டந்த 2002-ம் ஆண்டு மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நடந்த முசுலீம் இனப்படுகொலை உலக அளவில் இழிபுகழ் பெற்றது. அதே படுகொலையாளர்கள் நாட்டையே ஆளும் நிலைக்கு வந்துவிட்டபிறகு, இனப்படுகொலை வழக்குகள் வெற்று காகிதங்களாக குப்பை தொட்டிக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் சமீபத்தில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அந்த வரிசையில் நூறுக்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற நரோடா பாட்டியா கலவரத்தை முன்நின்று நடத்திய குற்றவாளி பாபு பஜ்ரங்கியும் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

படிக்க:
♦ நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..
♦ குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

2002-ம் ஆண்டு நடந்த  குஜராத் கலவரங்களில் படுபயங்கரமான கும்பல் கொலைகளை ‘பஜ்ரங் தள்’ தலைமையிலான இந்துத்துவ ரவுடிகள், அகமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் அரங்கேற்றினர். ஆயிரக்கணக்கான இந்துத்துவ கிரிமினல்கள் ஒன்றுகூடி நரோடியா பாட்டியாவின் முசுலீம் குடியிருப்புகளுக்குள் புகுந்து அம்மக்களை பச்சைப் படுகொலை செய்தனர்.  பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில், இந்துத்துவ கும்பலைத் திரட்டி படுகொலைகளை நடத்திய பஜ்ரங் தள் தலைவன், பாபு பஜ்ரங்கிக்கு 21 ஆண்டுகள் ஆயுள் சிறை வழங்கி தீர்ப்பளித்திருந்தது குஜராத் உயர்நீதிமன்றம்.  இந்நிலையில் உடல்நிலையைக் காரணம் காட்டி, பாபு பஜ்ரங்கிக்கு பிணை வழங்கும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (07-03-2019) பிணை வழங்கி பஜ்ரங்கியை விடுவித்துள்ளது.

பாபு பஜ்ரங்கி (இடது), மாயா கோத்னானி (வலது)

முன்னதாக, நரோடா பாட்டியா படுகொலை வழக்கை விசாரித்த குஜராத் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கொத்னானி இந்தப் படுகொலைக்கு முக்கிய சதி தீட்டியவர் என குற்றம்சாட்டி 28 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம், 2018-ம் ஆண்டு ஏப்ரலில் அவரை விடுவித்தது.  கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தண்டனை பெற்ற நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. தற்போது, முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கியை பிணையில் விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

இனப் படுகொலையை நடத்திப் பார்த்தவர் நாட்டை ஆளும்போது, படுகொலைகளை முன்நின்று நடத்திய கூட்டாளிகள் எப்படி சிறையில் இருப்பார்கள்? நரோடியா பாட்டியா குடியிருப்பில் படுகொலையானவர்கள் கும்பல் தற்கொலையில் ஈடுபட்டதாகக்கூட வரலாற்றில் மட்டுமல்ல, நீதிமன்றத் தீர்ப்பில் கூட காவிகள் எழுத வைப்பார்கள்.


அனிதா
நன்றி :
ஸ்க்ரால்