மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஆர். சென் கடந்த ஆண்டில் “பாகிஸ்தான் – இந்தியா பிரிவினைக்குப் பிறகு இந்தியா, இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு வழங்கிய பிரச்சினைக்குரிய தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.  அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை கடந்த மே 24 அன்று ஒதுக்கி வைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது, மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத் (1955) திருத்தத்தின் மூலம் குறிப்பிட்ட பிரிவு வெளிநாட்டினருக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க முயற்சித்ததற்கு வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

நீதிபதி சுதீப் ரஞ்சன் சென்

இந்நிலையில், மேகாலயாவைச் சேர்ந்த அமோன் ரானா என்பவர், தமக்கு குடியுரிமை வழங்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, கடந்த டிசம்பர் 10, 2018 அன்று தொடுத்தார். மனுதாரருக்கு ஆதரவாக இந்த வழக்கில் தீர்ப்பு எழுதிய நீதிபதி சென், “பாகிஸ்தான் தம்மை இசுலாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதால் இந்தியா தம்மை ஒரு இந்து நாடாக அறிவித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது.” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், அஸ்ஸாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவில் பதியப்படாமல் விடுபட்ட லட்சக்கணக்கான மக்களைக் குறிப்பிட்டு, பலரும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து குடியுரிமை சான்றிதழ் பெற சிரமப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்நிலைமையை “பழுதடைந்த நிலை” என்று குறிப்பிட்ட நீதிபதி சென்,  “பல அன்னியர்கள் இந்தியர்களாகும் போது, ‘அசல் இந்தியர்கள்’ கைவிட்டுவிடப்படுகிறார்கள். யாரும் இந்தியாவை மற்றுமொரு இசுலாமிய நாடாக மாற்றிவிடக் கூடாது. ஒருவேளை அப்படி நடந்தால் இந்தியாவிற்கும்; உலகிற்கும் அதுவே இறுதிநாளாக அமையும்” என்றார்.

மேகாலயா மாநில அரசு அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேகாலயா; உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்யும் முன்னரே, சோனா கான் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி சென்னின் இந்தத் தீர்ப்பு சட்டப்படி பிழையானது என்றும் வரலாற்றுரீதியாகவே தவறான வழிகாட்டுகிறது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு மேகாலயா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

படிக்க:
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
♦ இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !

கடந்த மே 24-ம் தேதி, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி முகமது யாக்கூப் மிர் தலைமையிலான இரண்டுபேர் கொண்ட அமர்வு மேகாலயா அரசின்மறு முறையீட்டு மனுவை விசாரித்தது. இந்த அவர்வு வழங்கியுள்ள தீர்ப்பில், நீதிபதி சென்னின் தீர்ப்பை, “இது சட்டப்படி பிழையானது” என்றும் “அரசியல் சாசனக் கொள்கைகளுக்கு ஒவ்வாதது” என்றும் குறிப்பிட்டு ஏற்கெனவே நீதிபதி சென் கொடுத்த தீர்ப்பை ஒதுக்கி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகால மோடியின் ஆட்சியில்  நடந்த கூத்துக்களுக்கு மணிமகுடம்தான் நீதிபதி சென் நடத்திய இந்து ராஷ்டிரக் கூத்து. மீண்டும் மோடி ஆட்சியில் அமர்ந்திருப்பதால், எதிர்வரும் ஐந்தாண்டுகளில் இன்னும் அதிகமான கூத்துக்களைக் காணக் கடப்பட்டிருக்கிறோம் ! காண்போம் !


நந்தன்

நன்றி: தி வயர்