மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். இந்நாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகத்தால் புதிய சட்ட மசோதா ஒன்று கொண்டுவரப்பட்டது. இம்மசோதாவிற்கு எதிர்ப்புகள் எழுந்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி சட்டத் திருத்தத்திற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்றவுடன் கடந்த நவம்பர் 10 அன்று நாடாளுமன்றத்தில் சட்டத்தில் உள்ள அம்சங்கள் வாசிக்கப்பட்டன.
இப்புதிய சட்டத்திற்கான மசோதாவானது 1959-ஆம் ஆண்டு ஈராக் பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்து அவர்களை அடிமையாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1959-இல் நிறைவேற்றப்பட்ட சட்டமானது ஆண், பெண் என இருவரும் 18 வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியது. ஆனாலும், நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் பெற்றோர்கள் அனுமதியுடன் மதகுருமார்கள் முன்னிலையில் 15 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற ஒடுக்குமுறையே எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.
அதனை அம்பலப்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (United Nations International Children’s Emergency Fund –UNICEF) ஈராக்கில் 28 சதவிகித பெண்கள் 18 வயத்திற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய புதிய சட்டமானது நிறைவேற்றப்பட்டால் பெண் குழந்தைகளுக்கு, 9 வயதிலும் ஆண் குழந்தைகள் 15 வயதிலும் திருமணம் செய்துவைக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின் குடும்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதற்கான காரணங்களை மத தலைவரிடம் தெரிவிக்காவிட்டால் கணவரின் முடிவின்படி நீதிமன்றத்திற்குச் செல்லாமல் மத தலைவர்கள் விவாகரத்து வழங்க முடியும்.
படிக்க: ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!
முன்பு நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் தற்போது ஷியா மற்றும் சன்னி அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் முடிவுகள் எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் மத தலைவர்களுக்கு வழங்கப்படுவது நிலப்பிரபுத்துவ முறையிலான பெண்ணடிமைத்தனத்தையே உருவாக்கும்.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 9 வயதிலேயே பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன் சிறு வயதிலேயே கர்ப்பமடைவதன் மூலம் பெண்களுக்கான கல்வி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படும்.
சமுதாயத்தில் ஜனநாயகம் நிலவுவதாகச் சொல்லப்படக்கூடிய இன்றைய காலத்தில் பெண்களிடம் கல்வியும் வேலையும் இருந்தாலும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் இன்றளவும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இந்நிலையில், பெண்களின் கல்வி மறுக்கப்பட்டு குழந்தை திருமணம் என்னும் ஒடுக்குமுறைக்குள் தள்ளுவதன் மூலம் மொத்த பெண்களையும் அடிமையாக்கும் நோக்கத்திலேயே ஈராக்கில் இப்புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பிற மதத்தைப் போலவே இஸ்லாமிய மதத்திலும் பெண்கள் தங்களின் தலைமுடி தெரியாதவாறு ஆடை அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளை அனுபவித்துவரும் நிலையில் பெண்களை பாலியல் ரீதியிலும் ஒடுக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சான்றாக, தெற்கு ஈராக்கைச் சேர்ந்த ஷைமா சாடூன் என்ற பெண், தான் 13 வயதை அடைந்தவுடன் 39 வயது ஆணிற்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அன்று இரவு, தன்னுடைய கன்னித்தன்மையை நிரூபிப்பதற்காக அவரது கணவர் அவருக்கு ரத்தக்கரை படிந்த துணியை வழங்கியதைச் சுட்டிக்காட்டுகிறார். இது பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் உச்சமாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக ஈராக்கில் எதிர்ப்பும் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகிறது.
இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பின் (HRW- Humam Rights Watch) ஆர்வலரான சாரா சன்பார், “9 வயது குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு அவர்கள் ஒன்றும் திருமண உடையில் இல்லை, மாறாக விளையாட்டு மைதானத்திலும் பள்ளியிலும் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை
மேலும், இச்சட்ட மசோதாவானது ஒரு சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லாவதற்குப் பதிலாக பின்னுக்குத் தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்ட மசோதாவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான ராய பாக் அனைத்து குடும்பப் பிரச்சினைகளிலும் மதத் தலைவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இளம் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து குழந்தை பாலியல் வல்லுறவை இச்சட்டம் சட்டப்பூர்வமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஈராக்கிய பெண்கள் சுதந்திர அமைப்பின் (OWFI) தலைவரான யானார் முகமது, “இச்சட்டமானது நவீனக் காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்து பெண்களை இன்பத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்தும் உடைமையாக மாற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பல ஈராக்கிய பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இப்புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டதுடன் சமூக ஊடகங்களில் தங்களது எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
“நாட்டை 1,500 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி செல்லும் சட்டத்தை நிறைவேற்றுவது வெட்கக்கேடான விசயம். கடைசி மூச்சு உள்ள வரை நாங்கள் போராடுவோம்” என்று ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர் ஹெபா அல்- டபூனி தெரிவித்தார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாக்தாத் நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் சுமார் 500 பெண்கள் உரிமை வழக்குரைஞர்கள், “சிறுவர்களுக்குத் திருமணம் செய்யக் கூடாது போன்ற பதாகைகளுடன் புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திருத்தத்திற்கு எதிராக சிவில் சமூகம் மற்றும் பெண்கள் உரிமைக் குழுக்களால் கடந்த வார இறுதியில் பொது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
இத்தொடர்ச்சியான மக்களின் போராட்டங்கள் மூலம் மசோதா சட்டமாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
படிக்க: ‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
ஈராக்கில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானிலும் பெண்கள் வீட்டை விட்டு தனியாக வெளியே செல்வதற்குத் தடை, படிப்பதற்குத் தடை என பெண்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் செலுத்தப்படுகின்றன.
வல்லரசு நாடு என்று சொல்லிக்கொள்ளப்படும் அமெரிக்காவில் சில மாகாணங்களில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்குத் தடை உள்ள நிலையில், வருகின்ற டிரம்ப் ஆட்சியில் இது அமெரிக்கா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்பதால் அதற்கு எதிராகப் பெண்கள் போராடி வருகின்றனர்.
ஈரானில் பெண்கள் மீதான ஆடை கட்டுப்பாடு தீவிரமாகப் பின்பற்றப்படுகின்ற நிலையில் சமீபத்தில் ஆடைக் கட்டுப்பாட்டிற்கு எதிராகப் பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து, ஈரான் அரசானது ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை அளிப்பதற்கான மையத்தைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் ஆண் தையல்காரர்களிடம் துணிகளைத் தைக்கக்கூடாது; ஆண் பயிற்றுநர்கள் இருக்கும் ஜிம்களுக்குச் செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவர யோகி ஆதித்யநாத் அரசு முடிவுசெய்துள்ளது. அதேபோல் நீதிமன்றங்களும் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் சில தீர்ப்புகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஈராக், ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெடித்திருக்கும் பெண்கள் போராட்டங்களைத் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற பிற வர்க்கத்தினருடன் இணைத்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராக வலுவான போராட்டமாகக் கட்டியமைக்க வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram