யிரோடு இருப்பதால்
வாழ்கிறோம்
என்று நீங்கள்
நம்புவது போல

பொங்கல் வைப்பதால்
மகிழ்ச்சியோடு இருக்கிறோம்
என்று,
தயவுசெய்து யாரும்
தப்புக் கணக்கு போட வேண்டாம்.

அன்று
வயல் வெடித்தபோதும்
பொங்கினோம்.
இன்று
புயல் அடித்தபோதும்
பொங்கினோம்.

இழந்ததை நினைத்து
பொங்கினோம்
இப்படியாக வாழ்ந்தோம்
எனும் நினைவுகளையாவது
இழக்காதிருக்க
பொங்கினோம்.

மற்றபடி
அந்த உலை
எங்கள் கண்ணீரில்
கொதித்தது,
மனதில் வெந்தது.
எங்கள்
இன்னலில் வளர்ந்ததால்
கன்னலும்
இனிக்க மறந்தது.

வீட்டுக்குள்
உழைப்பின் உணர்வற்று
கலை இழந்த
கலப்பைகள்.

வாசலில்
பொலிவான
பொங்கல் வாழ்த்து
கோலங்கள்.

பாதச்சேறு படாமல்
மூலையில்
வாடிநிற்கும்
மாடுகள்.
அதன் பார்வைக்கு
பதில் சொல்ல முடியாமல்
வெட்கி தலைகுனியும்
குடும்பங்கள்.

விவசாயம்
எனும் தாய்மையை
காக்க மறந்தவர்கள்
பொங்கல் வாழ்த்து
சொல்லுகிறார்கள்.

விவசாயி
எனும் வர்க்கத்தையே
அழித்தவர்கள்
பொங்கல் பரிசு
தருகிறார்கள்.

பொங்கல் விற்பனை..
பொங்கல் தள்ளுபடி..
பொங்கல் ரிலீஸ்..
பொங்கல் இ.எம்.ஐ….
எங்களை விளம்பரமாக்கி
யார் யாரோ வாழ்கிறார்கள்
எங்களைத் தவிர.

நமக்கு
பொங்கல் பரிசு
கரும்புத் துண்டும்
கைப் பையும்
ஆயிரமும்.

கார்ப்பரேட்டுகளுக்கு
பொங்கல் பரிசு
நமது விளை நிலமும்
மொத்த தமிழகமும்.

அம்மா
அரிசியில் பொங்கினாள்,
அப்பன்
சாராயத்தில் பொங்கினான்,
மகன்
புதுப்பட ரிலீசில்
பொங்கினான்.

ரேசனில் பொங்கியது
ஆயிரம்.
டாஸ்மாக்கில் பொங்கியது
பல்லாயிரம்.

கழனியெங்கும்
கார்ப்பரேட் பொங்குகிறது.
ரஜினி வந்து
கிழித்தது என்ன?
‘தல’ வந்து
தைத்தது என்ன?

ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதில் முதுகெலும்பு ஒடிந்து போன மகன், மருமகள், நான்கு பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் கூலி விவசாயி வேலு

பொட்டல்
சுடுகாடாகும்
காவிரிப் பாசனம்.
கட் – அவுட்டுக்கு
என்னடா பாலாபிசேகம்!
விவசாயிகளுக்காக
பொங்காமல்
வேறென்ன பொங்கல்!

இந்தப் பொங்கலுக்கு
உங்கள் சிறப்பு தள்ளுபடி
விவசாயம் – விவசாயி.

நிலம்
நழுவுகிறது
வேர்
அறுபடுகிறது.
ஊர்
சிதைகிறது.
ஆறு
பாதி புதைத்த
பிணமாக கிடக்கிறது,
கழுத்தை நெறித்தது
போதுமா?
கத்திப் பார்க்கலாம்…
பொங்கலோ! பொங்கல்!

துரை. சண்முகம்


படிக்க:
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக பாடல்