நாளிதழைத் திறந்தால் எல்லா பக்கங்களிலும் ஊழல் செய்திகள் நிறைந்திருக்கின்றன. நிறைந்திருப்பதால் மக்களும் அதை ஊன்றிப் படித்து கோபம் அடைவதில்லை. இன்று வெளியான நூற்றுக்கணக்கான ஊழல் செய்திகளில் ஏழு செய்திகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம்.

ஊழல் செய்தி 1:
அதிமுக கொடி கட்டிய காரில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனோடு கூடவே கட்சிகள் சார்பாக பல கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படும் வைபவமும் ஆரம்பித்து விட்டது. இடையில் கண்துடைப்பிற்காக தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்துகிறார்கள்.

மாதிரிப்படம்

இந்நிலையில் திருவாரூர் – காணூரில் உள்ள சோதனைச் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போழுது அதிமுக-வின் அமைப்பு சாரா டிரைவர்கள் அணியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள தொழிலதிபர் சிவபெருமான் காரில் இருந்து சுமார் 50 லட்சத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட அந்தப் பணம் ஆ.டி.ஓ முருகதாஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தப்பணம் பேருந்து பாடி கட்டுவதற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த ஆவணமும் இல்லாததால் உரிய ஆவணத்தை ஒப்படைத்து விட்டு பெற்று செல்லுமாறு கூறியிருக்கிறார்கள்.

அதே போல நெல்லை மாவட்டம் தென்காசி சாலை அத்தியூரில் நடந்த சோதனையில் சுமார் 20 லட்சமும், பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் நடந்த வாகன சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக -பாஜக கூட்டணி அமைத்திருப்பதால் வருங்காலத்தில் இத்தகைய செய்திகள் வர வாய்ப்பில்லை. ஆளும் கட்சிகளின் பண விநியோகம் போலீசு பாதுகாப்புடன் விநியோகிக்கப்படும்.

ஊழல் செய்தி 2:
தேர்தலில்
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பார்.. டி.ஜி.பி ராஜேந்திரன் செயல்பட தடை விதியுங்கள்!

மிழக டிஜிபி-யாக ராஜேந்திரன் இரண்டு வருட பணி நீட்டிப்பில் இருக்கிறார். இவர் மீது குட்கா உள்ளிட்ட ஊழல் புகார் வழக்குகள் இருகின்றது. ஆளும்கட்சி ஆதரவில் தான் பதவியை அனுபவித்து வருகிறார். எனவே இவர் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்பது ஊரறிந்த உண்மை.

தேர்தல் நடத்தைகளை பின்பற்றாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். இதனால் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இவர் டிஜிபியாக செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் விசாரணைக்கு எற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தீர்ப்பு எப்படி வரும் என்றுதான் தெரியவில்லை.

ஊழல் செய்தி 3:
கருப்பு
பணத்தை ஒழிக்க பண மதிப்பு நீக்கம் தீர்வல்ல!

ணமதிப்பு நீக்கம் கருப்புப் பணத்தை மீட்க உதவாது என்று ரிசர்வ் வங்கியுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் கருத்துக்கு சிலர் உடன்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016 நவம்பரில் ரூ.1000, 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இதன் விளைவாக கடுமையாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், வேலை இழப்பு, தொழில்கள் பாதிப்பு என பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால் இதற்கு முன்னரே ரிசர்வ் வங்கியுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண மதிப்பு நீக்கம் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்று கூறியிருக்கிறார்கள் ரிசர்வ் வங்கியின் சில இயக்குநர்கள். ஆனால் பாஜக அரசாங்கமோ, கருப்புப் பணம், கள்ள நோட்டு ஒழிக்க, வங்கிகளில் பரிவர்த்தனை பெருக்க இதுதான் தீர்வு என்று கூறியிருக்கிறது. அதில் வங்கி பரிவர்த்தனையை பெருக்க உதவும் என்பதை ஏற்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி, மற்ற இரண்டுக்கும் வாய்ப்பில்லை என்று சில இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். முக்கியமாக கருபுப்பணம் ரியல் எஸ்டேட்டிலும், தங்கம் போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல பண மதிப்பு நீக்கத்தின்  மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறுகிய கால பாதிப்பு ஏற்படும், நாட்டில் புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டில் மிக குறைந்த சதவீதமே கள்ள நோட்டு அதாவது ரூ 400 கோடி மட்டுமே உள்ளது. இதற்கு பண மதிப்பு நீக்கம் தீர்வல்ல என்று வாதிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த கருத்தினை ஏற்காமல் மூர்க்கத்தனமாக பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் ஊழல் முதலைகள் ஒருவரும் பிடிபடவில்லை. இதன்மூலம் ஊழலுக்கு வழி திறந்து விட்டிருக்கிறார் மோடி. இதையே “கருப்பை வெள்ளையாக்கும் ஒரு உத்தியே பண மதிப்பு நீக்கம்” என்று சாடியிருக்கிறார் ப. சிதம்பரம்.

ஊழல் செய்தி 4:
18
தொகுதிகளுக்கு 1800 கோடி… அதிமுக திட்டம்.

ருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தொகுதிக்கு 100 கோடி வீதம் 18 தொகுதிகளுக்கும் 1800 கோடி ஒதுக்கியுள்ளதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சட்டசபையில் பெரும்பான்மை இல்லாமல் மத்திய அரசின் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது எடப்பாடி கும்பல். எனவே இந்த இடைத்தேர்தலில் ஜெயித்தால்தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால் எப்படியாவது வெற்றி பெற தீவிரமாக களமிறங்கி உள்ளது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டத்திற்கு எடப்பாடி அரசு எந்த எதிர்ப்பும் இன்றி ஆதரவளித்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் மீத்தேன் திட்டம், எட்டு வழிச்சாலை வரை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால், மக்கள் மத்தியில் தான் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாத நிலையில் உள்ள எடப்பாடி கும்பல் காசு கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டு… அதற்கான பொறுப்பை முக்கிய அமைச்சரிடம் ஒப்படைத்து இருக்கிறதாம். முன்பு கரூர் அன்புநாதன் மூலம் பணம் விநியோகிக்கப்பட்டது. இந்த முறை அமைச்சர்களே களத்தில் இறங்கியுள்ளனர்.

ஊழல் செய்தி 5:
லஞ்சம்
வாங்கிய தாசில்தார் சஸ்பெண்ட்

ருமபுரி மாவட்டம் நிலம் கையகப்படுத்துதல் சிறப்பு பிரிவு தாசில்தார் தர்மராஜன் மீது 2016-ல் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 2018 அக்டோபர் அன்று அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த பணி நீக்கத்தில் உள்நோக்கம் இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பணியிடை நீக்கம் என்பது குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு ஏதுவாக அலுவலகங்களில் இருந்து நீக்கி வைப்பது தானே தவிர தண்டனையல்ல.. எனவே இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், நாடு முழுவதும் புற்றுநோய் போல ஊழல் எல்லா மட்டத்திலும் பரவியுள்ளது. ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… லஞ்சம் கொடுக்காமல் தாலுக்கா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடிவதில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே லஞ்சத்தை தடுக்க தமிழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி எத்தனை நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு குடிமக்கள் சாசனத்தை வெளியிட வேண்டும் என்றார். நீதிமன்றமே லஞ்சம் கொடுக்க்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என்று ஒத்துக் கொண்டுள்ளது.

ஊழல் செய்தி 6:
எங்கய்யா அந்த 10,000 ரூபாய்? ஆர்.கே.நகர் 20 ரூபாய் டோக்கன் பிரச்சினைகள்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக 20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து, ஒரு வாக்குக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவதாக உறுதி அளித்தது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் டி.டி.வி. தினகரன் அளித்த வாக்குறுதிபடி இதுவரையிலும் ரூ.10 ஆயிரம் தராததால், அவருக்கு ஓட்டுப்போட்ட பொதுமக்கள், அவர் தொகுதிக்கு வரும்போதெல்லாம் 20 ரூபாய் நோட்டை காண்பித்து முற்றுகை போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் வண்ணாரப்பேட்டையில் மகளிர் தினவிழா பொதுக்கூட்டம் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென தண்டையார்பேட்டை இரட்டைகுழாய் தெருவில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு “20 ரூபாய் நோட்டு டோக்கன் இங்கே உள்ளது. ஓட்டுக்கு தருவதாக சொன்ன பணம் எங்கே?” எனக் முழக்கமிட்டனர்.

கொடுப்பதாக சொன்ன காசு எங்கே என மக்களும் இங்கே ஊழலில் கொடிகட்டிப் பறக்கின்றனர். இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

ஊழல் செய்தி 7:
விசைத்தறி வாங்க கொடுத்த கடனில் வங்கி அதிகாரிகள் ஊழல்!

கோவை சோமனூர் பகுதியில் உள்ள சில விசைத்தறி உரிமையாளர்களுக்கு, சாமளாபுரத்தில் உள்ள கனரா வங்கியில் விசைத்தறி எந்திரங்கள் வாங்க டந்த 2013-2014-ம் ஆண்டுகளில் கடன் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதாகவும் வங்கி அதிகாரிகள் உள்பட பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசைத்தறியில் ஏற்கனவே உள்ள எந்திரங்களை காண்பித்து, புதிய எந்திரங்களை வாங்கியதாக கணக்கு காண்பித்து இருப்பதாகவும், ரூ.4 லட்சம் கடன் வாங்கியவர்கள் மீது, ரூ.10 லட்சம் கடன் பெற்று இருப்பதாக வங்கியில் கணக்கு எழுதி வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மொத்தம் ரூ.9.8 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடன் வாங்கிய 110 பேரில் 50 பேர் கடன் தொகையை செலுத்திவிட்டனர்.

நலிந்து வரும் விசைத்தறி தொழிலில் கூட மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வழக்கம் போல நீதிபதியும் இந்த விசாரணையை தள்ளிவைத்து உத்திரவிட்டார்.

ஊழல் செய்தி 8:
இத்தாலியில் கல்வி படிக்க மாணவியை ஏமாற்றிய பிராடு கம்பெனி!

கோவை ஆவராம்பாளையம் ரோடு, மகளிர் பாலிடெக்னிக் அருகில் சர்வதேச சேவை மையம் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதை தங்கவேலு, சுப்பையன், சுரேந்திரன், மற்றொரு தங்கவேலு, மீனா ஆகியோர் நடத்தி வந்தனர். இங்கே பட்டதாரிகளை உயர் கல்வி படிக்க இத்தாலிக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தனர்.
இதை அறிந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் லீலா ஆண்டனி (22) என்பவர் கோவை வந்து இந்நிறுவனத்தினரை அணுகி, உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறினார். இந்நிறுவனமும்ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் லீலா ஆண்டனியிடம் கேட்டு வாங்கினர்.
இது பற்றி லீலாஆண்டனி கேட்ட போது வெளிநாட்டில் படிக்க அனுமதி கிடைத்து விட்டதாக கூறி போலியான அனுமதி ஆணையை தயாரித்து வழங்கினர். அப்போது மும்பையில் இதற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதை நம்பி லீலா ஆண்டனி மும்பை சென்றார். அங்கு சென்ற போதுதான் அந்த நிறுவனத்தினர் ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார், தனியார் நிறுவன நிர்வாகிகள் தங்கவேலு, சுப்பையன், சுரேந்திரன், மற்றொரு தங்கவேலு, மீனா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குவைத்தில் வேலை வாய்ப்பு என்று கேரளாவில் இறக்கி விட்ட கதை வெறும் கதையல்ல, நிஜம். வேலைக்காக நமது மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள். மோடி ஆட்சியில் 42 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலையின்மை வளர்ந்திருக்கும் போது லீலா ஆண்டனிகள் என்ன செய்ய முடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க