நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து நடக்கும் விவாதங்களும் அதையொட்டிய போராட்டங்களும் அங்குள்ள ஜனநாயகத்தை பறைசாற்றும்.

ஜே.என்.யூ மாணவர்கள் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் வென்றுள்ளன. குறிப்பாக மோடியின் இந்து ராஷ்டிரக் கனவுக்கு எதிராக தொடர்ச்சியாக அவர்கள் குரலெழுப்பி வருகின்றனர். மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் வாலான ஏ.பி.வி.பி.யால் கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் டெபாசிட் கூட பெறமுடியாத அவல நிலையே இன்றும் நீடிக்கிறது. கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் தமது முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் இந்த மாணவர்களின் குரல்வளைகளை நசுக்கி வருகிறது பி.ஜே.பி. இதற்கு துணை நிற்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

jagadeesh kumar jnu
துணைவேந்தர் ஜெகதீஷ் குமார்

அதன் ஒரு பகுதியாக தற்போதுள்ள ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் (JNUSU) என்.சாய் பாலாஜியின் M.Phil மதிப்பீட்டை முடக்கியுள்ளது பல்கலை நிர்வாகம்.

“நான் மோடி அரசுக்கும், சமூக பிரச்சினைக்கும் எதிராக போராடி வருவதால், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் என் M.Phil மதிப்பீட்டை முடக்கியுள்ளார்.” என்கிறார் ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் சாய் பாலாஜி

பாலாஜியின் மேல் ஏற்கனவே இரண்டு புகார்களின் மீதான விசாரணை நடந்து வருவதாகக் கூறியுள்ளது பல்கலை நிர்வாகம். ஒன்று, ஆர்.எஸ்.எஸ்., மோடி, ஜே.என்.யூ. துணை வேந்தர் ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டது.  மற்றொன்று, ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைக் கொண்டாடும் வகையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டது. அடுத்ததாக, பல்கலை நுழைவு தேர்வை, ஆன்லைன் நுழைவு தேர்வாக (Online Entrance Exam) மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்தது இதுதான் பாலாஜி செய்த மாபெரும் குற்றங்கள்.

துணைவேந்தர் மோடி அரசின் கைப்பாவையே!

உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் காவிமயமாக்க வேண்டும் என்பது மோடி அரசின் கனவு. இந்த கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதும், மாணவ அமைப்புகளை தடை செய்வதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

படிக்க:
♦ தில்லி ஜே.என்.யூ-வில் மனுஸ்மிருதி எரிப்பு !
♦ JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !

இதன் ஒரு பகுதியாக, ஆட்சியில் அமர்ந்ததும், சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை; ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலாவை தற்கொலைக்குத் தள்ளியது; கண்ணையா குமார் கைது; உமர் காலித் மீது துப்பாக்கி சூடு என பார்ப்பன பாசிசத்தின் அடக்குமுறை நீண்டு தற்போது ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் பாலாஜியின் படிப்பை முடக்கியுள்ளது. இதற்கு பல்கலை நிர்வாகமும் துணை போகிறது.

இது குறித்து ஜே.என்.யூ. மாணவர் அமைப்பினர் கூறுகையில், “துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். மோடி அரசுடன் இணைந்து பல்கலை நிர்வாகம், மாணவ பிரதிநிதியை ஒடுக்குவதன் மூலம் மற்ற மாணவர்களின் குரல்வளைகளை நசுக்குகிறது” என்றனர்.

“3000 கோடி ரூபாய் செலவில், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ கட்டியது போலவே, ஜே.என்.யூ. வளாகத்தில் விவேகானந்தர் சிலை கட்ட முயற்சித்தார் துணைவேந்தர். நூலகத்திற்காக ஒதுக்கப்பட்ட 8 கோடியை, சிலை கட்ட எடுத்துக்கொண்டு, வெறும் 1.7 கோடி ரூபாயை நூலகத்திற்கென கொடுத்துள்ளது பல்கலை நிர்வாகம். இதுமட்டுமின்றி, கல்வி உதவித்தொகை, 8 மாதங்களாக எந்த மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை. அந்த நிதி அனைத்தும் சிலை கட்ட எடுத்துக்கொண்டது பல்கலை நிர்வாகம்” என்கிறார் மாணவர் சங்க தலைவர் பாலாஜி.

மோடி அரசின் இந்நடவடிக்கையை ஜே.என்.யூ. ஆசிரியர் சங்கம் (JNUTA), “நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் மாணவர்களை குறிவைத்து தாக்குகிறது மோடி அரசும் பல்கலை நிர்வாகமும். மாணவ சங்கத் தலைவர்  பாலாஜியின் மேற்படிப்பை தொடரவிடாமல் முடக்கியுள்ள பல்கலை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்”  என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

ஜே.என்.யூ.வில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும், தனக்கு எதிராக குரலெழுப்புபவர்களை குறிவைத்து தாக்கி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடியின் பார்ப்பன பாசிசம்.

செய்தி ஆதாரம் :
♦ JNU’s Student Union President Says VC is Blocking His MPhil Evaluation
♦ JNU VC M Jagadesh is doing statue politics like PM Modi: JNUSU
♦ JNU teachers referendum against Vice-Chancellor Jagadesh Kumar today
♦ 93% of teachers vote for JNU VC’s resignation

1 மறுமொழி

  1. கல்வி நிறுவங்களில் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் சிகப்பு நிறம் இருக்கலாம் ஆனால் காவி கூடாதா ?
    கல்வி நிறுவங்களில் வெளிநாட்டு கிறிஸ்துவ மதவாதம் இருக்கலாம் ஆனால் காவி கூடாதா ?

    என்னய்யா நியாயம் இது.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க