டந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 50 முசுலீம்கள் கொல்லப்பட்டனர். முசுலீம்களுக்கு எதிராக வெள்ளை இன வெறி பாசிஸ்டுகள் நடத்திய மிகவும் கொடூரமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் வலதுசாரி பயங்கரவாதியான பிரிண்டன் டாரண்ட் என்பவர்.

மேற்கத்திய வளர்ந்த நாடுகளின் போர்வெறி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெறியேறும் முசுலீம்களின் வருகையை தங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இதே மேற்கத்திய நாடுகள் சொல்லிவருகின்றன. அகதிகளுக்கு எதிரான மனநிலையை ஊட்டி வளர்ப்பதை இந்த நாடுகளின் வலதுசாரி அரசியல்வாதிகள் செய்து வருகிறார்கள். இதன் விளைவாக, பிரிண்டன் டாரண்ட் போன்ற தீவிரவாதிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் இங்கிலாந்து, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளில் நடந்த முசுலீம்களுக்கு எதிரான சில தாக்குதல் சம்பவங்களைப் பார்க்கலாம்…

2016-ம் ஆண்டு அமெரிக்காவின் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குவின்சில் உள்ள ஒரு மசூதி அருகே நியூயார்கைச் சேர்ந்த ஒரு இமாம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்குக் காரணம் முசுலீம்கள் மீதான வெறுப்பே என போலீசு சொன்னது. அந்தக் கொலையாளி கைது செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்தில் 2016-ஆம் ஆண்டு மத்திய சூரிச் நகரத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், தொழுகையை முடித்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். இதில் மூவர் காயமுற்றனர். முன்னதாக இதே நபர் வேறு ஒருவரை சுட்டுக்கொன்றிருந்தார். மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய அந்த நபர், மசூதியின் அருகே இருந்த ஆற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

படிக்க:
ஜான் கெர்ரி: பாஸ்டன் பிராமணர்கள் X புதுதில்லி பார்ப்பனர்கள்
♦ காஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் கட்டுரை

ஜனவரி 2017-ம் ஆண்டு கனடாவின் கியூபெக் நகரத்தில் உள்ள மசூதியில் மாலை தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது 27 வயதான அலெக்சாண்டர் பிசனோட்டே என்பவர் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர்.  19 பேர் காயமடைந்தனர். அந்த நபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

மே 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் இனவெறியோடு இரண்டு முசுலீம் பெண்களை ஏசிக்கொண்டிருந்த நபரை தட்டிக் கேட்டதற்காக இரண்டு ஆண்கள் அடித்து கொல்லப்பட்டனர்.  ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர்  ஜெரிமி ஜோசப் கிறிஸ்டியன் என்ற 35 வயதுக்காரர்.

ஜூன் 2017 இங்கிலாந்தில் 48 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தொழுகை நடத்திவிட்டு மசூதியை விட்டு வெளியே வந்தவர்கள் மீது வேனை ஏற்றி கொல்ல முயற்சித்தார். இதில் 51 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 9 பேரும் காயமடைந்தனர்.

டாரன் ஆஸ்பார்ன் என்ற அந்த  நபர் தாக்குதலுக்குப் பிறகு, “நான் அனைத்து முசுலீம்களையும் கொல்ல விரும்புகிறேன். அதில் சிறிதளவே வெற்றி பெற்றிருக்கிறேன்” என கத்தினார். தீவிரவாத செயலுக்காக ஆஸ்பார்னுக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு ஸ்பெயினில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு  கிரானடா, ஃபியூயன்லபிரடா, லாக்ரோனோ, சிவைல் போன்ற நகரங்களில் உள்ள மசூதிகள் மீது நெருப்பு குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மூவர், நவாரே என்ற இடத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். மாட்ரிட் அருகே ஒரு முசுலீம் பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மார்ச் 2019 நியூசிலாந்தில் 28 வயதான ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரிண்டன் டாரண்ட், கிறிஸ்ட்சர்ச் என்ற இடத்தில் இருந்த இரண்டு மசூதிகளில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர்.  நியூசிலாந்து போலீசு அந்த நபரை கைது செய்துள்ளது.

மோடியில் தொடங்கி டிரம்ப் வரை உலகெங்கிலும் வலதுசாரி பாசிசம் வேகமாக வளர்ந்துவருகிறது. இத்தகைய வலதுசாரிகளால் வலது தீவிரவாதமும் வளர்கிறது. இந்தியாவில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு முதல் மாலேகான் குண்டுவெடிப்பு வரை இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. முசுலீம்களும், மத சிறுபான்மையினரும் இன சிறுபான்மையினருமே இதன் பலிகடாவாக்கப்படுகின்றனர்.


தமிழாக்கம்: கலைமதி
நன்றி: அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க