ந்துக்களின் மீது வெறுப்பை உமிழும் விதமாகப் பேசிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர், அப்பேச்சிற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5-ம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவுடனான பாகிஸ்தானின் உறவு மேலும் மோசமான நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஃபயாசுல் ஹஸன் சோகன் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சின் காணொளி வைரலாக இணையத்தில் பரவியது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்களும் அவரது இந்து வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

படிக்க:
♦ நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !
♦ ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !

பாகிஸ்தான் அரசின் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசரி தனது டிவிட்டர் பக்கத்தில் “இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். யாருக்கும் பிறரது மதத்தை தாக்குவதற்கு உரிமை கிடையாது. நமது இந்து குடிமக்களும் இந்த நாட்டிற்காக தியாகங்களை செய்துள்ளனர்.” என்று கூறினார்.

இதுகுறித்து பாகிஸ்தானின் மத்திய நிதித்துறை அமைச்சர் ஆசாத் ஓமர் தமது டிவிட்டரில் குறிப்பிடுகையில் “பாகிஸ்தான் இந்துக்களும் இந்த தேசத்தின் கட்டமைப்பில் என்னைப் போன்றே அங்கம் வகிப்பவர்கள். பாகிஸ்தானின் கொடியில் வெறும் பச்சை நிறம் மட்டுமே இல்லை; சிறுபான்மையினரை குறிக்கும் வெள்ளை நிறம் இல்லாமல் நமது கொடி நிறைவு பெறாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் நயீம் உல் ஹக், தனது டிவிட்டில், “அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த உறுப்பினர் ஒருவரின் இத்தகைய அறிவீனமான நடத்தையை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது.” என்றார்.

அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானியர்கள் இதனைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில், #SackFayazChohan என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது குறித்து விளக்கமளிக்குமாறு அவருக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேட்டதன் பேரில், கடந்த மார்ச் 5 அன்று அவரைச் சந்தித்த ஹசன் சோகன், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஃபயாஸ் சோகனின் ராஜினாமா கடிதத்தை அம்மாநில அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டது.

ஹஸன் சோகன்

தமது இந்து வெறுப்புப் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது டிவிட்டரில் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் இந்திய படையணிகளையும் அதன் ஊடகங்களையும் மட்டுமே அவ்வாறு பேசியதாகவும் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு எதிராக அவ்வாறு பேசவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பேச்சு பாகிஸ்தானிலுள்ள இந்துக்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்குமெனில் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘தீவிரவாத நாடான’ பாகிஸ்தானில், இது போன்ற ஒரு வெறுப்புப் பேச்சு சம்பவம் நடப்பது என்பது அங்கு ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அங்குள்ள மக்கள் இத்தகைய பேச்சுகளை எதிர்த்துப் பதிவிடுகின்றனர். அவ்வாறு பேசிய அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளனர். ‘சகிப்புத் தன்மை மிக்க’ நாடாக சொல்லிக் கொள்ளப்படும் இந்தியாவில், பாஜக அமைச்சர்கள் முதல்  அடிபொடிகள் வரை அனைவரின் யதார்த்தமான பேச்சே இசுலாமிய வெறுப்புப் பேச்சாகத்தான் இருக்கிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் கேட்காத நாளில்லை எனலாம். அந்த அளவிற்கு ஆளும் பாஜகவினரும், சங்க பரிவாரக் கும்பலும் தொடர்ச்சியாக இசுலாமிய வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.

ஒருவேளை பாகிஸ்தான் அரசு செய்ததுபோல் வெறுப்புப் பேச்சு பேசியவர்களையெல்லாம் பதவிநீக்கம் செய்திருந்தால், பாராளுமன்றத்தில் பாஜக தரப்பில் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.


நந்தன்
நன்றி : அவுட்லுக்