ங்களால் இதை நம்ப முடிகிறதா? உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், தன் இளமைக் காலத்தில், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னால், அது எவ்வளவு பழமையானதாக உங்களுக்குத் தோன்றும்.

இன்றைய உலகின் அனைத்து நவீனக் கருவிகளையும் கைக்கொண்டிருக்கும் நீங்கள், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த, அந்தப் பூட்டனின் சாதனையை ஒரு ஏளனச் சிரிப்புடனே பார்ப்பீர்கள். அவரிடம் என்ன இருந்திருக்கும்? கணணி இல்லை. மொபைல் போன் இல்லை. எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமே!

அந்தக் காலத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்? அப்படியான ஒரு காலத்தில், கிட்டத்தட்ட நூற்றி நான்கு வருடத்திற்கு முன்னர், 1915-ம் ஆண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்னும் ஒருவர், வெறும் கணிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, விண்வெளிபற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். அப்போது, அவரிடம் கணணி இருக்கவில்லை. கால்குலேட்டர் இருக்கவில்லை தொலைக்காட்சியும் இருக்கவில்லை. இன்றுபோல உடனுக்குடன் சொல்லிவிடக்கூடிய மீடியாக்களும் இல்லை. தன் மூளையில் விண்வெளிபற்றிய எண்ணங்களைப் படமாகச் சித்தரித்துக் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கோட்பாடு உருவாக்கினார்.

விண்வெளியிலிருக்கும் அதி எடைகொண்ட பொருளானது அந்த விண்வெளியில் ஒரு குழியை உருவாக்கும் என்றார். அதுவே, எல்லையில்லா எடைகொண்டு அந்தப் பொருள் இருந்துவிட்டால், ஏற்படும் குழியானது, ஒருமைப் புள்ளியொன்றை அடையும் வரை ஆழமாகிச் செல்லும். அந்தக் குழியிலிருந்து ஒளிகூடத் தப்பிச்செல்ல முடியாது என்றார்.

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழியை நாம் உருவாக்க வேண்டுமென்றால், எங்கே உருவாக்க முடியும்? பூமியின் மண் தரையில் ஒரு குழியை உருவாக்க முடியும். எந்தவொரு திடமான பொருளிலும், ஏதோவொரு விதத்தில் நம்மால் குழியை உருவாக்கிவிட முடியும். கடல் நீரில் ஒரு குழியை உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? அதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

ஆனால், ஒரு கப்பலைக் கடலில் விடும்போது, அது நிற்குமிடத்தில், அதன் எடைக்கேற்பத் தண்ணீர் குழிகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். தண்ணீரில் நம்மால் குழியை உருவாக்க முடியுமா? முடியுமென்றுதானே தோன்றுகிறது. கப்பல்களின் எடை அதிகரிப்புக்கு ஏற்ப அது ஏற்படுத்தும் குழியும் ஆழமாக இருக்கும். இதே அடிப்படையில், விண்வெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

இப்படி அவர் சொன்னதை எவராலும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் பார்ப்பது வானம். வானத்தில் நட்சத்திரங்கள். அப்படி இப்படியென்று நினைத்துக் கொண்டிருக்கையில், அங்கே வானம் என்ற ஒன்று இல்லை. இருப்பது, இரப்பர் பாய்போன்ற ஒன்றுதான். அந்தப் பாயிலேயே, நட்சத்திரம் போன்றவை இருக்கின்றன. அவை, அந்தப் பாயில் பெருங்குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

“என்ன, விண்வெளியில் குழியா? அது எப்படிச் சாத்தியம்? பூமியில் குழி இருப்பது சரி. ஏன் கடலில் கப்பல் குழி ஏற்படுத்துகிறது என்பதும் சரிதான். ஆனால், விண்வெளியில் குழியை எப்படி ஏற்படுத்த முடியும்? இவரென்ன இரப்பர் பாய், மென் சவ்வு, அது இது என்று சொல்கிறாரே! எந்தப் பாயையும் நாம் காணவில்லையே!” என்று சொல்லி திகைத்து நின்றது உலகம்.

அத்துடன் ஐன்ஸ்டைன் சொன்ன இன்னொன்றையும் கேட்டு அறிவியல் உலகமே பதைத்துப் போனது. 350 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கொண்டிருந்த ஒன்றை இல்லையென்று சொல்கிறாரே இவர் என்று தடுமாறியது.

படிக்க:
ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் – ஒரு எளிய விளக்கம்
♦ கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

1680-ம் ஆண்டளவுகளில், ஐசாக் நியூட்டனால் புவியீர்ப்புவிசைக்கான புரட்சிகரக் கருதுகோள் வெளியிடப்பட்டது. அந்தக் கருதுகோளையே மாற்றிச் சொன்னார் ஐன்ஸ்டைன். ஐசாக் நியூட்டன் சொல்லியிருந்த புவியீர்ப்புவிசைபற்றிய கோட்பாட்டையே நம்பிவந்தவர்களுக்கு, ஐன்ஸ்டைன் தடைக்கல் போட்டார். மேலே சொன்னதுபோல, அதி எடைகொண்ட ஒவ்வொரு பொருளும் விண்வெளியில் ஏற்படுத்தும் குழிவே, அப்பொருளை நோக்கிய ஈர்ப்பை உருவாக்குகிறது என்றார்.

உதாரணமாகப் பூமியானது, விண்வெளியில் ஏற்படுத்தியிருக்கும் குழிவின் வளைவுக்குள் அகப்பட்டுக்கொண்ட சந்திரன், அந்தக் குழியினுள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே பூமிக்கும், சந்திரனுக்குமான ஈர்ப்புக்கான காரணம். இதுபோலவே, சூரியன் ஏற்படுத்தியிருக்கும் பெருங்குழியில், பூமி உட்பட ஏனைய ஏழு கோள்களும் அகப்பட்டபடி சூரியனைச் சுற்றுகின்றன. நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைக்கு மாற்றாக ஐன்ஸ்டைன் முன்வைத்ததை, ஏற்க முடியாமலும், விலக்க முடியாமலும் தவித்தது உலகம்.

காலம் செல்லச் செல்ல ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புக் கோட்பாடு சரியெனப் புரிந்துகொண்டது உலகம். அதன் நீட்சியாக ஐன்ஸ்டைன் சொல்லியிருந்ததுதான் கருந்துளைகான வித்தாகியது. கருந்துளைக்கு எல்லையில்லா அதியீர்ப்பு உண்டு என்பதால், அது விண்வெளியில் நினைக்கவே முடியாத ஆழம்வரை பெருங்குழியை ஏற்படுத்தும். அந்தக் குழியின் முடிவு, ஒற்றைப் பரிமாணமுள்ள ஒருமைப்புள்ளியாக இருக்கும் என்றார்.

கருந்துளைபற்றி இவ்வளவு விவரமாக விளக்கிச் சொன்னாரேயொழிய, அவர் இருக்கும்வரை அப்படியானதொன்று உண்மையில் இருக்கிறது என்பதை நிறுவவே முடியவில்லை. ஒருகட்டத்தில் கருந்துளை என்ற ஒன்று இல்லையென்ற சந்தேகம்கூட அவருக்குத் தோன்றியது. ஆனால், இன்று நூற்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

இதுவரை அப்படியானதொன்று இருக்கிறது என்று அடித்துச் சொன்னாலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அதைக் கண்டுபிடித்து, அதன் உருவத்தையும் படமெடுத்திருக்கிறோம். மனித குலத்தின் மாபெரும் சாதனை அது.

எப்படி அதைக் கண்டுபிடித்தோம்? அது இன்றைய விஞ்ஞானிகளின் அற்புதமான புரட்சிச் சிந்தனையால் சாத்தியமாயிற்று. எப்படி?

உலகிலேயே மிகப்பெரிய காணொளிப்பெட்டியை (Television) துபாய் மோலில் வைத்திருக்கிறார்கள். அது ஒரேயொரு காணொளிப் பெட்டியாக இருந்தாலும். சற்றே உற்று நோக்கினால், ஆயிரம் சிறிய காணொளிப் பெட்டிகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்று தெரியவரும். அதாவது ஆயிரம் சிறிய காணொளிப்பெட்டிகள் சேர்ந்து ஒரு மிகப்பெரிய காணொளிப்பெட்டியாக மாறியிருக்கிறது. இதுபோன்ற பெரிய திரைகளை நீங்களும் விழாக்களில் கண்டிருப்பீர்கள்.

‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ அமைந்துள்ள பகுதியை சுட்டும் படம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்திலும் ஒன்று சொல்வார்கள். பல நுண்ணுயிரிகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்தான் மனிதன் என்னும் ஒரு உயிர் என்பார்கள். இவற்றைச் சரியாக நீங்கள் புரிந்துகொண்டால் போதும். கருந்துளையைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். அதாவது 55 மில்லியன் ஒளி வருட தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கருந்துளையைப் பார்ப்பதென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் எந்தத் தொலைநோக்கியாலும் சாத்தியமேயில்லாதது. அதற்குப் பூமியளவு பெரிய தொலைநோக்கி தேவைப்படும். அப்படியொரு தொலைநோக்கியையை நான் மேலே சொன்ன உத்தி முறையால் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தொலைநோக்கிதான் ‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ (Event Horizon Telescope – EHT). இது உலகின் பல இடங்களில் பரந்துபட்டுள்ள எட்டு மிகப்பெரிய தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் தொலைநோக்கி.

நிகழ்வெல்லைத் தொலைநோக்கிகள் பற்றிப் பலர் பலவிதமான கட்டுரைகள் எழுதிவிட்டதால், பொதுவானவற்றைத் தவிர்த்து, உங்கள் சந்தேகங்களுக்கான விடைகளை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.

நீண்டு பரந்திருக்கும் மெரினாக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கு யாருமே இல்லை. நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். உங்கள் கையில் இருக்கும் கடுகை எடுத்து மணல் பரப்பில் வையுங்கள். சற்றுத் தள்ளிச் சென்று கடுகைப் பாருங்கள். அப்போது கடுகு உங்களுக்குத் தெரிகிறதென்றே வைத்த்துக் கொள்வோம். நூறு மீட்டர் தொலைவுக்குச் சென்று பாருங்கள் . இப்போது கடுகு தெரியுமா? இன்னும் சற்றுத் தொலைவாக, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள். இப்போது கடுகைப் பார்க்க முயல்வதென்னும்போதே உங்களுக்குச் சிரிப்பு வரும்.

இதுவே 13000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்றால், அங்கு கடுகில்லை, மெரினா கடற்கரைகூட இல்லை, சென்னையே தெரியாதல்லவா? ஆனால், பதின்மூன்றாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து, ஒரு கடுகை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்தது கடுகல்ல, இராட்சசன். 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் இராட்சசன். ’மெஸ்ஸியர் 87’ (Messier 87. சுருக்கமாக M87) என்னும் உடுத்திரளின் கருவாக அமைந்திருக்கும் கருங்குழியே அந்த இராட்சசன்.

அது என்ன இராட்சசக் கருங்குழி? சாதாரனமாகப் பல மில்லியன் கருங்குழிகள் நம் பால்வெளி உடுத்திரளிலேயே நிறைந்திருக்கின்றன. அவையெல்லாம் ‘சூசூ டிவி’ பார்க்கும் குட்டிப் பாப்பாக்கள். பெரிய நட்சத்திரங்கள் இறந்து உருவாகும் குழந்தைகள். ஒரு பேச்சுக்கு, நம் சூரியன் இறந்து கருங்குழியானால் (சூரியன் கருங்குழி ஆகாது. அதற்கான போதிய எடை அதற்கு இல்லை), வெறும் 3கிமீ அளவுள்ள கருங்குழியாகவே இருக்கும்.

இதுபோன்ற சாதாரணப் பால் குடிகள் நிறைந்ததுதான் பால்வெளி. அவற்றையெல்லாம் பார்க்கவே முடியாது. சில கிலோமீட்டர் அளவுள்ள கருந்துளைகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. கருப்பானாலும் களையாயிருப்பது இராட்சச கருங்குழிகள் மட்டுமே. ஒவ்வொரு உடுத்திரளும் (Galaxy), தன் மையக்கருவாக ஒரு இராட்சச கருங்குழியைக் கொண்டிருக்கும். அப்படியான ஒன்றைத்தான், M87 உடுத்திரளின் மத்தியில் நாம் கண்டிருக்கிறோம்.

M87 இன் மையக் கருங்குழியானது, சூரிய எடையைப்போல் ஆறரை பில்லியன் மடங்கு பெரியது. அதன் விட்டம் 20 பில்லியன் கிலோமீட்டர்கள். அதைச் சுற்றிவரும் ஒளித்துகள்களுடன் சேர்த்து, 100 பில்லியன் கிலோமீட்டர் விட்டம் கொண்டது. இதுவே, 550 பில்லியன் பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால், ஒரு கடுகை 13000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்பது போன்று தெரிகிறது. இப்போது சொல்லுங்கள். இவ்வளவு தூரத்திலிருந்து எடுக்கப்படும் படம், எப்படித் துல்லியமாகத் தெரியும்? இந்தளவு துல்லியத்தைப் பெறுவதற்கே எவ்வளவு மெனக்கெடல்? அதுமட்டுமல்ல.

“இப்படியான துல்லியமற்ற படத்தை எடுத்துவிட்டா இப்படித் துள்ளுகிறார்கள்?” என்று சிலர் எள்ளி நகைக்கிறார்கள். உங்கள் வீட்டில் சுழன்று கொண்டிருக்கும் காற்றாடியைத் (Fan) துல்லியமாகப் படமெடுத்துத் தரும்படி சொன்னால், அந்தக் காற்றாடி சுழலாமல் இருக்கும்போது படமெடுத்துத் தருவீர்கள். அதுவே, காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போது படமெடுத்திருந்தால், துல்லியமாகத் தெரிந்திருக்குமா? இல்லையல்லவா? ‘என்னிடம் வேகமாக அசையும் பொருட்களைப் படமெடுக்கக்கூடிய நவீன கமெரா இருக்கிறது. அதனால். காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போதே நிலையான படத்தை என்னால் எடுக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட வேகம் வரைதான் முடியும்.

M87 கருங்குழியானது, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எப்படி நிலையான கருங்குழியாகப் படமெடுக்க முடியும்? இதுவரை நாம் பார்த்திருந்த கருங்குழிகளின் படங்கள் அனைத்துமே கணணியால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள். அவை நிலையாக இருக்கக்கூடியதாகக் கருதும் கருங்குழியின் படங்கள். ஆனால், இப்போது பெறப்பட்டது நிஜமான கருங்குழி. பாலே நடனமாடும் பெண்போல அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் கருங்குழி.

சந்திர கிரகணத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மறைக்கப்பட்ட நிலையில் கருமையாகப் பார்ப்பது சூரியனின் நிழல்தான் என்றாலும், உண்மையில் அங்கு தெரிவது சந்திரன்தான். இந்த நிலையை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், இனி நான் சொல்லப் போவதையும் புரிந்து கொள்வீர்கள். ஒரு கரிய நிறப் பொருளை உங்களால் படமெடுக்கவே முடியாது. அதற்கு அந்தப் பொருளிலிருந்து ஒளி வரவேண்டும். எந்த ஒளியையும் வெளியே விடாத கருங்குழியை எப்படிப் படமெடுக்க முடியும்? M87 கருங்குழியின் நிழலானது, அதன் நிகழ்வு எல்லையில் (Event horizon) விழும்போது பெறப்பட்ட தோற்றத்தையே நாம் படம் பிடித்திருக்கிறோம்.

இதுவும் ஒருவகை நிழல்தான். ஆனாலும், அங்கு தெரிவது என்னவோ கருங்குழியின் தோற்றம்தான். அதிர்ஸ்டவசமாக M87-ஐத் தூசுத் துணிக்கைகளும், வாயுத் துகள்களும் சூழ்ந்திருக்கின்றன. அங்கிருக்கும் அதிவெப்பத்தினால் அவை ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. M87-ன் ஈர்ப்பினால் வளைக்கப்பட்ட காலவெளியின் (Space time) ஊடாக, அந்த ஒளிரும் துகள்களும் நெருப்பு வளையமாகச் சுற்றுகின்றன. அதுவே, M87 ஐக் கண்டுபிடிக்கவும், படமெடுக்கவும் நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கின்றது.

இவையெல்லாவற்றையும் சாத்தியமாக்கியது நிகழ்வெல்லைத் தொலைநோக்கித் திட்டம்தான். இன்றுவரை உலகின் மிக முக்கியமான எட்டுத் தொலைநோக்கிகளை ஒன்றுசேர்த்து இந்த நிகழ்வெல்லைத் தொலைநோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். அதன் துல்லியத்தை மேலும் அதிகரிக்கலாம். அதிகரிக்கவும் வேண்டும். இவற்றுடன் மேலும் சில தொலைநோக்கிகளை இணைந்தால், வானியல் ஆராய்ச்சியில் பல மைல் கற்களைத் தொட்டுவிடலாம். இன்னும் நாம் பார்த்துத் தெளிவடைய வேண்டிய பொருட்கள் விண்வெளியில் நிறையவே உண்டு.

குவேசார்கள், பல்சார்கள் என்று பலவகை விண் பொருட்கள் ஜாலம் காட்டியபடி இருக்கின்றன. அதிகம் ஏன், வோர்ம் ஹோல்களகூட இருக்கின்றனவா என்று பார்த்துவிடலாம். ஆனாலும், கருங்குழிகள்பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். நம் சொந்தப் பால்வெளியின் மையக் கருங்குழி பற்றியும் அறிய வேண்டும். பதினாறு வருடங்களாகச் சஜிட்டாரியஸ் A வழியாக அந்தக் கருங்குழியைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அங்கு பல நட்சத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை வித்தியாசமான முறையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து, அந்த இடம் ஒரு இராட்சசக் கருங்குழியெனக் கணித்துள்ளார்கள். அதுவே பால்வெளியின் மையமும்கூட. அந்தக் கருங்குழியைச் சுற்றும் S2 என்னும் நட்சத்திரம் அந்தக் கருங்குழியின் ஈர்ப்பினால் கவரப்பட்டு, அதை 2.5% ஒளியின் வேகத்தில் நெருங்கிக் கொண்டு செல்வதை அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும், என்றாவது ஒருநாள் அந்த S2 நட்சத்திரம், கருங்குழியின் நிகழ்வு எல்லையைத் தொடும்போது வானவேடிக்கைகள் நிகழலாம். அப்போது இதுபோன்ற நெருப்பு வளையம் அங்கும் தோன்றலாம்.

இறுதியாக ஒன்று. 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் கருங்குழியை நாம் இன்று பார்க்கிறோம் என்றால், அது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்னிருந்த கருங்குழியின் படமாகத்தான் இருக்கும். அங்கிருந்து ஒளி, பூமியை வந்தடைய 55 மில்லியன் வருடங்கள் தேவை. அதனால், அந்தக் கருங்குழி இன்று இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்வியெல்லாம் கேட்டு நாம் குழம்பிவிடத் தேவையில்லை. பிரபஞ்ச விதியின் அடிப்படையே அதுதான். அனைத்தும் இறந்தகாலம்தான். நாம் எதையும் நிகழ்காலத்தில் பார்ப்பதில்லை. உங்கள் அருகிலிருக்கும் மனைவியைக்கூட. ஒளி உங்களை வந்தடைய எடுக்கும் நேரத்தின் அளவான காலத்தை இழந்தே நாம் எதையும் பார்க்கிறோம்.

படிக்க:
செயற்கை முளையம் : தோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

இப்போது அது அங்கே இருக்கிறதா என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்தால், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் இப்போது இருக்கின்றனவா என்பதை உங்கள் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவே முடியாது. அதைத் தெரிந்து கொள்பவர்கள் உங்களுக்குப் பின்னர் வரும் சந்ததியினராக மட்டுமே இருக்கும். காரணம், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன. அம்மி மிதித்த பின் நாம் பார்க்கும் அருந்ததி நட்சத்திரம்கூட அங்கு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவே தெரியாது.

இயற்பியலில் ஆழமாகச் சென்று சிந்திக்கும்போது, வாழ்க்கையின் சுவாரஷ்யங்களும், பயமுறுத்தல்களும் நம்மைவிட்டு நழுவிப் போய்விடும். இவற்றையெல்லாம் ஒரு அறிவாகப் பார்த்துவிட்டு விலகிவிடலாம். இயற்பியல் அவ்வளவு வலிமைமிக்க உண்மைகளைச் சொல்லக்கூடியது. நாம் நம்பும் உண்மைகளே, உண்மைகள் இல்லை என்று நிரூபிக்கக்கூடியது. அதனால், அவற்றைப் பற்றி ஒருவர் விளக்கும்போது, அதைக் கேட்டுவிட்டு, ‘வாவ்!’ என்ற ஆச்சரியத்துடன் நகர்ந்துவிடுங்கள். அதையே தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள்.

இனி… 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் வந்தது நீங்கள் நினைப்பது போன்று ஒளியல்ல. முதலில் நீங்கள் நினைக்கும் ஒளியென்பது ஏழு வர்ணங்களைக் கொண்ட, ‘காணும் ஒளிக்கற்றைதான்’ (Visible Spectrum). இது ஒரு ஒளியலையின் நூறில் ஒரு பங்குகூட இல்லாதது. 99 சதவீதமான ஒளியை நாம் கண்ணால் காணமுடியாது. அவை, காமா ஒளிக்கற்றை, எக்ஸ் ஒளிக்கற்றை, ஊதா கடந்த ஒளிக்கற்றை, இன்பிரா சிகப்பு ஒளிக்கற்ரை, மைக்ரோ அலை, வானொலி அலை, நெடு வானொலி அலையெனப் பலவகைகளில் நீண்டுகொண்டே போகின்றது.

இதில், வானொலி அலைகளைப் பயன்படுத்தியே நாம் தொலைநோக்கிகளால் நெடுந்தூரமிருக்கும் பொருட்களைப் பார்க்கிறோம். இவையே பின்னர் கணணிகள் மூலம் படங்களாக மாற்றிக் கொள்ளப்படுகின்றன. வானொலி அலைகள் அதிக அலைநீளம் கொண்டவை என்பதால், நெடுந்தூரம் பயனிக்கக் கூடியவை. M87 ஐயும் இந்த அலைகள் மூலமே கண்டுகொண்டோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Raj Siva

3 மறுமொழிகள்

  1. ///சந்திர கிரகணத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மறைக்கப்பட்ட நிலையில் கருமையாகப் பார்ப்பது சூரியனின் நிழல்தான் என்றாலும்///

    பூமியின் நிழல் ??

  2. தோழர் மிக அருமையான கட்டுரை. எளிதில் சுவாரசியத்தோடு ஐன்ஸ்டீனின் கொள்கையை விளக்கி விட்டீர்கள். இதுபோன்ற கட்டுரைகளை அதிகம் எழுதவும். வாழ்த்துக்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க