அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 6

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

விரைவில் அடுத்த பாடவேளை துவங்கும் மணி அடிக்கும். நான் ஏற்படுத்திய சூழல் இடைவேளையில் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். என்ன நடக்கிறது? இன்று தாமாகவே மேற்பார்வையாளர்களாக இருக்கும் பெற்றோர்கள் சுவரில் தொங்கும் தாளில் குழந்தைகள் வரைவதைத் தடை செய்கின்றனர், சிரிப்புப் படங்களைத் தொடவிடாமல் தடுக்கின்றனர். குழந்தைகளிடமிருந்து விளையாட்டுச் சாமானைப் பிடுங்குகின்றனர். குழந்தைகளை அடக்கும் குடும்ப அனுபவம் பள்ளி இடைவழியில் புகுந்து, குழந்தைகளின் குறும்புகளை மாற்றியமைக்கும் என் நோக்கங்களுக்குக் குறுக்காக நிற்கிறது. “குழந்தை வளர்ப்பு, பெற்றோர் வளர்ப்பிலிருந்து துவங்க வேண்டும்” என்று எப்போதோ ஒரு முறை ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூறியது என் நினைவிற்கு வருகிறது. இன்றே முதல் பெற்றோர் கூட்டத்தை நடத்துவது என்ற முடிவிற்கு வருகிறேன். முதல் இடைவேளையைக் குலைக்க பெற்றோர்கள் செய்த முயற்சி பலிக்கவேயில்லை.

நான்காண்டு காலக் கல்வியின் போது மொத்த இடைவேளை நேரம் 166,500 நிமிடங்கள். இந்த நேரத்தை வீணாக்காமல் நன்கு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது ஆசிரியர் தன் மாணவர்களுடன் நன்கு கலந்து பழகும் 175 நாட்களுக்குச் சமமாகும்.

இனிய மணியோசை கேட்கிறது. “குழந்தைகளே, வகுப்பறையினுள் வாருங்கள். சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பது நினைவில் இருக்கட்டும்!”

“நம்மில் யார் சரி, யார் தவறு?”

அனேகமாக எல்லாக் குழந்தைகளுக்கும் பத்து வரை அல்லது இருபது வரை, ஏன் நூறு வரை கூட எண்ணத் தெரிந்திருக்கும். என் அனுபவத்திலிருந்து இது எனக்குத் தெரியும். இவர்களில் ஒவ்வொருவரும் “ ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு -ஐந்து” எனும் பாடலை தங்கு தடையின்றி சரளமாகச் சொல்வதை சரிபார்க்க வேண்டுமா என்ன? இதை இன்று செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் குழந்தைகளுக்கு எண்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களுக்குப் பழக்கமில்லாதவற்றிலிருந்து துவங்குவது நல்லது. இது அவர்கள் ஏற்கெனவே அறிந்தவற்றைப் பயன்படுத்துவதாயும், “ஒன்று – இரண்டு – மூன்று – நான்கு – ஐந்து’ எனும் மனப்பாடப்பாட்டிற்கு பொருளைத் தருவதாயும் இருக்கும்.

ஆனால், முதலில், நமது தாய்மொழிப் பாடவேளையில் அட்டைப்பெட்டியில் எவ்வளவு அட்டைவில்லைகள் (சொற்கள்) சேர்ந்தன என்பதைப் பார்க்க வேண்டும். இலிக்கோ அட்டைப்பெட்டியை எடுத்து வர அவன் பின் தேன்கோவும் மாயாவும் வருகிறார்கள். “ஏராளமாக உள்ளன!” என்கிறாள் மாயா. “நூறுக்கும் மேலே!’ என்று விளக்கினான் தேன்கோ . “பார்த்தீர்களா, இன்று நாம் எவ்வளவு வார்த்தைகளைச் சேகரித்துள்ளோம்! நாளை நாம் இன்னமும் அதிகமாகச் சேர்க்க வேண்டும்” என்று நான் குழந்தைகளைப் பார்த்துக் கூறுகிறேன். “வார்த்தை அட்டைவில்லைகளை எண்ண உதவியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி!.”

“உங்களுக்கு எதற்கு இவ்வளவு நிறைய சொற்கள்?” என்று நாத்தோ கேட்கிறான்.

”எனக்கு வேண்டும்!”

“நான் இதை அடுத்த முறை விளக்குவேன்!” என்று நான் நாத்தோவிடம் கூறுகிறேன். “இப்போது கணிதப் பாடத்தைத் துவக்குவோம்.”

சாதாரணமாக முதல் கணித வகுப்பில், குழந்தைகள் கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க கற்றுக் கொள்ளத் துவங்குவதாக விளக்குவார்கள். இது குழந்தைகளுக்குப் புரியக் கூடிய ஒரு விளக்கம் என்று கருதப்படுகிறது. ஒருவேளை உண்மையிலேயே இது சரியாக இருக்கலாம். ஆம், உண்மையிலேயே, ஐந்து ஆப்பிள்களிலிருந்து மூன்று ஆப்பிள்களை எப்படிக் கழித்து மீதியிருப்பதை அறிவது; அல்லது மூன்று கடலைகளுடன் ஆறு கடலைகளை எப்படிச் சேர்ப்பது , பத்து பேரிக்காய்களை இருவருக்கு எப்படிப் பகிர்ந்தளிப்பது, என்றெல்லாம் கூறினால் குழந்தைகளுக்கு நன்கு விளங்கும். ஆனால் கூட்டுவதும் கழிப்பதும், பெருக்குவதும் வகுப்பதும் மட்டுமே கணிதத்தின் சாரம் இல்லை அல்லவா !

படிக்க:
அச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது ?
நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

முறையியல் ரீதியாக நான் தவறிழைத்தாலும் நான் செய்வது இப்படித்தான்.

“குழந்தைகளே, கணித விஞ்ஞானம் என்றால் என்ன தெரியுமா?”

தாம்ரிக்கோ: “அதாவது, நூறு வரை எண்ணுவது…”

எலேனா: ‘நூறு வரை எண்ணத் தெரிய வேண்டும், இது தவிர கூட்டத் தெரிய வேண்டும்… எனக்கு கூட்டத் தெரியும்… ஐந்தும் ஐந்தும் பத்து ….”

வாஹ்தாங்: “எனக்கும் கூட்டவும் கழிக்கவும் தெரியும்…. அப்பா சொல்லித் தந்தார்…”

நான் கரும்பலகையை அணுகி, திரையை விலக்குகிறேன். அதில் நியூட்டன் விதியும், வழிச் சார்பும் வண்ண சாக்பீஸ்களால் எழுதப்பட்டிருந்தன, டெக்கார்ட்டிசின் கூற்றுத் தொகுதி சார்பாலனோடு வரையப்பட்டிருந்தது .

சாஷா: “என்ன இது? எவ்வளவு அற்புதமான எழுத்துக்கள்!”

பலரின் கண்கள் அகல விரிந்தன, கரும்பலகையில் உள்ளதை நன்கு பார்ப்பதற்காகப் பலர் தம் இடங்களை விட்டு எழுந்தனர்.

“இது உண்மையான கணிதம், அளவின உறவுகள் மற்றும் இடஞ்சார்ந்த வடிவங்களைப் பற்றிய விஞ்ஞானம்.”

“எவ்வளவு அழகாயுள்ளது!” என்று கரும்பலகையிலிருந்து கண்களை அகற்றாத படி லேலா ஆச்சரியத்துடன் கூறுகிறாள்.

“ஏனெனில் கணிதமே அழகானது, இது தான் விஞ்ஞானங்களிலேயே ராணி போன்றது என்கின்றனர் அறிஞர்கள். இந்தச் சூத்திரங்கள் உங்களுக்குப் பிடித்துள்ளனவா?”

கணிதத்தைப் பற்றிய இவ்விளக்கம் குழந்தைகளுக்குப் புரியுமா? நான் கூறியதிலும் காட்டியதிலும் பல விஷயங்கள் அவர்களுக்கு நிச்சயமாகப் புரியவில்லை. ஆனாலும் அவர்களுக்கு எவ்வளவு சுவாரசியமாக இருந்தது தெரியுமா!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க