உனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்

ப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்திலும் பார்க்க அதிவேகமாக அது ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானைக்காட்டிலும் அது வேகமாக ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.

நீ சிங்கமோ, மானோ, சூரியன் எழும்போது எழு.
ஓடத்தொடங்கு. –  ஓர் ஆப்பிரிக்க பழமொழி.

*****

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
ர் இளம் அமெரிக்கப் பெண் இந்த வருட ஆரம்பத்தில் எங்களுடன் வந்து இரண்டு நாள் தங்கியிருந்தாள். அவளுடைய பெயர் ஜெனிவீவ் என்று இருந்தபடியால் அவளுக்கு ஒரு பிரெஞ்சு மூதாதை இருந்திருக்கக்கூடும். அவளுடைய ஆங்கில உச்சரிப்பும் தேனில் கலந்ததுபோல ஒரு மிருதுத்தன்மையுடன் கேட்பதற்கு சந்தோசத்தை கொடுத்தது. ஒவ்வொரு வார்த்தையையும் நாக்கினால் தடவி விடுவதால் அந்த வார்த்தையில் ஈரப்பசை இருந்தது. அவள் வந்த காரணம் கனடாவை சுற்றிப் பார்ப்பதற்கு. அதற்கு ஒதுக்கிய காலம் இரண்டு நாட்கள்.

இந்தப் பூமியில் மூன்று சமுத்திரங்களால் சூழப்பட்ட ஒரே நாடு கனடா. உலகத்தின் பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசம். நான் இருந்த சிறு பிரதேசமான ஸ்காபரோவையே பத்து நாட்களில் சுற்றிப் பார்க்க முடியாது. ஆனால் இந்தப் பெண் இரண்டு நாட்களில் கனடாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னாள். இவளுடைய விருப்பத்தை அறியாமை என்று எடுப்பதா அல்லது பேராசை என்று எடுப்பதா என்பதில் எனக்கு திண்டாட்டமிருந்தது.

கனடாவை இரண்டு நாளில் சுற்றிப் பார்க்க வந்த பெண் இன்னும் பல அதிசயங்களையும் தன்னுள் வைத்திருந்தாள். காலை பத்து மணிக்கு வருவதாகச் சொன்னவள் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தாள். என்னவென்று கேட்டால் முதல் பிளேனை தவறவிட்டதால் தான் இரண்டாவது பிளேனை பிடித்து வந்ததாக கூறினாள்.

எப்படி முதல் பிளேனை தவற விட்டாள்?

அவள் மராத்தான் ஓட்டப் பயிற்சியில் இருப்பதாகவும், அன்று காலை இருபது மைல்கள் ஓடியதாகவும், தன்னுடைய ஓட்டத்தில் சில குறைபாடுகள் இருந்ததாகவும், பயிற்சியாளர் திருப்தியடையாமல் தனக்கு சில புதுவிதமான பயிற்சிகளுக்கு ஆலோசனை கூறியதாகவும், அதனால் நேரம் தடைபட்டுப் போய் அடுத்த பிளேனை பிடிக்கவேண்டி வந்ததாகவும் மிகவும் சாதாரணமாகக் கூறினாள். அவளுடைய வாசகமும் ஒரு மராத்தான்போல நீண்டுபோய் கிடந்தது. எந்தப் போட்டிக்கு தயார்ப் படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 2008 ஒலிம்பிக் மராத்தான் என்றாள்.

நான் மனைவியைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். இந்தப் பெண் மராத்தான் ஓட்டப் பயிற்சியில் இருப்பது எனக்கோ, மனைவிக்கோ தெரியாது. இவளுடைய பெற்றோர்களும் இதுபற்றி ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லவில்லை. கனடா பார்க்க வந்த ஒரு சாதாரணப் பெண் என்று நாங்கள் அதுவரை நினைத்திருந்தோம். இவளின் உருவத்தைப் பார்த்தால் ஒரு ஓட்ட வீராங்கனை போலவோ, அன்று காலை இருபது மைல் தூரத்தை கடந்தவள் போலவோ தெரியவில்லை. சந்திர வெளிச்சம் போன்ற சருமம், சாம்பல் முடி, நீலக் கண்கள். இடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ். ஐந்து அடி உயரம், எடை 90 றாத்தல் மதிக்கலாம். ஒரேயொரு வித்தியாசம். மூன்றடி தூரத்திலும் அவள் உடம்பிலிருந்து ஒரு வெப்பம் வீசியது.

எனக்கு ஒலிம்பிக் ஓட்டக்காரர் எப்படி இருக்கவேண்டும் என்பது தெரியாது. நான் என் வாழ்நாளில் ஒருவரைக்கூட நேருக்குநேர் கண்டதில்லை. அப்படிக் கண்டாலும் அது தொலைக்காட்சியில்தான். சரி. ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெறுபவர் எப்படி இருப்பார். அதுவும் தெரியாது. கடைசியாக ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 929 பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் அமெரிக்காவுக்கு 103 பதக்கங்கள், கனடாவுக்கு 12, இந்தியாவுக்கு ஒன்றே ஒன்று கிடைத்தது. இலங்கைக்கு அதுவும் இல்லை. இந்த வெட்கம்கெட்ட நிலைமையில் நான் ஓர் ஒலிம்பிக் ஓட்டக்காரர் நேரில் எப்படி தோற்றமளிப்பார் என்பதை ஊகிக்கமுடியும்.

என் வாழ்க்கையில் எனக்கு தெரிந்த ஒரேயொரு ஓட்டக்காரர் ஆறுமுகதாஸ்தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்தை சேர்ந்தவர். அங்கே ரயிலுக்காக ஓடியவர்களும், நாய் துரத்தி ஓடியவர்களும்தான் அதிகம். இந்த ஆறுமுகதாஸ் எங்கள் பள்ளிக்கூடத்தில் புகழ்பெற்ற  மைல் ஓட்டக்காரர். அந்தக் காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இவரை வெல்ல ஆள் இல்லை. எங்கள் பள்ளிக்கூட மைதானத்தை சுற்றி எட்டுத்தரம் ஓடினால் ஒரு மைல் என்பது கணக்கு. இதை தலைமை ஆசிரியர் அறிவித்திருந்தார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

ஓட்டம் தொடங்கியதும் ஆறுமுகதாஸ் ஆற அமரப் புறப்படுவார். மற்றவர்கள் அடித்துப் பிடித்து முன்னே செல்வார்கள். ஆறுமுகதாஸோ, இலையான் ஓட்ட மாடு தலையை ஆட்டுவதுபோல இரண்டு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு, கடைசியாக வருவதற்கு பயிற்சி எடுத்தவர்போல முகத்தை ஆர்வமில்லாமல் வைத்துக்கொண்டே ஓடுவார். எல்லோரையும் முன்னால் விட்டு தனக்கு பின்னால் யாரும் வராமல் பார்த்துக்கொள்வார். ஏழாவது சுற்று முடிந்ததும் மனுசன் அம்புபோல புறப்படுவார். ஒவ்வொருவராக தாண்டி முன்னேறி வருவார். முதலாவதாக ஓடுபவரை ஒரு டிராமா காட்டுவதற்காக கடைசி பத்து செக்கண்டில் முந்தி வெற்றியீட்டுவார். சனங்களின் ஆரவாரம் அப்போது செவ்வாய் கிரகத்தை எட்டும்.

நான் பிற்காலத்தில் ஆறுமுகதாஸிடம் அவருடைய வெற்றியின் ரகசியத்தைக் கேட்டேன். அவர் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்தார். கடற்கரை மணலில் தான் கால் புதையப் புதைய ஓடிப் பயிற்சி எடுத்ததைச் சொன்னார். போட்டியில் ஒரு மைல் ஓடவேண்டுமென்றால் இரண்டு மைல் தூரம் ஓடிப் பழகவேண்டும். பத்து மைல் என்றால் இருபது. இதுதான் ரகசியம் என்றார்.

ஜெனிவீவைப் பார்த்தேன். அவள் அப்படி ஒடிப் பயிற்சி செய்பவளாகத் தெரியவில்லை. ஏதோ அலுவலகம் போவதற்கு வெளிக்கிட்டதுபோல உடையணிந்திருந்தாள். மேக்கப் என்பதே கிடையாது, ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கிருந்து யாரோ வெளிச்சம் அடிப்பதுபோல பிரகாசமாக இருந்தது. நான் மராத்தான் ஓட்டத்தைப் பற்றியும், அதன் பயிற்சி முறையயைப் பற்றியும், ஓட்டக்காரர்களைப் பற்றியும் அன்றுவரை அறிந்து வைத்திருந்ததெல்லாம் தவறானது என்பது அந்தப் பெண்ணிடம் பேசிய முதல் மூன்று நிமிடத்திலேயே எனக்கு புரிந்துவிட்டது.

மராத்தான் ஓட்டம் என்பது 26.2 மைல்கள் தூரம் கொண்டது. இந்தப் பெயர் வந்ததற்கு உண்மையான சரித்திர காரணம் உள்ளது. கி.மு 490-ல் மராத்தான் என்ற இடத்தில் கிரேக்கர்களின் படை பாரசீகப் பெரும்படையை போரிலே தோற்கடித்தது. அந்த வெற்றியை சொல்வதற்கு ஃபெய்டிப்பிடீஸ் என்ற வீரன் 26.2 மைல் தூரத்தை நிற்காமல் ஓடி ஏதென்ஸ் நகரத்தை அடைந்து ‘நாங்கள் வென்றுவிட்டோம், கொண்டாடுங்கள்’ என்று தகவல் சொல்லிவிட்டு அப்படியே சரிந்தான். அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அவன் மட்டும் உயிரோடு இருக்கவில்லை.

ஒலிம்பிக் விளையாட்டுகள் 1896-ல் ஆரம்பித்தபோது மராத்தான் ஓட்டமும் சேர்க்கப்பட்டது. 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் பெண்கள் மராத்தான் போட்டியில் கலந்துகொண்ட 82 பேரில் மூன்று அமெரிக்கப் பெண்கள். உலகத்தின் அதிவேக ஓட்டக்காரியான போலா ராட்கிளிவ் முதலாவதாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால் அவர் 23-வது மைலில் போட்டியில் இருந்து விலகி பாதையின் ஓரத்தில் அமர்ந்து விக்கி விக்கி அழுததை உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்த்து திகைத்தது. அந்தப் போட்டியில் முதலாவதாக வந்து தங்கம் வென்றவர் யப்பானியப் பெண் மிசுகி நோகுச்சி. இரண்டாவது கென்யாவின்  காதரின் ண்டெரேபா, மூன்றவது அமெரிக்கப் பெண் டீனா காஸ்டர்.

ஓட்ட வீராங்கனை என்றால் அவர் உயரமாகவும், நீண்ட கால்கள் கொண்டவருமாக அல்லவா இருக்கவேண்டும் என்று ஜெனிவீவிடம் கேட்டேன். அப்படி இல்லை என்றார். மராத்தான் ஓட்டத்துக்கு எடை கூடாமலும், உயரம் குறைவாகவும் இருந்தால் நல்லது. உதாரணம் தங்கம் வென்ற யப்பானிய வீராங்கனையின் உயரம் ஐந்து அடி, எடை 88 றாத்தல் என்றார்.

அவர் சொன்ன விவரங்களைக் கேட்க கேட்க நான் இதுவரை ஓட்டக்காரர்களை பற்றி தெரிந்து வைத்தது எல்லாம் அபத்தம் என்று பட்டது. ஜெனிவீவ் தன் சொந்தச் செலவிலே, ஒரு மராத்தான் ஓட்டப் பயிற்சியாளரிடம், பயிற்சி பெறுகிறார். இவருடைய பயிற்சி திருப்தியாக முடியும் பட்சத்தில் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களுக்கு நடக்கும் இறுதி பயிற்சிக்கு இவர் தேர்வு செய்யப்படுவார். அங்கே இவருடன் சேர்ந்து அமெரிக்கா முழுவதிலுமிருந்து ஒரு 300 பேர் வந்திருப்பார்கள். ஆறுமாத காலம் இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சி வகுப்பு நடக்கும். முன்னாள் ஒலிம்பிக் ஓட்டக்காரர்களும், அமெரிக்காவின் மிகச் சிறந்த பயிற்சியாளர்களும் இந்த பயிற்சியை கொடுப்பார்கள். இது இலவசம் அல்ல. ஓட்டக்காரர்கள் தாங்களே பணம் கட்டவேண்டும் அல்லது அவர்களை ஸ்பொன்சர் செய்யும் கம்பனிகள் செலவை ஏற்கவேண்டும். ஆறுமாத முடிவில் ஒரு போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று ஓட்டக்காரர்களே ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் சார்பில் கலந்துகொள்வார்கள்.

மிசுகி நோகுச்சி

அவளுடைய பயிற்சி முறைகள் எப்படியானவை என்று கேட்டேன்.

‘நான் படித்த பள்ளிக்கூடத்துப் போட்டிகளில் ஓடும்போது எனக்கு இப்படி பயிற்சிகள் இருப்பது தெரியாது. என் போக்குக்கு ஓடுவேன். என் மனதுக்கு தோன்றிய பயிற்சிகளை செய்வேன். ஆனால் ஒரு பயிற்சியாளரிடம் சேர்ந்த பிறகுதான் நான் செய்ததெல்லாம் தவறானவை என்பது தெரிகிறது. நான் கடைப்பிடித்த பயிற்சி முறைக்கும், பயிற்சியாளர் தரும் பயிற்சிமுறைக்கும் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன.’

 எப்படியான வித்தியாசங்கள்?

முதலாவது விதி : நான் இங்கே கற்றுக்கொண்டது என்னுடைய உடல் பற்றி. உங்களிடம் இருப்பது ஒரேயொரு உடம்புதான். இதைப் பத்திரமாக பேணவேண்டும். பயிற்சியின்போது உடம்பிலே காயமோ, அடியோ படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கால்களில் சுளுக்கு வராமலும், மூட்டுகள் பிசகாமலும், தசைநார்கள் விலகாமலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் வருடக்கணக்கான தேகப் பயிற்சியும், உழைப்பும், அர்ப்பணமும் வீணாகப்போய்விடும்.

இரண்டாவது விதி : நான் நினைத்தது 26 மைல்தூரம் ஓடவேண்டுமானால் அதனிலும் கூடியதூரம் ஓடிப் பழகவேண்டும் என்று. ஒரு முப்பது மைலோ முப்பத்தைந்து மைலோ ஓடிப் பழகினால் போட்டியின்போது 26 மைல் ஓடுவது சுலபமாக இருக்கும். ஆனால் அப்படி இல்லை. இன்னும் சொல்லப்போனால் பயிற்சி காலத்தில் ஒருநாள்கூட 26 மைல் நான் ஓடியதில்லை. ஓடக்கூடாது. ஆக முதன்முதல் 26 மைல் ஓடுவது இறுதி நாள் போட்டியின்போதுதான்.

ஆச்சரியமாயிருந்தது. நான் எங்கள் ஊர் ஆறுமுகதாசை நினைத்துக்கொண்டேன்.

முழுத்தூரமும் ஓடாமல் எப்படி ஓட்டக்காரருக்கு நம்பிக்கை பிறக்கும்?

மராத்தான் பயிற்சி என்பது ஓடுவது மட்டுமல்ல. எப்படி உடம்பை பலப்படுத்துவது; பாதுகாப்பது; தயார்ப்படுத்துவது என்று எல்லாம் அடங்கியது. ஓட்டப்பயிற்சி என்பது இதற்குப் பிறகுதான். இந்தப் பயிற்சியில் முக்கியமானது உடம்பை ஏய்ப்பது. ஒருநாள் செய்த பயிற்சிகளை இரண்டாவது நாள் செய்வதில்லை. அப்பியாசம், ஓட்டம், நடை, நீச்சல், சைக்கிள் என்று மாறி மாறி பயிற்சி எடுப்பதுடன் பயிற்சி அளவையும் கூட்டிக்கொண்டே போகவேண்டும். நீங்கள் அடுத்த நாள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது உடம்புக்கு தெரியக்கூடாது. ஒவ்வொரு நாளும் 10 மைல் ஓடினால் உடம்பு அதற்குப் பழகி தன்னுடைய உச்சக்கட்ட ஒத்துழைப்பை தர மறுக்கும். உடம்பின் வலிமையையும், சேமிப்பு சக்தியையும் கூட்டிக்கொண்டே போவதுதான் உண்மையான பயிற்சி. போட்டி நாளுக்கு முதல் நாள் உடம்புக்கு முழு ஓய்வு தேவை.

அப்படி என்றால் போட்டியன்று உடம்பு தயாராயிருக்குமா?

போட்டி நாள் அன்று உங்கள் உடம்புக்குள் ஒரு மிருகம் புகுந்ததுபோல தேகம் துடித்தபடியே இருக்கும். சேமித்துவைத்த சக்தி அத்தனையும் வெளியேறத் துடிக்கும். ஒரு ரேஸ் குதிரை ஓடத் தயாராவதுபோல கால்கள் பரபரக்கும். அன்றுதான் நீங்கள் மராத்தான் ஓட்டத்தில் முதன்முதலாக முழுமையான 26.2 மைல்களை ஓடி முடிப்பீர்கள்.

களைப்பு வராதா?

எப்படி வரும். ஆறுமாதகால பயிற்சி அதற்குத்தானே. இந்தப் பயிற்சி இருந்திருந்தால் கிரேக்கவீரன் ஃபெய்டிப்பிடீஸ் பாவம் விழுந்து இறந்திருக்கமாட்டானே.

ஒரு பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கிடையில் கனடாவில் எவ்வளவு பகுதியைக் காட்டமுடியுமோ அவ்வளவையும் காட்டினோம். கடைசி நாள் இரவு இவளை யாழ்ப்பாணத்து அப்பம் சாப்பிடுவதற்கு ஒரு உணவகத்துக்கு கூட்டிப் போக முடிவெடுத்தோம். இங்கே சுடும் அப்பத்துக்கு நிகரே இல்லை. நாக்கிலே வைத்தால் பல்லுக்கு ஒரு வேலையும் வைக்காமல் தானாகவே உருகி இறங்கிவிடும். இலங்கை சாப்பாடு பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் அவளிடம் உருவாகும். அதுவும் நல்லது.

ஒலிம்பிக் பதக்கத்தை பெறும்போது அவள் உடம்பின் வலிமையில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்து அப்பத்தால் உருவாகியது என்று நான் பிறகு பீற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த உணவகத்தில் ஒருசில ஆபத்துக்கள் இருந்தன. குறைந்த பட்சம் நாலு வாடிக்கையாளர்கள் வந்து போனபிறகுதான் மேசையை துடைப்பார்கள். மெனுவிலே குறிப்பிட்டிருக்கும் விலையும், பில்லிலே காணப்படும் விலையும் ஒருபோதும் இணையாது. இங்கே வேலைசெய்யும் பரிசாரகர்கள் கோப்பையை மேசையில் கொண்டுவந்து வைப்பதில்லை. அப்படியே தூரத்திலிருந்து தள்ளிவிடுவார்கள்.

பரிசாரகர் வணக்கம் என்றார். அவருடைய தலை தோள் மூட்டுகளுக்குள் மாட்டுப்பட்டு இருந்ததால் குரல் எங்கேயிருந்து வருகிறதென்று தெரியவில்லை. ஆனாலும் அவர் எங்களை ஆச்சரியப் படுத்தவில்லை; இந்தப் பெண்தான் ஆச்சரியப்படுத்தினாள். உணவுக்கு ஓடர் பண்ணி அப்பம் சுடச்சுட வந்துகொண்டே இருந்தது. எனக்கு முன் சாப்பிட்டவர் என்னுடைய பிளேட்டில் நண்டு சாப்பிட்டிருக்க வேண்டும். இவள் இடம், வலம் பார்க்கவில்லை. சாப்பிட்டுக்கொண்டே இருந்தாள். நானும் மனைவியும் சேர்ந்து உண்டதிலும் பார்க்க இரண்டுமடங்கு அதிகமாகவே சாப்பிட்டாள். ஒரு மராத்தான் ஓடியதுபோல பரிசாரகர்தான் களைத்துப்போனார். இந்தச் சிறிய பெண்ணின் உடம்பில் எங்கே இது போய்ச் சேருகிறது என்று நாங்கள் வியப்படைந்தோம்.

ஓட்டக்காரர்கள் அளவாகச் சாப்பிடவேண்டுமல்லவா? அல்லாவிட்டால் அவர்களுடைய எடை எக்கச்சக்கமாக ஏறி ஓடமுடியாமல் போய்விடுமே.

ஆனால் உண்மை எதிர்திசையில் இருந்தது. மராத்தான் ஓட்டக்காரர்கள் எல்லோருக்குமே உள்ள பெரும் பிரச்சினை உணவுதான். ஒரு சராசரி மனிதனுக்கு நாளுக்கு 2000 கலரி தேவை என்றால் ஒரு மராத்தான் ஓட்டக்காரர்  4000 –  5000 கலரி உணவை தினம் சாப்பிடவேண்டும். இதை எப்படி உண்பது. இந்த அளவு கலரி கொடுக்காவிட்டால் உடம்பு பயிற்சியை தாங்கமுடியாமல் நலிந்து போய்விடும்.

இவள் நாள் தவறாமல் இரவு எட்டுமணிக்கு தூங்கப் போய்விடுவாள். தினமும் அதிகாலை சூரியன் உதயமாகும்போது எழும்புவாள். ஒரு ஆப்பிரிக்க மான்போல ஓடத்தொடங்குவாள். இரண்டு மணிநேரம் பலதரப்பட்ட உடல் பயிற்சி செய்வாள். வாரத்தில் ஆறு நாட்கள் இந்த அப்பியாசம் தொடரும். ஏழாவது நாள் ஓய்வு. ஓய்வு என்றால் உடம்புக்கு மாத்திரமே. நாள் முழுக்க பழைய ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களை வீடியோவில் பார்ப்பாள். சொல்லப்போனால் பயிற்சிக் காலம் முழுக்க உடம்பும், மனதும் மராத்தான் ஓட்டத்திலேயே குவிந்திருக்கும்.

‘ஓடு, மணிக்கூட்டுக்கு எதிராக ஓடாதே. உனக்கு எதிராக ஓடு.’

‘என்னுடைய பயிற்சியாளர் கருணையே இல்லாதவர். இவரை ‘அடிமை விரட்டி’ என்று ரகஸ்யமாக எங்களுக்குள் அழைப்போம். ஓய்வு என்பது களைப்படைந்த பிறகு எடுப்பது. அதற்கு முன் எடுப்பதற்கு பெயர் சோம்பல் என்பார். எங்களுடைய உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் வாடகைக்கு எடுத்தவர்போல அதிகாரம் செய்வார். ஆனால் என்னால் அவரை விட முடியாது. அமெரிக்காவின் மிகத்திறமையான பயிற்சிக்காரர். ‘ஓடு, மணிக்கூட்டுக்கு எதிராக ஓடாதே. உனக்கு எதிராக ஓடு.’ இதுதான் அவர் திருப்பி திருப்பி சொல்லும் மந்திரம்.’

கடந்த ஒலிம்பிக் மரதனில் தங்கம் வென்ற யப்பானியப் பெண்ணின் நேரம் 2ம, 26நி, 20செ. ஓடிய பெண்களில் குறைந்த வயது 21, கூடியது 43. அடுத்த ஒலிம்பிக்கின்போது தனக்கு 26 வயது நடக்கும் என்றும் அது தவறினால் 30ல் ஒரு வாய்ப்பு இருக்கிறதென்றும் அதுவும் தவறினால் 34 என்றும் சொன்னாள். அதற்கு பிறகு யாராவது அகப்பட்டால் மணம் முடிப்பதற்கு சம்மதம் என்றாள். அவள் முகத்திலே காணப்பட்ட உறுதி என்னை வியக்க வைத்தது.

இந்தப் பெண்ணைப் பார்க்க சிலசமயம் பரிதாபமாக இருந்தது. ஒரு வெள்ளை ரீ சேர்ட்டும், கணுக்கால் தெரியும் கால்சட்டையும் அணிந்திருந்தாள். நீர்ப்பறவை ஒன்று நீண்ட பயணத்துக்கு பிறகு செட்டைகளை ஒடுக்கி ஓய்வெடுப்பதுபோல தோள்களைக் குறுக்கிக்கொண்டு தரையிலே உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளிலே ‘தென் அமெரிக்க ஸ்லொத்’ என்ற புத்தகம் இருந்தது. உலகத்திலேயே மெதுவாக நகரும் ஒரு மிருகத்தைப் பற்றி இவள் படிக்கிறாள். ஒரு நிமிட நேரத்தில் ஐந்து அடி நகரும் இந்த விலங்குக்கும், மராத்தான் ஓடும் இவளுக்கும்  என்ன சம்பந்தம் என்று நினைத்தபோது வியப்பாகவிருந்தது. இவள் கண்கள் புத்தகத்தில் இல்லை; எதிரில் இருந்த ஒன்றையும் கவனிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் இருந்தன என்றே நினைக்கிறேன்.

நீங்கள் எதற்காக உடம்பை இவ்வளவு வருத்திப், பிழிந்து இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும்?  உங்கள் பொழுதுபோக்குக்கு வேறு ஏதாவது  தேர்வு செய்து சேவை செய்யலாமே?

இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்துவிட்டது. ஒரு முட்டாளிடம் இத்தனை நாள் தன் அபிலாட்சைகளை சொல்லியதற்காக  அவள் வருத்தப்பட்டாளோ, என்னவோ. ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பினாள். அப்பொழுதும் அவள் கண்கள் என்ன உணர்ச்சியை காட்டலாம் என்று முடிவெடுக்க முடியாமல் அங்குமிங்கும் சுழன்றன. கடைசியில் ஒருவாறு நிதானித்து ஒவ்வொரு வார்த்தையாக தேர்வு செய்து பேசினாள்.

‘ஜவலின் எறிபவர்கள், நீச்சல் வீரர்கள், எடை தூக்குபவர்கள், இவர்கள் எல்லாம் தினம் தினம் தங்களை வருத்தி பயிற்சி எடுக்கிறார்கள். போட்டிகளில் பங்குபற்றுகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள். மனித உடம்பை அறிவதுதான் நோக்கம். உடலின் எல்லையை கண்டுபிடிப்பது. அதை சிறிது நீட்டுவது. இதுவும் ஒரு சேவைதான். அடுத்தவருக்கு.’

அவள் முகம் சிவந்துபோய் இருந்தது. என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

விமான நிலையத்தில் மனைவியிடம் பேசியபடியே இருந்தாள்.  கம்புயூட்டர் திரையில் அறிவிப்பு விழுந்ததும் விடை பெற்றுக்கொண்டாள். என்னைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தந்தாள். அடுத்தநாள் காலை முத்தமிடுவதை அரசாங்கம் தடைசெய்துவிடும் என்பதுபோல அது நீண்டதாக இருந்தது. பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். பேசவில்லை. பயணிகளின் சோதனைக் கூடத்தை தாண்டியதும், தோளிலே மாட்டிய ஒரு நீண்டவார் கைப்பையை சரிசெய்தபடி, ஒரு துள்ளுத் துள்ளி ஓடினாள். அப்போதும் பிடரியை வளைத்துப் பார்த்து கையசைக்க மறக்கவில்லை.

2008 ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 202 நாடுகள் பங்குபற்றும். பெண்களுக்கான மராத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் 80 – 90 ஓட்டக்காரர்களில் மூன்று அமெரிக்கப் பெண்கள் இருப்பார்கள். அவர்களில் சாம்பல்முடி, நீலக்கண்கள், ஐந்தடி உயரம், 90 றாத்தல் எடைகொண்ட ஒரு பெண்ணும் இருக்கலாம்; இருக்காமலும் போகலாம். போட்டி முடிவு அறிவித்ததும் மேடை ஏறிய ஒரு பெண் தன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு, ஒரு கையால் அதைத் தூக்கிக் காட்டியபடி மறுகையை அசைத்து சுழலுவாள்.

அந்தக் கணம் அவளை கோடி சனங்கள் உலகம் முழுவதும் தொலைக்காட்சி திரைகளில் கண்டு களிப்பார்கள். அவளுடைய சாதனைக்கான சக்தியை அவள் தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் கசக்கி, வருத்தி, உறிஞ்சிப் பறித்திருப்பாள். அவள் கடந்துவந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)