மே 22, 2019 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல்

நிலம், நீர், காற்று என மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளை நஞ்சாக்கி தங்களது வாழ்வையே சூறையாடிய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராடிய தூத்துக்குடி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது தமிழக அரசு.

போலீசின் வன்முறை வெறியாட்டத்திற்கு 2 பேர் பலியாயினர். தூத்துக்குடியில் மட்டுமல்ல, ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை, நியூட்ரினோ என இயற்கையையும், மக்களையும் நாசமாக்கும் திட்டங்கள் விவசாயிகள், உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசின் உதவியுடன் திணிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே, மண்ணையும் மக்களையும் பாதுகாக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர்களின் வழியில் போராட வேண்டும் என்பதை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பில் சமூக ஜனநாயக சக்திகள் பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்கும் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பேரணியை புதுச்சேரி மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சாந்தகுமார்
உரையாற்றி தொடங்கி வைத்தார். புதுச்சேரி பகுதியின் பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திராவிடர் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களுடனும், திரளான மக்கள் பங்கேற்புடன் பேரணி மக்கள் நெருக்கமான புதுச்சேரியின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது.

புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை புதுச்சேரி மக்கள்
அதிகாரத்தின் மதகடிப்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சங்கர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டம் துவங்கியதுமே வந்த போலீசு நடுரோட்டில் நிகழ்ச்சி நடத்துவதாகச் சொல்லி, பதில் கூட பேச விடாமல் தடுத்தது. வழக்கறிஞர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடரும் அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் வகையில் வாயில் கறுப்புத்துணி கட்டியும், உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் அமைப்பாளர் தோழர் தீனா, திராவிடர் கழகத் தலைவர் தோழர் சிவ. வீரமணி, புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் பிரகாஷ், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் அதிகாரத்தின் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் இறுதியுரை ஆற்றினர்.

தூத்துக்குடி படுகொலையை கண்டிக்கும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் இருந்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னெடுப்பில், ஜனநாயக இயக்கங்கள், பெரியாரிய அமைப்புகள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இவ்வியக்கம் பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

***

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு முதலாமாண்டு நினைவையொட்டி கோ.பூவனூர் கிளை சார்பாக 21.05.2019 அன்று மாலை 6 மணி அளவில் பேனருக்கு மாலை அணிவித்து மெழுகு வர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தப்பட்டது. இதில் பொது மக்கள், கடை வியாபாரிகள், மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நினைவேந்தல் கூட்டத்தை பகுதி ஒருங்கிணைப்பாளர் வழிநடத்தினார். அக்கூட்டம் முடிந்த பின்னர், இதனைப் பொறுக்காத போலீசு மக்கள் அதிகாரம் பகுதி் ஒருங்கிணைப்பாளர் பாலாஜியை மிரட்டி பேனரை எடுக்குமாறு எச்சரித்தது. உங்களை குண்டாசில் கைது செய்து விடுவோம் என்று சி.பி.சி.ஐ.டி ஆறுமுகம் மிரட்டினார். தோழர்களைக் இல்லாதபோது அவரும் அவர் உடனிருந்த காவல்துறையினரும் பேனரைக் கிழித்துவிட்டு போஸ்டரையும் கிழித்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு சென்று பார்க்கும்போது, பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இத்தகைய போலீசு அராஜகத்தை  மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கான நினைவேந்தல் கூட்டத்தை வருடா வருடம் மக்கள் அதிகாரம் கடைபிடிக்கும்.

இவண்,
மக்கள் அதிகாரம்

***

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு 22.05.2019 அன்று காலை வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைச் சங்கத் தோழர்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்..

தகவல்
புதிய ஜனநாயகத் தொலழிலாளர் முன்னணி
வேலூர்

***

புதுச்சேரியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

கடந்த ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். மக்களின் ஒற்றுமை மிக்க உறுதி குலையாத போராட்டத்தை ஒடுக்க போராட்டத்தில் முன்னணியாக நின்ற மக்களைத் திட்டமிட்டு தலையிலும் வாயிலும் சுட்டு 13 பேரைக் கொன்றது. தொடர்ச்சியாக போலீசு கட்டவிழ்த்த அடக்குமுறை வெறியாட்டங்களுக்கு 2 பேர் பலியாகினர். ஓராண்டு கழிந்த பின்பும் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்றும் ஓய்ந்தபாடில்லை.

ஸ்டெர்லைட் என்கிற கார்ப்பரேட் நிறுவனத்திற்காக சொந்த நாட்டு மக்களையே ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற அரசு, கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தூத்துக்குடியில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை இறக்கிவிட்டு மக்களை அச்சுறுத்தி மீண்டும் ஆலையை திறக்க முயற்சித்து வருகிறது. தங்களது வாழ்வாதாரத்தை அழித்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்று எதிர்கொண்டு வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.

தூத்துக்குடியில் மட்டுமல்ல, தற்போது விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, ஸ்டெர்லைட்டின் தலைமை நிறுவனமான வேதாந்தா, ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கடற்கரையையும் முழுங்க காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அத்தனை வேலைகளையும் மோடியும், அடிமை எடப்பாடி அரசும் செய்து கொடுக்கிறது. ஏற்கெனவே வேதாந்தா நிறுவனத்திற்காக, இரும்புச் சுரங்கம் அமைக்கப்படுவதை எதிர்த்த நியாம்கிரி மலைவாழ் பழங்குடி மக்களை சுட்டுக் கொன்றது மத்திய மாநில அரசுகள். ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் காட்டு வேட்டை என்ற பெயரில் அரசின் படைகளை ஏவிவிட்டு பழங்குடி மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி அச்சுறுத்தியது. இன்று காடுகளை பாதுகாப்பது என்ற பெயரில் பழங்குடி மக்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டு காட்டின் வளத்தை கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

ஸ்டெர்லைட் பிரச்சினை என்பது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. இந்த நாடும், நாட்டின் வளமும், இயற்கையும் அனைத்துமே கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சொந்தம் என பட்டா போட்டு கொடுக்கிறது அரசு. இந்த அரசு மக்களுக்கானது அல்ல கார்ப்பரேட்டுகளுக்கானது. எனவே, நாட்டையும் மக்களையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் எனில், மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களே தீர்வு அதற்கு நம் கண் முன்னே உள்ள சாட்சியே தூத்துக்குடி.

எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முன்மாதிரியான பாடமாக கொண்டு அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அவர்களது வழியில் போராடுவோம்! என்பதை வலியுறுத்தும் விதமாக புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை மற்றும் இணைப்பு சங்கங்களான கோத்ரேஜ் கன்ஸ்யூமர், ரானே பிரேக் லைனிங், மதர்பிளாஸ்ட், வேல் பிஸ்கட்ஸ், பால்மேட்டோ, ஸ்வஸ்திக், சுப்ரீம் பிளாஸ்டிக்ஸ் என சங்கங்கள் செயல்படும் ஆலைவாயில்களிலும், புதுச்சேரியின் முக்கிய தொழிற்பேட்டையான திருபுவனை பகுதியிலும் திரளான தொழிலாளர் பங்கேற்புடன் தூத்துக்குடி தியாகிகளின் படத்தை வைத்து மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் செலுத்தி நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை, சென்ற மே-22 அன்றைய ஒரு நாள் நிகழ்வாக சங்கங்கள் கடந்து விட்ட சூழலில், அரசின் அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலம் போன்று அடக்குமுறைகளை அம்மக்கள் மீதும் இன்றும்  செலுத்தி வரும் அரசு, தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கான அரசு அல்ல, மக்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட, ஒன்றுபட்ட போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் வழியில் நடத்த வேண்டும். அதற்கு உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் தொழிலாளர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்ற வகையில் நடத்தப்பட்ட இவ்வியக்கம், தொழிலாளர் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமைந்தது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி தொடர்புக்கு: 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க