கனடாவின் புதிய குடியேற்றக் கொள்கை:
உள்நாட்டு நெருக்கடியை மறைப்பதற்காக இந்திய மாணவர்களை பலிகடா ஆக்கும் ட்ரூடோ அரசு!
கனடாவில் பிரின்ஸ் எட்வர்டு தீவு மாகாணத்தில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்பாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் அந்நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “குடியேற்றக் கொள்கை”க்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்டாரியோ, மனிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கனட அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது, தங்களது வளமான எதிர்காலத்தை நோக்கி கனடாவில் குடியேறியுள்ள 70,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கமானது கனடாவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அப்போது கனடாவில் பணியில் இருந்த 90 இலட்சம் பணியாளர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறும் நிலையில் இருந்தனர். மேலும், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் கனட அரசாங்கமானது, தொழிலாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக வெளிநாட்டு மாணவர்களுக்குக் குறுகிய கால அடிப்படையில் வேலை செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாக அறிவித்தது. மேலும், இது நிரந்தர குடியுரிமைக்கு வழிவகுக்கும் என்றும் உத்தரவாதமளித்தது.
அதன்படி, கனடாவில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு படித்து முடித்த பிறகு மூன்று ஆண்டுகள் தற்காலிகமாக அங்கு வேலை செய்வதற்கான பணி அனுமதி வழங்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மாணவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது.
இதனை நம்பி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான கனவில், தங்களது குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் கொட்டி கனடாவில் தற்காலிக பணி அனுமதியுடன் வேலை செய்தும் பல்கலைக் கழகங்களில் பயின்றும் வருகின்றனர்.
படிக்க: கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்
இந்நிலையில், கனடாவில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வேலையின்மையின் காரணமாக ஏற்படும் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டு குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்தார். வருகின்ற செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்களாக வருபவர்களை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்கவும் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தற்போது மூன்று ஆண்டுகள் முதுகலைப் பணி அனுமதியின் மூலம் கனடாவில் பணியாற்றி வந்த 70,000-ற்கும் மேற்பட்ட மாணவர்களின் அனுமதி காலாவதியாகியுள்ளது. 2024 டிசம்பருக்குள் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல் இருக்கும் என்கின்றார் கனடாவின் குடியேற்ற நிபுணர் கன்வர் சுமீத் சிங்.
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக்கட்டணங்கள் மிகவும் அதிகமாகும். வெளிநாட்டு மாணவர்களின் மூலமாக அதிக வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் கனடா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3,009 கோடி டாலர் வெளிநாட்டு மாணவர்களால் அந்நாட்டு ஜி.டி.பி-க்கு பங்களிப்பு செலுத்தப்படுகிறது. இங்குள்ள பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கே அவர்கள் பல இலட்சம் ரூபாய் செலவழிக்கின்றனர். அதிலும், பணி அனுமதி காலாவதி ஆகி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் வசிப்பவர்கள். அங்குக் கல்விக்கட்டண உயர்வு, அதிக அளவிலான வரி மற்றும் வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்வதற்காகவும் பல இலட்சங்கள் கடன்பட்டுள்ளனர்.
படிக்க: கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!
பல்வேறு நாடுகளில் இருந்தும் கனடாவில் குடியேறுபவர்களில் பாதிப் பேர் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகும். இந்நிலையில்தான் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இலட்சக்கணக்கான நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர்கள் தங்களது நாடுகளுக்கும் செல்ல முடியாமல், கனடாவிலும் வசிக்க முடியாத நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு மிகவும் சரிந்து வருகிறது. இவரது ஆட்சிக் காலத்தில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கனடாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறைத்துள்ளது. தற்போது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 13.5 சதவிகிதமாக உள்ளது. மேலும், குடியிருப்புகளின் விலை அதிகரித்து வருவதால் வீடற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தரமான கல்வி, சுகாதாரம், மருத்துவம், அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, வறுமை, உணவுப்பாதுகாப்பின்மை, தொற்று நோய் என்று கனடாவில் மக்கள் சதிக்கும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கனட அரசாங்கத்தின் நவ தாராளவாதக் கொள்கைகள், கார்ப்பரேட் நிதி மூலதன கும்பல்களுக்கு ஆதரவான வரிக் கொள்கைகள், தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளின் அமலாக்கம், மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தல் போன்றவற்றின் காரணமாக கனடா மக்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியைப் போக்குவதாகச் சொல்லிக் கொண்டுதான் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ட்ரூடோ அரசாங்கம். இத்தனை ஆண்டுகளாக, வெளிநாட்டு மாணவர்களைக் குறைவான ஊதியத்தில் சுரண்டி வந்தது மட்டுமின்றி, தற்போது கனடா அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மக்கள் விரோத கொள்கைகளால் ஏற்பட்ட உள்நாட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அவர்களைப் பலிகடா ஆக்க முயல்கிறது.
பொற்சுவை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram