அருண் கார்த்திக்
மோடி அரசு ஏழைகளுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவருவதாக கூறி ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018-இல் கொண்டுவந்தது. இந்த திட்டத்தால் 10 கோடி குடும்பங்கள், அதாவது 50 கோடி மக்கள், பயன்பெறுவார்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் யார் பயன்பெறலாம் என்று இணையத்தில் தேடி பார்த்தால் தெளிவாக இல்லை.

Ayushman Bharathசமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு, 2011-இன் (Socio-Economic Caste Census (SECC), 2011) அடிப்படையில் இந்த திட்டத்துக்கு தகுதியான ஏழைக் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. 10% இட ஒதுக்கீட்டு விசயத்தில் மட்டும் 8 லட்சத்திற்கு குறைவாக வருட வருமானம் இருப்பவர்கள் அனைவரும் ஏழைகள் என்று எளிமையான விளக்கம் தரப்படுகிறது. ஆனால் மருத்துவக் காப்பீட்டுக்கு அவ்வாறு எளிய விளக்கம் இல்லை. இன்னும் கொஞ்சம் இணையத்தில் தேடி பின்வரும் தகவல்களை திரட்ட முடிந்தது. திரட்ட தான் முடிந்தது, பாதி புரியவில்லை பாதி ஞாபகம் இல்லை.

ஒரு குடும்பம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதை தொழில்சார்ந்த அளவுகோல்களை (occupational criteria) வைத்து முடிவு செயகிறார்கள். கிராமபுறத்திற்கும் நகர்புறத்திற்கும் வேறு வேறு அளவுகோல்கள் உள்ளன.
கிராமப்புறதில் தகுதி உடைய குடும்பங்கள்: 16 முதல் 59 வயது வரை உள்ள உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், பெண் குடும்ப தலைவியை கொண்ட 16 முதல் 59 வயது வரை உள்ள ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்கள், SC/ST குடும்பங்கள், சொந்தமாக நிலம் எதுவும் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் குடும்பங்கள்.
இதேபோல் நகர்ப்புறங்களுக்கு பிச்சைக்காரர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என மொத்தம் 11 வகையான தொழில்சார்ந்த அளவுகோல்கள் உள்ளன.

இந்த திட்டத்தில் குடும்பங்களை தேர்வு செய்வதில் இருந்து திட்டத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்வது வரை, இதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் செயல்பாட்டாளர்களின் விமர்சனங்களும் இணையத்தில் கிடைக்கும்.

இந்த கட்டுரை ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியது அல்ல. இந்த திட்டம் வந்தபொழுது ஏற்கனவே இது போன்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மாநில அரசுகள் இந்த திட்டத்துடன் இணைந்து இந்த திட்டத்தில் கிடைக்கும் பயனையும் பெறலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு இணைத்துக்கொண்டால் திட்டத்துக்கு ஆகும் செலவில் 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

படிக்க:
மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !
♦ தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் !

ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகமாவதற்கு முன்னரே தமிழகத்தில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் இருந்தது. இந்த திட்டம் சுமார் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1 முதல் 2 லட்சம் வரை செலவாகும் 1,027 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு தந்து வந்தது. டிசம்பர் 1 முதல் தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பெயரும் தமிழ் நாடு முதல்வர் திட்டம் என்பதில் இருந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதற்க்கேற்ப அட்டைகளில் இருக்கும் புகைப்படங்களும் தமிழக முதல்வரின் படத்தில் இருந்து இந்திய பிரதமர் படத்துக்கு, அதாவது மோடி படத்துக்கு மாறியது.

இந்த மாற்றத்தில் பணம் யார் தருகிறார்கள், பெயரையும் புகழையும் யார் பெறுகிறார்கள் என்பது தான் சூட்சுமமே.

ஜனவரி 12 அன்று வந்த Business Line செய்தித்தாளில் இருந்த செய்தி – “Tamil Nadu tops the claims charts under Ayushman scheme”, அதாவது, ஆயுஷ்மான் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த செய்தியில் வந்த மற்ற தகவல்கள் பின்வருமாறு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விதிகளின்படி பார்த்தால் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் தான் பயனாளர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இருந்த அனைவருக்கும், சுமார் 1.5 கோடி குடும்பங்களுக்கும், இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தமிழக அரசு விரிவு படுத்தியதால் தமிழகத்தில் 1.5 கோடி குடும்பங்கள் பயனாளர்களாக உள்ளனர். இதில், 77 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான நிதியை மட்டும் தான் மத்திய அரசு தரும், அதிலும் 60% மட்டும் தான் தரும், மீதி 40% மாநில அரசு தரவேண்டும்.

மருத்துவமனையில் கத்திருக்கும் மக்கள் (படம் – வினவு)

இதில் இன்னொரு செய்தியும் உண்டு. முன்பு இருந்த முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (United India Insurance) நிறுவனத்துடன் இணைந்து நடத்திவந்தது; ஒப்பந்தப்படி 2 லட்சம் வரை செலவாகும் மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தர வேண்டும். இந்த ஒப்பந்தம் 2022 வரைக்குமான ஒப்பந்தம்.

இப்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்துள்ளதால் காப்பீட்டுத் தொகை 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருப்பதால் 2 லட்சம் வரை மட்டும் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும், அதற்கு மேல் 5 லட்சம் வரை ஆகும் செலவை தமிழக அரசு தான் ஏற்க வேண்டும், அவ்வாறு தான் ஏற்று வருகிறது.

மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்றும் நாம் பார்க்க வேண்டும். சமீபத்தில் சத்தீஸ்கரில் பதவியேற்ற காங்கிரஸ் அரசாங்கம் ஆயுஷ்மான் திட்டத்தில் இருந்து வெளியேற முடிவுசெய்துள்ளது. “மருந்து கொள்முதல், ஆஷா ஊழியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முழு கட்டமைப்பும் இருக்கும்பொழுது நாங்கள் எதற்கு காப்பீட்டு திட்டங்களை நடத்த வேண்டும். அனைவருக்கும் பொதுவான சுகாதார சேவையை வழங்க தேவைப்படும் திறனும் மனிதவளமும் எங்களிடம் உள்ளது” என்று சத்திஸ்கரின் சுகாதாரத்துறை அமைச்சர் TS சிங் தியோ தெரிவித்தார்.

“சுமார் 90 முதல் 95% நோயாளிகளின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ தேவைகளை அரசு அமைப்பு மூலமே நிவர்த்திசெய்துவிடலாம். சத்திஸ்கருக்கு தேவையானது பொதுவான சுகாதார சேவை தான்” என்று அவர் மேலும் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் வேண்டாம் என்று சொல்வதில் சத்தீஸ்கர் ஐந்தாவது மாநிலம்.

மத்திய அரசு ஆயுஷ்மான் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு மாதம் முன்பே ஓதிஸா பிஜு ஸ்வஸ்திய கல்யாண் யோஜனா என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. தெலுங்கானாவும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்கவில்லை. ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகளுக்கு அனுப்பப்படும் கடிதங்களில் மோடியின் படம் இடம்பெறுவதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ ஏற்க மறுத்துவிட்டார். 40% நிதியை மாநில அரசு தருவதால் மாநில அரசுக்கும் கடிதங்களில் இடம் இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் ஆயுஷ்மான் திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டது.

மோடிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2009-இல் தமிழகத்தில் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 ஜூலை 23-ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின்படி 51 நோய்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது. 2011-ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இப்போதும் அமலில் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மத்திய அரசின் திட்டத்துடன் தமிழக அரசு இணைகிறது.

மேலே கூறியது போல, தமிழகத்தில் ஆயுஷ்மான் திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில், 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மத்திய அரசு இன்சூரன்ஸ் கட்டண தொகை செலுத்தும், அதுவும் 60% தான் செலுத்தும், மீதி 40%-யை தமிழக அரசு தான் செலுத்த வேண்டும். மீதம் உள்ள குடும்பங்களுக்கு முழு செலவும் தமிழக அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் மொத்த திட்டத்தையும் செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை திட்டத்தின் பெயரால் மத்திய அரசு தட்டி செல்கிறது.

வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், திட்டத்தில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில் 1 கோடி குடும்பங்களுக்கு தமிழக அரசு தான் இன்சூரன்ஸ் கட்டண தொகையை செலுத்துகிறது. மத்திய அரசு வெறும் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் செலுத்துகிறது. இருந்தாலும், யாருடைய படம் முன்னிலைப்படுத்தப்படுகிறது? மோடியின் படம்! செய்திகள் என்ன சொல்கின்றன? ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்’! தமிழக அரசு செலவு செய்து மத்திய அரசு திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக காட்டுகிறது.

ஸ்டிக்கர் பாய்ஸ் என்று கிண்டல் செய்தொம். மக்கள் கொடுத்த பொருட்களில் அவர்களின் தலைவி ஸ்டிக்கர் ஒட்டினார்கள். இப்போது தமிழக அரசு நிதியில் மத்திய அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது, மோடியின் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. அப்போது அவர்களின் தலைவிக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது யாருக்கு என்று வெளிப்படையாக சொல்லவேண்டியதில்லை.

அதிமுக செய்து வரும் இந்த சேவையை ‘சொந்த கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைப்பது’ என்று கூறலாம்.

அருண் கார்த்திக்

செய்தி ஆதாரம் :
♦ Tamil Nadu tops the claims charts under Ayushman scheme

♦ Chhattisgarh govt to pull out of Ayushman Bharat

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க