பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களையும், வெறியூட்டி தூண்டி விட்ட பா.ம.க தலைமையையும் கைது செய்!

சாதி-மத வெறிக் கருத்துகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டிவிடும் அமைப்புகளைத் தடை செய்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்   : 25.04.2019 வியாழன்,
நேரம் :
மாலை 5.30 மணி,
இடம்  : 
குறத்தெரு, உறையூர், திருச்சி.

தலைமை:

தோழர் ஞா. ராஜா,
ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

சிறப்புரை: 

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

மற்றும் பிற அரசியல் கட்சியினர், ஜனநாயக சக்திகள் உரையாற்றுகின்றனர்.

தமிழக அரசே!

  • பானைக்கு வாக்களித்த தலித் மக்களை பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • பாதிக்கப்பட்ட பொன்பரப்பி தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!

தமிழக மக்களே!

  • ஆளை மாற்றும் தேர்தலால் அகன்று விடாது சாதி வெறி!
  • அரசுக் கட்டமைப்பை மாற்றுவதொன்றே சாதி வெறியை வீழ்த்தும் வழி!

பொன்பரப்பி வன்கொடுமைக் குற்றத்துக்கு மருத்துவர் ராமதாசே முழுப்பொறுப்பு !

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இது காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரீக சமூகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.

நமது சமூகத்தின் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்துபவை சாதி-மதவெறி அமைப்புகள்தானே தவிர, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல, இது ஜனநாயகமும் அல்ல என்பதையே இந்த சாதிவெறித் தாக்குதல் தெளிவாக நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்ட யாரும் இந்த தாக்குதலைத் தடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை . இவர்கள் அனைவருமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரிக்கக் கூடாது என பிள்ளை, வன்னியர், செட்டியார், பார்ப்பனர், நாயுடு என பிற ஆதிக்க சாதியினர் அனைவர் மத்தியிலும் பிரச்சாரம் நடந்திருக்கிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி உணர்வை மனதில் வைத்து பானை சின்னத்தை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு தீண்டாமை வெறியைத் தூண்டியிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.

சிதம்பரம் நகரத்திலேயே நடைபெற்ற இந்த பிரச்சாரத்துக்கும், பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.-வினர் கையில் ஆயுங்களுடன் இந்து முன்னணி உடன் சேர்ந்து கொண்டு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இது வெறும் பொருட்சேதம் குறித்த பிரச்சினை அல்ல, ஜனநாயகம் என்பது பெயரளவில் கூட இருக்கக் கூடாது என்பதுதான் இந்த தாக்குதல் மூலம் சாதி-மத வெறியர்கள் நமக்குக் கூறும் செய்தி. அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியாமல் சாதி மத வெறி கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பாசிச அதிகாரத்தை அரசிலும் சமூகத்திலும் வேரூன்ற செய்வதுதான் இத்தகைய தாக்குதல்களின் நோக்கம்.

இசுலாமிய, கிறுஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்துக்களிடம் மதவெறியைத் தூண்டி அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ, அதே சூத்திரத்தை பயன்படுத்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் மூலம் சாதிவெறியைத் தூண்டி பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயமடைகிறது. தேசியக் கட்சியான மதவெறி பாஜகவும், மாநிலக் கட்சியான சாதிவெறி பாமகவும் இணையும் புள்ளி இதுவே! இந்த அடிப்படையில்தான் அந்த கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட இயற்கைக் கூட்டணி அது!

தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். இதில் தேர்தல் கட்சிகளும், பெரும்பான்மை சமூகத்தினரும் அமைதியாக இருப்பதும், பா.ம.க. இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

இது பொன்பரப்பி தலித் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை!

கொலை மிரட்டல் விடுத்து, கும்பலாக நமது வீட்டை அடித்து நொறுக்கினால், நாம் என்ன நீதியை அரசிடம், சமூகத்திடம் கோருவோமோ அந்த நீதி பொன்பரப்பி மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்!


தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம்,
திருச்சி – 94454 75157 .
மணப்பாறை – 98431 30911.
கரூர் – 97913 01097.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க