ராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலக்கிய நிகழ்ச்சியில் எழுத்தாளர் நயன்தாரா செகல் பேச அழைக்கப்பட்டிருந்தார். மோடி அரசை கடுமையாக விமர்சித்துவரும் காரணத்தால் நயன்தாரா செகல் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ‘மிரட்டல்’ காரணமாக அழைப்பை ரத்து செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தற்போது மராட்டிய நடிகரும் இயக்குநருமான அமோல் பாலேக்கர் மீது தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர் மராட்டிய சங்கிகள்.

கடந்த வெள்ளிக்கிழமை (08-02-2019) மும்பையில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் அமைப்பின் நிகழ்ச்சியொன்றில் பேச அமோல் பாலேக்கர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அமைப்பு மத்திய கலாச்சார அமைச்சரவையின் கீழ் செயல்படுகிறது. காலமான ஓவியர் பிரபாகர் பார்வே நினைவாக நடந்தப்பட்ட அந்த நிகழ்வில், கலாச்சார அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து விமர்சித்தார் பாலேக்கர். “ஒரு குறிப்பிட கலையை உயர்த்தப் பார்ப்பது அல்லது கலை மீதான கண்காணிப்பு  ஒரு சித்தாந்த சாயலுடன் உள்ளது” என பேசினார் அவர்.

படிக்க :
♦ கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் !
♦ சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அமைப்பின் இயக்குனரும், அமைப்பின் ஆலோசனை குழு உறுப்பினரும் பாலேக்கரை இடைமறித்து, மேற்கொண்டு பேசவிடாமல்  தடுத்தனர்.  பார்வே-யின் பணிகள் குறித்து மட்டும் பேசும்படி அவர்கள் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர்.  தனது பேச்சு ‘தணிக்கை’ செய்யப்படுவதை விரும்பாத பாலேக்கர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

“இந்த உரையை எழுதியபோது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் கலைஞர்களும் பார்வையாளர்களும், அவர்களுடைய பிரச்சினையை பேசுவதற்காக கைதட்டி பாராட்டுவார்கள் என நினைத்தேன்” என்கிறார் செய்தியாளர்களிடம் பேசிய பாலேக்கர்.  அந்த அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களே தன்னை இடைமறித்து, நிறுத்தியது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலேயே எனது உரை இடைமறிக்கப்பட்டபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த மூத்த கலைஞர்கள் எவரும் எனக்காக பேசவில்லை” எனவும் அவர் கவலையுடன் பதிவு செய்துள்ளார்.

பத்திரிகையாளர்களை சந்தித்த அமோல் பாலேகர் (வலது) மற்றும் அவ்ரது மனைவி சந்தியா கோகலே

“மும்பையிலும் பெங்களூருவிலும் உள்ள நேஷனல் ஆர்ட் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் அமைப்பின் உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட ஆலோசனை குழுவைக் கலைக்கும் கலாச்சார அமைச்சகத்தின் முடிவு நாசகரமானது. இந்த ஆலோசனை குழு காலம்சென்ற பார்வே உள்ளிட்ட மூன்று கலைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதி அளித்திருந்தது.  ஆனால், ஆலோசனை குழுவிடம் எந்த வித அறிவிப்பையும் செய்யாமல் அமைப்பின் புதிய இயக்குனர் மற்ற இரண்டு கலைஞர்களின் ஓவியக் காட்சிகளை ரத்து செய்துவிட்டார். இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது? அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்?” என்கிற பாலேக்கர், அரசின் முடிவை விமர்சிக்கக்கூடாது என தெரிவித்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கவே மாட்டேன் என சொல்கிறார்.

நிகழ்ச்சியிலிருந்து பாலேக்கர் வெளிநடப்பு செய்தபின், இந்த அமைப்பின் தலைவர், ‘இது அரசின் காட்சிக்கூடம் என்பதை பாலேக்கர் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றார்.

தேசிய அளவில் பிரபலமான கலைஞர்களை, இந்துத்துவ சார்பு கொண்ட சிலர் தொடர்ந்து அச்சுறுத்துவதை பலரும் கண்டித்துள்ளனர். சிபிஎம் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, “அரசையும் தலைவர்களையும் விமர்சிப்பதற்குள்ள சுதந்திரம் நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு தந்திருக்கிற முக்கியமான உரிமை… அமோல் பாலேக்கரிடம் இப்படி நடந்துகொண்டது ஜனநாயகத்துக்கு எதிரானது, கடுமையான கண்டனத்துக்குரியது”.

சமூக ஊடகங்களில் பலர் அமோல் பாலேக்கருக்கு ஆதரவாகவும் அவர் இடைமறிக்கப்பட்டதைக் கண்டித்தும் எழுதியுள்ளனர்.

அண்மையில் கர்நாடாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்துத்துவ காவிகளின் போலி தேசியம் குறித்து விமர்சித்த எழுத்தாளர் ஒருவர் சங்கிகளால் இடைமறிக்கப்பட்டார். இந்துத்துவ கலாச்சார அமைச்சரகமாகிவிட்ட மத்திய கலாச்சார அமைச்சகத்தை விமர்சித்த காரணத்துக்காக, இந்துத்துவ அடியாட்களாக மாறிவிட்ட கலைஞர்களால் அவமதிக்கப்பட்டிருக்கிறார் அமோல் பாலேக்கர். காவிகள் எந்ததெந்த மாநிலங்களில் கால் பதித்திருக்கிறார்களோ அந்த மாநிலங்களில் கலைகளும் முன்னேற்றமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதற்கு உதாரணங்கள் தொடர்ந்தபடியே உள்ளன.

கலைமதி நன்றி: டெலிகிராப் இந்தியா
தமிழாக்கம் : கலைமதி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க