“நீங்கள் வாக்களிக்கும்போது, தாமரை சின்னத்தில் அழுத்துங்கள்… நீங்கள் அழுத்தும்போது தீவிரவாதத்தை அகற்றுகிறீர்கள் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் விரல்களுக்கு ஆற்றல் இருக்கிறது. தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்போது தீவிரவாதத்துக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் என்னுடைய உறுதிமொழிக்கு வலு சேர்க்கிறீர்கள்.”

இந்திய நாட்டின் பிரதமர், அண்டை நாடான இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததற்கு ஊடகங்களில் வருத்தம் தெரிவித்துவிட்டு தீவிரவாதம் குறித்து உடனடியாக உதிர்த்த வார்த்தைகள் இவை. பிணங்களின் மீதே அரசியல் செய்து பழகிவிட்ட ஒருவரால்தான், இப்படி கூச்சநாச்சமே இல்லாமல் மரணங்களிலும் ஓட்டு கேட்க முடியும்.

முன்னதாக குண்டுவெடிப்பின் ரத்த ஈரம் காய்வதற்குள் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி, “இலங்கையில் நடந்த தீவிரவாத நடவடிக்கை காரணமாக இப்போது  இந்தியாவில் பாஜக அரசுதான் வரவேண்டும். ஏனெனில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவானது. விரைவில் திக்விஜய் கொழும்பில் நடந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாதமே காரணம் என அறிவிப்பார்” என டிவிட்டரில் கருத்திட்டார்.

சாமியின் ஈனத்தை கண்டித்த இலங்கையைச் சேர்ந்த உமாசங்கர் பிரசாந்த், ‘நாயே எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாத, என் கண்ணில பட்டியெண்டா கல்லாலையே அடிப்பன் ’ பதிலடி கொடுத்தார்.

“இலங்கை விசயத்திலிருந்து தள்ளியிருங்கள்.. அருவருப்பாக உள்ளது” என இலங்கையைச் சேர்ந்த நிலாங்கா கண்டனத்தை பதிவு செய்தார்.

“அரசியல் தரகர் தன்னுடைய வேலையை ஆரம்பித்துவிட்டார். மக்களுடைய துன்பங்களை முதலாக்கி அவருடைய தலைவர்களுக்கு காணிக்கையாக விரும்புகிறார்” என சாமியின் நோக்கத்தை சொல்கிறது கிருஷ்ணகுமாரின் ட்விட்.

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குண்டுவெடிப்பை நிகழ்த்தியது இஸ்லாமிய அமைப்புகளே என பாஜகவினரும் இந்துத்துவ ட்ரோல்களும் சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்தனர்.  இந்திய ஊடகங்களும் பாஜகவினரும் தங்களுடைய நாட்டில் நடந்த துயரத்தை சொந்த லாபத்துக்காக பயன்படுத்துவதாக இலங்கை மக்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர்.  மோடியின் பேச்சு அரசியல் சந்தர்ப்பவாதம் எனவும் பலர் கண்டித்தனர்.

படிக்க:
புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !
♦ இலங்கை குண்டுவெடிப்பு

“1980-களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோமா? பலவீனமான பிளவுபட்ட அரசியல் உயரடுக்கு, சர்வாதிகாரமான ஆனால் பலவீனமான அரசு, பிளவுபட்ட சமூகம், உள்நாட்டு பிரச்சினைகளில் சர்வதேசத் தலையீடு, இடைவிடாத இந்திய குறுக்கீடு?” என இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலையும் அதில் இந்திய அரசின் தலையீட்டையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் அசங்கா வெலிகாலா.

இந்திய ஊடகங்களின் ‘புலனாய்வு’ குறித்து பதிவு செய்துள்ள அனிஸ் அகமது, “ஸ்ரீலங்கா என கூகுள் செய்யுங்கள்.. இந்திய ஊடகங்களின் செய்திகளையும் சர்வதேச ஊடகங்களின் செய்திகளையும் ஒப்பு நோக்குங்கள். இலங்கை அரசு இன்னமும் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்திய ஊடகங்கள் குண்டுவெடிப்பை முசுலீம் அமைப்புகளோடு தொடர்புபடுத்தி எழுதுகின்றன.” என்கிறார்.

“இந்திய ஊடகங்களும் சில இந்திய அரசியல்வாதிகளும் இலங்கையின் துயரத்தை தங்களுடைய சொந்த அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது” என்கிறார் அருணி.

“இத்தனை விரைவில், இலங்கையின் துயரம் இந்தியத் தேர்தலுக்குத் தீனியாகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. நம் நாடு துக்கத்தில் இருக்கிறது. அவர்களுடைய ஊடகங்களும் பாஜக அரசியல்வாதிகளும் உதவிக்கு வரவில்லை” என தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் இண்டி சமரஜிவா.

இலங்கை மக்களின் கண்டனத்துக்கு பதிலளித்திருக்கும் பல இந்தியர்கள், அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக ஆதரவு தெரிவிக்கின்றனர்; பாஜக-வின் கீழ்த்தரமான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


அனிதா
செய்தி ஆதாரம் : தி க்விண்ட் 

3 மறுமொழிகள்

  1. நேற்று நான் சொல்லல அங்க சுத்தி இங்க சுத்தி கடையில் பிஜேபிக்கு வருவீங்க இன்னும் கொஞ்ச நாள் போனால் பிஜேபி தான் இலங்கையில் குண்டு வைக்க சொன்னது என்று பொய்யை அவிழ்த்து விடுவீர்கள்… சுப்ரமணிய சுவாமி பேசியது எங்கள் இந்தியாவை பற்றி நீங்கள் உங்கள் பாக்கிஸ்தான் சீனாவிற்காக கவலைபடுங்கள் எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

    உங்களை போன்ற கம்யூனிஸ்ட் மூன்றாம் மனிதர்கள் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட தேவையில்லை.

  2. “நீங்கள் உங்கள் பாக்கிஸ்தான் சீனாவிற்காக கவலைபடுங்கள் எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்”

    So Indian government did not start the Sri Lankan armed conflict from the suffering of Sri Lankan Tamils ??????

    • முன்பு விடுதலை புலிகளின்(பிரபாகரனின்) பாசிச குணத்தை புரிந்துகொள்ளாமல் இந்தியா புலிகளுக்கும் மற்ற போராளி இயக்கங்களுக்கு உதவி செய்தது, அதுவும் கூட பிரிவினைக்கு அல்ல, வலுவான நிலையில் இருந்து கொண்டு இலங்கை அரசிடம் பேசும் போது இலங்கை தமிழர்கள் கேட்கும் உரிமைகளை பெறலாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் பிரபாகரனின் தனிப்பட்ட சுயநலத்தினால் தானும் அழிந்து யாருக்காக போராடுகிறோம் என்று சொன்னாரோ அவர்களையும் சேர்த்து அழித்து விட்டார், இந்த அழிவிற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே. இதில் இந்தியாவையோ அல்லது மற்ற நாடுகளையோ குறை சொல்வது எந்த வகையிலும் சரியல்ல

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க