பாகிஸ்தான் இராணுவப் பாடலை காப்பியடித்த பாஜக எம்.எல்.ஏ.!

ருபத்தி நான்கு மணி நேரமும் ‘தேசப்பற்று’ முழக்கங்களை எழுப்பி ‘எதிரி’ நாடான பாகிஸ்தானுடன் ‘இந்துத்துவ தேசபக்தர்கள்’ போர் புரிய காத்திருக்கிறார்கள்.  குறிப்பாக நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலுக்காக பாஜக அதிக இறைச்சலுடன் தேச பக்தி முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது. இதில்கூட சொந்தமாக சிந்திக்காமல், அடுத்தவரின் சிந்தனையைத் திருடிக்கொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல்.

பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவு சமீபத்தில் ‘பாகிஸ்தான் தேசப்பற்று’ பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதே மெட்டுடன் கிட்டத்தட்ட இதே வரிகளுடன் அந்தப் பாடலை அப்படியே திருடியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த ‘தேசபக்தர்’ ஒருவர்.

படிக்க:
♦ மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

தெலுங்கானா எம்.எல்.ஏ-வான ராஜா சிங், ஏப்ரல் 14-ம் தேதி – ராமநவமியின் போது இந்திய ராணுவத்துக்கு பாடல் ஒன்றை காணிக்கையாக்குவதாகக் கடந்த வெள்ளிக் கிழமையன்று தனது டிவிட்டரில் அறிவித்திருந்தார்.

அவ்வாறு வெளியிடப்பட்ட பாடலானது, கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் நாளுக்காக சாபிர் அலி பக்கா என்ற பாடகர் பாடி, பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டிருந்த பாடலை அப்படியே திருடியிருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட பாடல் வரிகளும்கூட திருடப்பட்டிருந்தது. ஒன்றைத் தவிர, அசல் பாடலில் இருந்த ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்பதற்கு பதிலாக, ‘இந்தியா ஜிந்தாபாத்’ என்ற வரிகள் மட்டும் ‘தேச பக்தர்’ ராஜா சிங்-கால் பாடலில் மாற்றப்பட்டிருந்தது.

அசல் பாடல் :

பாஜக தேசபக்தரின் இந்த ‘தேசப்பற்று’ பாடல் திருட்டை, டிவிட்டர்வாசிகள் கண்டுபிடித்துவிட்டனர். இது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் கஃபூர், “காப்பியடித்தது குறித்து மகிழ்ச்சி. ஆனால், இந்த காப்பி, உண்மையை பேசுகிறது” என கருதிட்டு ராஜா சிங்கின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.  புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை விமானம், பாகிஸ்தான் பகுதிக்குச் சென்று பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியாக இந்தியா சொன்னது. அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என பாகிஸ்தான் சொன்னது. இதைத்தான் ‘உண்மையை பேசுகிறது’ என்கிறார் ஆசிப்.

இந்த ட்விட்டை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளதோடு, 3500 பேருக்கு மேல் பின்னூட்டமிட்டுள்ளனர். ‘காவலாளி, பாடல் திருடர்’ என்றும் ‘திருடுவதற்குக் கூட கொஞ்சம் அறிவு வேண்டும், இந்த ஆள் திருட்டை பெருமையாக செய்திருக்கிறார்’ என்றும் ‘நம்முடைய அழகான பாடலைக் கொன்றுவிட்டார்கள்’ என்றும் பலர் பகடி செய்துள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹமீது மிர், “நான் இதில் மகிழ்ச்சியடையவில்லை. இது நகலெடுப்பு அல்ல, திருட்டு! ஆனால், இந்த திருட்டும்கூட ஈர்க்காத குரல் மூலம் அர்ப்பணிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துகிறது” என எழுதியுள்ளார்.

“இந்தியாவில் #ChokidaarChorHai ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. காரணம் ஆளும் பாஜக எம்.எல்.ஏ. சோக்கிதார் ராஜா சிங், பாகிஸ்தான் இராணுவப் பாடலை காப்பியடித்திருக்கிறார்” என மியான் காதேப் அடில் சொல்கிறார்.

“அருமையான அசல் பாடல், இது பாகிஸ்தானிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று இப்போது அதே வெறுப்பாளர்கள் சொல்வார்கள். இல்லை.. உண்மையில் இது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ராஜா சிங்கின் மனதில் இருந்து திருடிக்கொண்டது. ஜெய் ஹிந்த்” என பகடி செய்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

இந்தத் திருட்டில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ‘காவலாளி’ ராஜா சிங், பாகிஸ்தான் ஊடகங்கள்கூட தன்னுடைய பாடல்குறித்து எழுதவதாக ‘இழிபெருமை’யை பெருமையாக பேசுகிறார். ’தீவிரவாத நாடான பாகிஸ்தான்கூட பாடகர்களை உருவாக்குவதை நினைத்து ஆச்சரியமடைகிறேன். பாகிஸ்தான் பாடகர்கள் என்னுடைய பாடலை காப்பியடித்திருக்கலாம்.  நாங்கள் பாகிஸ்தான் போன்ற தீவிரவாத நாடுகளிடமிருந்து எதையும் காப்பியடிப்பதில்லை’ என தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கிறார் இவர்.

இந்தியாவை மதவாத தீவிரவாத நாடாக மாற்றுவதில், பாகிஸ்தானை காப்பியடிக்கும் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த ராஜா சிங், பட்டப்பகலில் திருட்டை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து எந்தவித கூச்சமும் இல்லாமல், பாகிஸ்தான் காப்பியடித்துவிட்டதாக விளக்கம் வேறு தருகிறார். மாட்டு மூளை கும்பல் தங்களைப் போலத்தான், ஒட்டுமொத்த உலகமும் இருக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறது.


கலைமதி
நன்றி :
ஸ்க்ரால்