்கள் மதுரையை பொறுத்தவரை நக்கலுக்கும், தமிழுக்கும் பஞ்சமே இருந்ததில்லை.

“பிரசவத்துக்கு இலவசம்” என சென்னை போன்ற நகரஙகளில் எழுதி வந்த காலங்களிலேயே, “கையை நம்பு! கண்ணை நம்பாதே!” (உழைப்பை நம்பு, பெண்கள் பின்னால் சுற்றாதே என கூறுகிறாராம்) என்பது முதல், “சிரித்தால் சிரிப்போம்! முறைத்தால் அடிப்போம்!!” போன்ற டெரர் பீஸ்கள் வரை பலதரப்பட்ட வாகனங்களில், பலதரப்பட்ட வாசகங்கள் அப்போது இருந்தன.

இன்னும், “மாமனாரிடம் காசு வாங்க, உனக்கு கையும் காலும் எதற்கு?” போன்ற வரதட்சணை எதிர்ப்பு வாசகங்கள், “ஆப்பரேசன் செய்யும் போது A,B,AB,O+, – ரத்தம் கேப்பியா? இல்ல ஓன் சாதி ரத்தம் கேப்பியா?” போன்ற சாதி வெறி எதிர்ப்பு வாசகங்கள் என பலவும் இருந்தன.

ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், “என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்” என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.

படிக்க:
போராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம் 1
♦ மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

ஒரு காரின் பின்னே, “என்ன எழுதுறதுன்னு தெரியல” என ஒருவர் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்.

வித்தியாசமானதொரு வாகன வாசகத்தை பார்த்தது, 1997 நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், அது நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்து. நெல்லை கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் அந்தப் பேருந்து முழுவதும் தூசி அப்பிக் கிடந்தது. அந்தப் பேருந்தின் பின் புற கண்ணாடியில், “நாசகர ஸ்டெர்லைட் ஆலையை தகற்போம்! நாடு மீண்டும் அடிமையாவதை தடுப்போம்!!” என அந்த தூசுகளிடையே விரல்களால் யாரோ எழுதி இருந்தார்கள்.

அதெல்லாம், மொபைல்போன்கள் எல்லாம் இல்லாததொரு காலம்…

chennai-auto-rickshaw-advertising-agencies-slider
மாதிரிப்படம்

ஆண்டிராய்டு மொபைல் வந்த பிறகு என்னை ஈர்த்தது ஒரு ஆட்டோ வாசகம்.
அது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் போராடி வந்த காலம், நான் தமுக்கம் சென்று கொண்டு இருக்கிறேன். என் முன்னே செல்லும் ஆட்டோவின் பின்புறம் ஒரு வெள்ளை சார்ட் பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவால் பெரிதாக எழுதப்பட்டு இருந்தது. “தமுக்கம் செல்லும் தாய்மார்க்ளுக்கு இலவசம்” . அதை ஏனோ, அன்று போட்டோ பிடிக்க தோன்றவில்லை. இப்போது வருந்துகிறேன்.

சரி, இப்போது என்ன பிரச்சினை? ஆட்டோ இலக்கியத்திற்காக படமெடுக்கலாம் என மொபலை தூக்கிக் கொண்டு இப்போது கிளம்பினால், ஆட்டோக்களின் பின்புறமெங்கும், பெருவணிக நிறுவனங்களின் விளம்பரங்கள்!

வருத்தங்களுடன்
இரணியன்.