.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்புக்களுக்குப் பயந்து வீடு, உடைமைகளை விட்டு பாதுகாப்புக்காக ஓடி ஒளிந்த ஈராக்கிய பெண்கள் இப்போது அச்சமின்றி தங்களுக்கென ஒரு பாதுகாப்பான வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மங்கலான வெளிச்சம் கொண்ட குறுகிய அறைதான் இவர்களின் பயிற்சிக்களம். வடக்கு ஈராக்கில் உள்ள ருவாங்கா என்ற அகதிகள் முகாமொன்றில் யாசிடி மதப்பிரிவைச் சேர்ந்த 12 பெண்கள் இங்கு குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ருவாங்காவின் குத்துச்சண்டை சகோதரிகள் (Boxing Sisters) என்று தங்களை அழைத்துக்கொள்கின்றனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீடு, உடைமைகள், சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்த இவர்களுக்கு அடைக்கலமாக அமைந்துள்ளது இந்த அகதிகள் முகாம். கூடுதல் பலமாக குத்துச்சண்டை பயிற்சி வகுப்புக்கள் இவர்களின் பிரதான விருப்பமாக அமைந்துவிட்டது.

“சிறுவயதிலிருந்தே, எந்த ஒரு விளையாட்டு தொடர்பான வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அதைத் தவறவிட மாட்டேன். பள்ளிக்காலத்தில் கூடைப்பந்து அணியில் இருந்தேன்” என்கிறார் 17 வயதான ஹஸ்னா. ஐ.எஸ் தீவிரவாதிகளால் இவரது கிராமம் தாக்குதலுக்குள்ளாக நேரிட்டபோது அனைத்தையும் விட்டுவிட்டு இவரது குடும்பம் வெளியேற வேண்டியதாகி விட்டது.

“காலை 7 மணியளவில், அருகாமை கிராமத்தில் வசிக்கும் ஒரு உறவினரிடமிருந்து, என் சித்தப்பாவுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகள் எங்கள் கிராமத்தைத் தாக்க வந்துகொண்டிருக்கின்றனர்; எனவே உடனடியாகத் தப்பித்துச் செல்லுமாறு செய்தி அனுப்பியிருந்தார் அந்த உறவினர். அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் இதயம் படபடவென்று துடிக்கும்; மயக்கம் வரும்; மூச்சுவிடமுடியாமல் திணறுவேன்” என்கிறார் ஹஸ்னா.

குத்துச்சண்டை சகோதரிகள். யாசிடி மதப்பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கு லோட்டஸ் ஃபிளவர் என்ற பிரிட்டன் தன்னார்வ தொண்டு நிறுவனம் பயிற்சியளிக்கிறது. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சியின் நோக்கம் போரினால் பாதிக்கப்பட்டு, பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதுதான் என்கிறது லோட்டஸ் ஃபிளவர் நிறுவனம்.

ருவாங்கா முகாமில் சுமார் 15,000 பேர் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாசிடி எனப்படும் மதக்குழுவைச் சேர்ந்தவர்கள்தான். 2014-ம் ஆண்டு முதல் இவர்கள் இங்கு தங்கியிருக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த லோட்டஸ் ஃபிளவர் என்னும் தனியார் தொண்டு நிறுவனம், குத்துச்சண்டை வகுப்புக்களை நடத்தி வருகிறது. பெண்களுக்கென்று பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இங்குள்ள பெண்களின் மன நலன் மற்றும் உடல் நலம் குறித்து கவனம் கொள்வதாகத் தெரிவிக்கிறது. ஏனென்றால் இங்குள்ள பெரும்பாலான பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டும், பாலியல் ரீதியாகச் சித்திரவதைக்கும் உள்ளானவர்கள். இந்த முயற்சி யாசிடி இனப்பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டப் பயிற்சி வகுப்புகளுக்காக இதுவரை 40 பெண்கள் பதிவு செய்துவிட்டனர் என்கிறார் வியான் அகமது. இவர் லோட்டஸ் ஃபிளவர் நிறுவனத்தின் பகுதி மேலாளராகச் செயல்படுகிறார். ஆண் பயிற்சியாளரைக் கொண்டு நடத்தப்படும் வகுப்புக்களைக் கூடிய விரைவில் இங்கு பயிற்சி பெறும் பெண்களையே பயிற்சியாளர்களாக மாற்றி இந்தச் சேவையைத் தொடரவேண்டும் என்கிறது லோட்டஸ் ஃபிளவர் நிறுவனம்.  ஹஸ்னா அதில் முதல் தேர்வாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

இங்குள்ள சக நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். நாங்கள் எல்லோருமே ஏறக்குறைய ஒரே விதமான சித்திரவதைக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டுதான் இங்குவந்தோம். அதுதான் எங்கள் மத்தியில் உடன்பிறந்த சகோதரிகள் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் ஹஸ்னா.

ஹஸ்னா – வயது 17 – கேத்தி பிரவுன் என்ற பயிற்சியாளருடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கேத்தி பிரவுன் ஓய்வுபெற்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் மட்டுமல்ல; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனநல சிகிச்சை தொடர்பான கல்வியும் பயிற்றுவிக்கிறார். ஹஸ்னா போன்ற பெண்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து அவர்களையும் பயிற்சியாளர்களாக மாற்ற வேண்டுமென்பதே பிரவுனின் இலக்கு.

குத்துச்சண்டை சகோதரிகளுக்கு அருகாமை நகரத்திலுள்ள ஒரு குத்துச்சண்டை வீரர் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. பெண் பயிற்சியாளர் பிரவுன் மூலம் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டு, இங்குள்ள பெண்களும் கூடிய விரைவில் குத்துச்சண்டை பயிற்சியாளர்களாக்கப்படுவர்.

ருவாங்கா அகதிகள் முகாமின் தெருக்கள் ஒன்றில் ஹஸ்னா. விளையாட்டின் மேல் அதிகக் கவனம் செலுத்தும் இவர் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகப் போவது தன் வாழ்நாளின் மிக முக்கிய தருணமென்றும், அதோடன்றி நான் மிகவும் உறுதியான பெண்மணியாகவும் இப்போது உணர்கிறேன் என்கிறார் ஹஸ்னா

ருவாங்கா அகதிகள் முகாமில் சிறு கடைகள் சில உள்ளன. ஹஸ்னா 5 வருடமாக இங்கு வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், மக்கள் இப்போது குத்துச்சண்டை சகோதரிகள் என்னும் இந்த முன்னெடுப்பை வெகுவாக வரவேற்கின்றனர்.

பயிற்சி முடிந்து திரும்பிவரும் ஹன்னாவை வரவேற்கிறார் அவரது பாட்டி. என் குடும்பம்தான் எனது முழு பலத்திற்கும் காரணம் என்கிறார் ஹஸ்னா.

வாழ்க்கை மிகவும் இனிமையானது; நான் யாரையும் வெறுக்க விரும்பவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பும் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்; நானும் அதையே செய்ய விரும்புகிறேன் என்கிறார் ஹஸ்னா.

ஹஸ்னாவின் பாட்டியும், சித்தப்பாவும் அகதிகள் முகாமில் வசித்துவருகின்றனர். தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டுமென்பது பாட்டியின் விருப்பம். ஹஸ்னாவுக்கோ எதிர்காலம் மிகவும் முக்கியமென்கிறார். உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு என் சொந்தங்களுக்கு உதவிசெய்வேன்

எங்கள் கிராமத்திலுள்ள அனைவரும் ஐ.எஸ் தாக்குதலுக்குப் பயந்து ஓட ஆரம்பித்தோம். ஐ.எஸ் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடும், வெடிகுண்டுத் தாக்குதலும் அவர்கள் எங்களுக்கு மிக அருகாமையில் இருக்கின்றனர் என்பதை உணர்த்தியது

ஐந்து வருடங்களாக அகதிகள் முகாமில் நாங்கள் அனுபவித்த இன்னல்களை மறக்க முடியுமா என்ன? குறிப்பாக யாசிடி குலப் பெண்களுக்கெதிராக நடத்தப்பட்ட அநீதிகளை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. ஆனாலும் எதிர்த்துப் போராடும் வழிமுறை இப்போது என் கைகளில் உள்ளது – ஹஸ்னா

அகதிகள் முகாமில் நான் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை பள்ளி கல்விக்கென மிகக்குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. சிறுவயதில் கணிதப்படிப்பில் நான்  தொடர்ந்து முதலிடம் வாங்கியிருக்கிறேன். இப்போது அப்படி முடியவில்லை; ஏனென்றால் முறையாகக் கற்றுக்கொடுக்க யாருமேயில்லை என்கிறார் ஹஸ்னா

சுமார் 15,000 பேர் வசித்து வரும் ருவாங்கா அகதிகள் முகாம். வடக்கு ஈராக்கின் தோஹக் மாவட்டத்தில் மட்டும் 25 அகதிகள் முகாம்கள் உள்ளன. 2014-ம் ஆண்டு முதல் அகதிகள் இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


கட்டுரையாளர்கள்: Andrea Dijkstra & Jeroen Van Loon
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க