
உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 14
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் வெப்பம் மிகுந்த அடர்ந்த மூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போது நடந்தவற்றை அலெக்ஸேய் தெளிவின்றி மங்கலாகவே கண்டான். எதார்த்த நிகழ்ச்சிகளும் ஜன்னிக் கனவுகளும் ஒன்றோடொன்று கலந்து குழம்பின. உண்மைச் சம்பவங்களைக் கோவையாக வரிசைப்படுத்திக் கொள்வது வெகு நாட்கள் சென்ற பின்னரே அவனுக்கு இயன்றது.
அகதிக் கிராமம் நெடுங்கால பைன் மரக்காட்டில் வாழ்ந்தது. ஊசியிலைகளால் வேயப்பட்டு, இன்னும் முற்றும் உருகாத வெண்பனிப் போர்வை அணிந்திருந்த நிலவறை வீடுகளை முதல் பார்வையில் கண்டு கொள்வதே கடினமாயிருந்தது. அவற்றிலிருந்து வந்த புகை தரையிலிருந்து கிளம்புவது போல் தோற்றமளித்தது.
கிராமவாசிகள் மிகப் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஒரு சில கிழவர்களுமே, எங்கிருந்தோ வந்த சோவியத் விமானி ஒருவனை காட்டிலிருந்து வண்டியில் மிஹாய்லா எடுத்துக் கொண்டு வருகிறார் என்ற தகவலை அறிந்ததும் அவர்கள் எல்லோரும் எதிர்கொள்ள விரைந்தார்கள். ஸ்லெட்ஜை இழுத்துக் கொண்டு மூவர் வருவது மரங்களின் ஊடாகத் தென்பட்டதும் பெண்கள், ஸ்லெட்ஜை சூழ்ந்து கொண்டார்கள். கால்களுக்கு இடையே புகுந்த சிறுவர் சிறுமியரை அடித்தும் நெட்டித் தள்ளியும் அப்பால் அகற்றியவாறு ஸ்லெட்ஜைச் சுவர் போலச் சூழ்ந்து கொண்டு, புலம்புவதும் முறையிடுவதும் அழுவதுமாக நடந்தார்கள். எல்லாருமே கந்தை ஆடைகளை அணிந்திருந்தார்கள். எல்லோருமே ஒரு மாதிரி வயது முதிர்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். நிலவறை வீடுகளின் புகைக்கரி அவர்கள் முகங்களில் அப்பியிருந்தது. கண்களின் ஒளியைக் கொண்டும் பழுப்பு முகங்களில் வெண்மையாகத் துலங்கிய பற்களைக் கொண்டும்தான் இளநங்கையை முதியவளிலிருந்து இனம் பிரித்துக் கண்டுகொள்ள முடிந்தது.
”பெண்டுகளா, அடப் பெண்டுகளா! என்ன கூட்டம் போடுகிறீர்கள் இங்கே, எதற்காக? இதென்ன, நாடக மேடை என்ற எண்ணமா? தமாஷாகவா? அட கால்களுக்கு அடியில் நுழையாதீர்கள், ஆட்டுக் கூட்டங்களா – ஆண்டவா, மன்னிப்பாயாக – அரைப் பைத்தியங்களா!” என்று மிஹாய்லா தமது கழுத்துப் பட்டையை லாவகமாக அழுத்தியவாறு இறைந்தார்.
கூட்டத்தினரின் பேச்சுக்கள் அலெக்ஸேயின் காதுகளை எட்டின:
“ஐயோ, எப்படித் துரும்பாக இளைத்திருக்கிறான் பாரேன்! அசைவையே காணோமே, உயிரோடுதான் இருக்கிறானா?”
“நினைவிழந்து கிடக்கிறான். இவனுக்கு என்ன நேர்ந்தது? ஐயோ பெண்டுகளே, எப்படி இளைத்திருக்கிறான், எப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறான்!”
அப்புறம் வியப்பு அலை சற்று அடங்கியது. இந்த விமானிக்கு நேர்ந்தது என்ன என்று தெரியாவிட்டாலும் பயங்கரமாக இருக்கும் எனப் புலப்பட்டது. பெண்கள் அதனால் மலைத்துப் போனார்கள். ஸ்லெட்ஜ் காட்டோரமாக இழுத்து வரப்பட்டு நிலவறை கிராமத்தை மெதுவாக நெருங்கிக் கொண்டிருக்கையில், அலெக்ஸேயை யார் வீட்டில் தங்கவைப்பது என்பது பற்றி விவாதம் தொடங்கிவிட்டது.
“என் வீடு உலர்ந்திருக்கிறது. மணல் பரப்பியிருக்கிறது, நல்ல காற்றோட்டம் உண்டு… என் வீட்டில் சிறு அடுப்பும் இருக்கிறது” என்று கூறினாள் பளிச்சிடும் வெண்விழிகளும் வட்ட முகமும் கொண்ட சிறுகூடான ஒரு மாது.
“அடுப்பாம், அடுப்பு! எத்தனை பேர் உங்கள் வீட்டில் வசிக்கிறார்கள்? புழுக்கமே ஆளைக் கொன்றுவிடுமே! மிஹாய்லா, என் வீட்டில் தங்கவை. என் மூன்று மகன்கள் செஞ்சேனையில் இருக்கிறார்கள். கொஞ்சம் போல கோதுமை மாவு மிஞ்சியிருக்கிறது. இவனுக்கு தோசை சுட்டுப் போடுவேன்!”
“இல்லை, இல்லை, என் வீட்டில் தங்கட்டும்! எங்கள் வீடு விசாலம். நாங்கள் இரண்டு பேர் தான் வசிக்கிறோம். இடம் நிறைய இருக்கிறது. தோசை சுட்டு எங்கள் வீட்டுக்கு எடுத்து வா. எங்கே சாப்பிட்டாலும் இவனுக்கு ஒன்று தானே. நாங்கள் இவனைச் சொஸ்தப் படுத்துவோம். பனிப்பதம் செய்த மீனும் வெண் காளான் வற்றலும் என்னிடம் இருக்கிறது. மீன் குழம்பும் காளான் சூப்பும் வைத்துத் தருவேன்.”
“இவன் மீன் குழம்பு சாப்பிடுகிறது எங்கே? பிழைப்போமா மாட்டோமா என்று கிடக்கிறான்! எங்கள் வீட்டுக்கு இவனைக் கொண்டு வாரும் மிஹாய்லா மாமா, எங்களிடம் பசு மாடு இருக்கிறது, பால் கிடைக்கும்!”
ஆனால், மிஹாய்லாவோ கிராமத்தின் நடுவில் இருந்த தனது நிலவறை வீட்டுக்கு ஸ்லெட்ஜை இழுத்துச் சென்றார்.
அலெக்ஸேய் நினைவுப்படுத்திக் கொண்டான்: இருண்ட, சிறு நிலவறை வளையில் அவன் படுத்திருந்தான். சுவரில் நுழைக்கப்பட்டிருந்த சிறாய் விளக்குச் சற்றே புகைந்து சரசரப்புடன் பொறிகள் சிந்தியவாறு எரிகிறது. அதன் வெளிச்சத்தில் தெரிகின்ற நிலவறையில் உள்ள சாமான்கள்; மரக்கட்டையைத் தரையில் புதைத்து அதன் மேல் ஜெர்மானியச் சுரங்க வெடிப் பெட்டிப் பலகைகளைப் பொருத்திச் செய்யப்பட்டிருந்த மேஜை, அதன் அருகே மனைகளுக்குப் பதிலாக முண்டுக்கட்டைகள். மேஜை மேல் குனிந்தவாறு அமர்ந்திருக்கிறாள் கிழவி போன்று கறுப்பு உடை அணிந்த, ஒடிசலான ஒரு பெண். மிஹாய்லா தாத்தாவின் இளைய மாற்றுப் பெண் வார்யா இவள். அடர்த்தியற்ற சுருட்டை வெண்மயிர் படிந்த கிழவரின் தலையும் தெரிகிறது.
வைக்கோல் நிரப்பிய கோடிட்ட மெத்தை மேல் படுத்திருக்கிறான் அலெக்ஸேய். பல்வண்ண ஒட்டுக்கள் போட்ட அதே ஆட்டுத்தோல் கோட்டையே அவன் போர்த்திருக்கிறான். உடம்பெல்லாம் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டது போல் வலிக்கிறது. உள்ளங்கால்களில் சுடு செங்கற்கள் கட்டப்பட்டிருப்பது போலக் கால்கள் காந்துகின்றன. எனினும், நம்மை ஒருவரும் தொடமாட்டார்கள், இயங்கவோ, சிந்தனை செய்யவோ, அஞ்சவோ தேவையில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டு இந்த மாதிரி அசையாமல் கிடப்பது இன்பமாய் இருக்கிறது.
அலெக்ஸேய் கண்களை மூடிக் கொள்கிறான். கறுப்பு ஜெர்மன் கழுகுச் சின்னம் பொறித்த சாக்குத் துணியால் உறை தைக்கப்பட்ட திறந்த கதவின் வழியாக திடீரெனக் குளிர் காற்று குப்பென வீசவே அவன் கண்களைத் திறந்தான். மேஜை அருகில் இருக்கிறாள் யாரோ ஒரு மாது. மேஜை மேல் ஒரு சாக்குப்பையை வைத்துவிட்டு, அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு விடுவோமோ எனத் தயங்குபவள் போல அதன் மேல் கைகளை வைத்தவாறு பெருமூச்செறிகிறாள். பின்பு வார்யாவிடம் சொல்லுகிறாள்:
“இது ரவை. சமாதான காலம் முதலே கோஸ்த்யாவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தோம். இப்போதோ அவனுக்கு ஒன்றும் தேவையில்லை. நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். விருந்தாளிக்குப் பொங்கல் சமைத்துப் போடுங்கள். சின்னப் பிள்ளைகளுக்கு ஏற்றது ரவைப் பொங்கல். இவருக்கு இப்போது இது சரியாயிருக்கும்.”
இப்படிச் சொல்லிவிட்டு, தனது ஏக்கத்தை எல்லோர் மீதும் பரப்பியவாறு திரும்பி மெதுவாக வெளியேறுகிறாள் அவள். அப்பறம் ஒருத்தி மீன் கொண்டு வருகிறாள். மற்றொருத்தி கணப்புக் கல்லில் சுட்ட தோசைகள் கொண்டு வருகிறாள். அவற்றின் வெதுவெதுப்பான, புளித்த கோதுமை மணம் நிலவறை முழுவதிலும் பரவுகிறது.
ஆகா, பெண்களே, பெண்களே! விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நீங்கள்!… ருஷ்யப் பெண் விலை மதிக்க முடியாத இரத்தினம் என்கிறேன்… தன்னிடம் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்துவிடுவாள், தலையைக் கூடக் கொடுத்து விடுவாள் நமது பெண்.
செர்யோன்காவும் பேத்யாவும் வருகிறார்கள். குடியானவர்களுக்குரிய நிதானத்துடன் செர்யோன்கா வாயிலருகே தலையிவிருந்து தொப்பியைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு, “உங்களுக்கு வணக்கம் என்று சொல்லி மேஜை மேல் இரண்டு சர்க்கரைக் கட்டிகளைப் போடுகிறான், மட்டப் புகையிலைத் துணுக்குகளும் தவிடும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. “அம்மா கொடுத்தனுப்பினாள். சர்க்கரை உடம்புக்கு நல்லது, சாப்பிடுங்கள்” என்று கூறிவிட்டுத் தாத்தாவை நோக்கிக் காரியப்பாங்குடன் சொன்னான்: “எரிந்த கிராமத்துக்கு மறுபடி போனோம். இரும்புச் சட்டி ஒன்றைத் தேடி எடுத்தோம். ரொம்ப கரிந்து போகாத இரண்டு மண் வாரிகளும் காம்பு இல்லாத கோடாரியும் கிடைத்தன. கொண்டு வந்தோம், பயன்படும்.”
வெகு நேரத்துக்குப் பிறகுதான், இதை எல்லாம் எண்ணிப் பார்த்த போதுதான், கிராமத்தினர் தனக்குக் கொண்டு வந்து அளித்த பரிசுகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதை அலெக்ஸேயால் அறிந்து கொள்ள முடிந்தது. இந்தக் குளிர் காலத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிராமவாசிகள் பட்டினியால் மடிந்து போனார்கள். ஒரு ஆளையோ அல்லது இருவரையோ கூட அடக்கம் செய்யாத குடும்பம் ஒன்று கூட குடியிருப்பில் இல்லை.
“ஆகா, பெண்களே, பெண்களே! விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நீங்கள்! என்ன, கேட்டாயா, அலெக்ஸேய், ருஷ்யப் பெண் விலை மதிக்க முடியாத இரத்தினம் என்கிறேன். அவள் நெஞ்சு இளகிவிட்டதோ, தன்னிடம் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்துவிடுவாள், தலையைக் கூடக் கொடுத்து விடுவாள் நமது பெண். ஊம்? இல்லையா?” அலெக்ஸேய்க்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பரிசுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு மிஹாய்லா தாத்தா இவ்வாறு திரும்பத் திரும்ப உரைத்தார். பின்பு தமக்கு எப்போதும் இருக்கும் வேலையில் மீண்டும் ஈடுபட்டார்: சேணத்தைச் செப்பனிட்டார், நுகவார்களைத் தைத்தார், அல்லது தேய்ந்து போன நமுதா ஜோடிகளுக்கு அடிகள் தைத்தார். “தம்பீ, அலெக்ஸேய், வேலையிலும் இவள், அது தான் நமது பெண் பிள்ளை, நமக்கு சளைக்க மாட்டாள். சில வேளைகளிலோ வேலையில் ஆண்களையே முந்தி விடுவாள்! இந்தப் பெண்களின் நாக்கு இருக்கிறதே, அதுதான் பொல்லாதது. என்னை முட்டாளாக அடித்து விட்டார்கள். என்னை என் வீட்டுக்காரி அனீஸியா காலமானதும் நான், பாவி, நினைத்துக் கொண்டேன்: ‘ஆண்டவா, போற்றி, சந்தடி இல்லாமல் நிம்மதியாய் வாழ்வேன்!’ என்று. ஆண்டவன் இதற்கு என்னைத் தண்டித்து விட்டான். எங்கள் கிராம ஆண்களில் இராணுவத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் பாக்கி இருந்தவர்கள் எல்லோரும், ஜெர்மானியர்கள் வந்ததும் கொரில்லாப் படைகளில் சேர்ந்துவிட்டார்கள். நானோ, செய்த பெரும் பாவத்துக்குத் தண்டனையாகப் போலும், பெண்கள் கூட்டத்துக்குக் கமாண்டர் ஆகிவிட்டேன் – ஆட்டு மந்தையில் கடா போல… ஓ ஹோ-ஹோ!”
தன்னை ஆழ்ந்த வியப்புக்கு உள்ளாக்கிய எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் இந்தக் காட்டுக் குடியிருப்பில் கண்டான். ப்ளாவ்னி கிராமத்தில் வாழ்ந்த மக்களுக்கு வீடுகளோ, வேளாண்மைக் கருவிகளோ, கால்நடைகளோ, அன்றாடத் தேவைக்கான தட்டுமுட்டுச் சாமான்களோ, உடைகளோ, எதுவுமே – பல தலைமுறைகளின் உழைப்பால் சேகரிக்கப்பட்டிருந்தவை எவையுமே – இல்லாதவாறு அடித்துவிட்டார்கள் பாசிஸ்டுகள்.
மக்கள் இப்போது காட்டில் வசித்தார்கள். பெருந்துன்பத்தில் உழன்றார்கள். ஹிட்லர் படையினர் தங்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் ஒவ்வொரு கணமும் கவலையுற்றனர். ஆனால், ஆறுமாத வசவு திட்டுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு, ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டில் முன்னணி ஊழியர்களால் எப்படியோ ஒரு விதமாக நிறுவப்பட்ட கூட்டுப்பண்ணை தகர்ந்து விடவில்லை. மாறாக, போரினால் ஏற்பட்ட பெரும் விபத்து மக்களை முன்னிலும் நெருக்கமாக ஒற்றுமைப்படுத்தியது.
நிலவறை வீடுகளைக் கூட மக்கள் ஒன்று சேர்ந்து தோண்டி அமைத்துக் கொண்டார்கள். அவற்றில் பழங்கால முறைப்படி குடியேற விடாமல் வேலைக் குழு முறைப்படி ஒழுங்காகக் குடியேறினார்கள். தனது கொலையுண்ட மருமகனின் இடத்தில் கூட்டுப்பண்ணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மிஹாய்லா தாத்தா. கூட்டுப்பண்ணை பழக்கவழக்கங்களை அவர் சிரத்தையுடன் கடைப்பிடித்தார். காட்டின் நடுவே பைன் மரத் தோப்புக்குள் விரட்டப்பட்டு நிலவறை வீடுகளில் வசித்த கிராமத்தினர் வேலைக் குழுக்களாகவும் பிரிவுகளாகவும் அமைந்து வசந்த கால வேளாண்மைக்கு ஆயத்தம் செய்யலானார்கள்.
தப்பி ஓடிய பிறகு தங்களிடம் மிஞ்சியிருந்த தானியங்களை, பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த குடியான மாதர்கள் பொது நிலவறையில் ஒரு மணி கூட விடாமல் கொண்டு சேர்த்தார்கள். ஜெர்மானியர் கைகளில் அகப்படாமல் உரிய நேரத்தில் காட்டுக்கு ஓட்டி வரப்பட்ட பசுக்களின் கன்றுகளைப் பராமரிப்பதற்குக் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆட்கள் பட்டினி கிடந்தார்கள், ஆனால் பொது கால்நடைகளை உணவுக்காகக் கொல்லவில்லை. உயிரையே இழக்க நேரிடும் அபாயத்தை மேற்கொண்டு சிறுவர்கள் தீக்கிரையான கிராமத்துக்குப் போய் எரிபாடுகளைத் தோண்டி நெருப்புச் சூட்டால் நீலம் பாரித்திருந்த கலப்பைகளை எடுத்து வந்தார்கள். அவற்றில் ஓரளவு உருப்படியாக இருந்தவற்றிற்கு மரக் கைபிடிகள் செய்து பொருத்தினார்கள். சாக்குத்துணிகளால் நுகங்கள் செய்தார்கள், வசந்த காலத்தில் பசுக்களைக் கட்டி உழுவதற்காக. பெண்களின் வேலைக் குழுக்கள் முறை வைத்துக் கொண்டு ஏரிகளில் மீன் பிடித்து குளிர்காலம் பூராவும் கிராமத்திற்கு உணவளித்தன.
மிஹாய்லா தாத்தா “தன் பெண்களைப் பற்றி முணு முணுப்பார். அலெக்ஸேய்க்குப் பிடிபடாத ஏதேனும் வேளாண்மை விவகாரங்களைப் பற்றி அவர்கள் அவருடைய நிலவறையில் நீண்ட வாக்குவாதங்கள் நடக்கும் போது காதுகளைப் பொத்திக் கொள்வார். சில வேளைகளில் தம்மை மீறிய கோபம் காரணமாக உச்சக் குரலில் அவர்களை அதட்டுவார். ஆயினும் இந்த மாதர்களை மதிக்க அவருக்கு இயன்றது. அலெக்ஸேய் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு சில வேளைகளில் “பெண் ஜன்மங்களை” வானளாவப் புகழ்வார்.
“நீயேதான் பாரேன் அலெக்ஸேய், என் அருமை நண்பா, என்ன நேர்ந்திருக்கிறது என்பதை. தலைமுறை தலைமுறையாகப் பெண்ணின் சுபாவம் சிறு துண்டைக் கூட இரண்டு கைகளாலும் இறுகப்பற்றிக் கொள்வதுதான். ஊம்? அப்படித்தானே. ஏன்? கஞ்சத்தனமா? இல்லை. அவளுக்கு அந்தத் துண்டு விலைமிக்கது, குழந்தைகளுக்கு ஊட்டுபவள் பெண் தானே, என்னதான் சொன்னாலும் குடும்பத்தை நிர்வகிப்பவள் அவள் தானே, அதனால் தான் பொருள்கள் விஷயத்தில் அவளுக்கு அவ்வளவு கரிசனம்.
இப்போது கேள், விஷயம் என்ன என்பதை நீயே பார்க்கிறாய், பொறுக்குகளைக் கூடக் கணக்கிட்டுச் செலவிடுகிறோம். பஞ்சமான பஞ்சமில்லை! இந்த நிலைமையில் திடீரென்று கொரில்லா வீரர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். நடந்தது ஜனவரியில், இவர்கள் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்ல. எங்கள் ஆட்கள் ஒலேனினோ பக்கத்தில் எங்கோயோ சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேறு ஆட்கள், ஏதோ ரயில் பாதையைச் சேர்ந்தவர்கள். நல்லது. வந்து சேர்ந்தார்கள். ‘பட்டினியால் தவிக்கிறோம்’ என்றார்கள்.
எங்கள் பெண்கள் அடுத்த நாள் பைகள் நிறைய உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். சொந்தக் குழந்தைகள் சோகைப் பிடித்து ஊதிப் போயிருக்கின்றன, நிற்கவே முடியாமல் தள்ளாடுகின்றன. ஊம்? அப்படித்தானே?….. இது தான் சேதி! நான் மட்டும் படைத் தலைவனாக இருந்தால், ஜெர்மானியர்களை நாம் விரட்டியடித்துமே என் படையிலுள்ள தலைசிறந்த வீரர்களைத் திரட்டி, ஒரு பெண்ணை முன்னால் நிறுத்தி அவளுக்கு எதிரே, ருஷ்யப் பெண்ணுக்கு எதிரே அணிவகுத்து நடந்து இராணுவ மரியாதை செய்யும்படி கட்டளை இடுவேன், நமது பெண்ணுக்கு!”
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை