முதல் ஐந்தாண்டு கால காவி ஆட்சியில் மாட்டின் பெயரில் முசுலீம்கள், பழங்குடிகள், தலித்துகள் மீது வன்முறையை ஏவிய பசு குண்டர் படை, இப்போது ஏகபோகமாக ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கிறது. இந்த முறை விளைவுகள் முன்னைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கைகள் வந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே காவி குண்டர் படை அடித்துக் கொல்லும் வேலையைத் தொடங்கிவிட்டது.

கடந்த புதன்கிழமை (22.05.2019) மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி ஒரு காவி குண்டர் படை, இரு முசுலீம் இளைஞர்களை அடித்து உதைத்தது. ஐந்து பேரும் சேர்ந்து அவர்களை கட்டையால் தாக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல கட்டாயப்படுத்தும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.

ஞாயிற்றுக்கிழமை பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் முசுலீம் பெயர் வைத்திருந்த காரணத்தாலேயே ஒருவர் சுடப்பட்டார். “ராஜீவ் யாதவ் என்னை நிறுத்தி, என் பெயர் என்ன என்று கேட்டார். என் பெயர் முகமது காசிம் என சொன்னேன். உடனே அவர் என்னை சுட்டு, “இங்கே என்ன செய்கிறாய்? பாகிஸ்தானுக்குப் போ…’ என்றார் ” என நடந்ததை சொல்கிறார் சுடப்பட்டு மருத்துவமனையில் உள்ள காசிம்.

மக்களவை தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஏகபோக உரிமையுடன் தங்களை  இயக்கும் தலைமை ஆட்சியில் அமர்ந்தவுடன், குண்டர் படை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு நாளும் மாட்டிறைச்சியின் பெயரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படும் செய்திகள் வரக்கூடும்.  மாட்டிறைச்சி குறித்து பேசுவோர் மீது சட்டங்கள் பாயும்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு எழுதிய முகநூல் பதிவிற்காக கல்லூரி ஆசிரியர் சமீபத்தில் கைதானதைப் போல…

பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா

ஜாம்ஷெட்பூர் கல்லூரியில் நாடகக் கலையை கற்றுத்தரும் ஆசிரியரான ஜீத்ராய் ஹன்ஸ்டா, 2017-ம் ஆண்டு முகநூலில் மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்துள்ளது ஜார்கண்ட் போலிசு.

“நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். மாட்டிறைச்சி உண்பது நமது சமூகத்தில் ஆட்சேபணைக்குரியதாக உள்ளது. ஆனால், இது பழங்குடிகளின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அம்சம். இதை வேறுமாதிரியாக சொல்லியிருக்கலாம். நான் சற்றே கடினமாக சொல்லிவிட்டேன்” என்கிற ஜீத்ராய், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.05.2019) கைதாகி சிறையில் உள்ளார்.

காவி பாஜக ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில் மாட்டிறைச்சி விற்பது, உண்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஜீத்ராய் சொல்வதுபோல அவர் எழுதியதில் அத்தனை கடுமையும் இல்லை; அதில் ஆட்சேபணைக்குரியது எதுவும் இல்லை.

“அன்புக்குரிய தோழர்களே, ஜாம்ஷெட்பூரில் எங்கே மாட்டிறைச்சி கிடைக்கும் என சொல்ல முடியுமா? நான் ஒரு மாட்டிறைச்சித் திருவிழாவை நடத்தலாம் என இருக்கிறேன்” என்றுதான் அவர் எழுதியிருந்தார்.

மேலும் அந்தப் பதிவில், “ஆதிவாசி கலாச்சாரத்தில் மாட்டிறைச்சி உண்பது ஒரு பகுதி. சந்தால்கள் இந்தியர் எனில், இந்து கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை நிர்பந்திக்கக்கூடாது. நான் அதை நிராகரிக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யினர், ஜீத்ராயின் முகநூல் பதிவு குறித்து புகார் தெரிவித்ததோடு, அவர் பணியாற்றிய கல்லூரியிலிருந்து நீக்கும்படியும் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இனி முகநூலில் ‘இத்தகைய’ கருத்துக்களை எழுத மாட்டேன் என சொன்னதன் பேரில் அவரை கல்லூரி நிர்வாகம் பணியாற்ற அனுமதித்துள்ளது.

படிக்க:
மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு ? – மனலி சக்ரவர்த்தி
♦ கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

இந்த நிலையில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஜீத்ராய் மீதான வழக்கு தூசி தட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஏன் இந்தக் கைது என்ற கேள்விக்கு பதிலளித்த போலீசு, ‘ஐந்து முறை அவரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தப்பி ஓடி விட்டதாக’ கதை விட்டிருக்கிறது.

ஜீத்ராய் மீது ஐந்தாண்டுகள் வரை தண்டனை கிடைக்கக்கூடிய பிரிவுகளான இரு குழுவினரிடையே பகையை உண்டாக்குதல் (153 ஏ), மத நம்பிக்கை மீது அதிர்ச்சியளிக்கும் விதமாக நடப்பது (295 ஏ), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (505) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

காலம்காலமாக பழங்குடிகளின் உணவுப் பழக்கமாக உள்ள மாட்டிறைச்சியை, அடக்குமுறை சட்டங்கள் மூலம் விட்டொழிக்கச் சொல்கிறது காவி அரசு. மாட்டிறைச்சி உண்பது எங்களுடைய கலாச்சாரம் எனப் பதிவிடுவதுகூட ஐந்தாண்டு சிறை தண்டனைக்குரிய குற்றம்.  இனி காவி பாசிஸ்டுகள் ஆட்சியில் ‘மாட்டிறைச்சி’ என உச்சரிப்பதுகூட கடும் தண்டனையை பெற்றுத்தரலாம். எதிர்கொள்ளத் தயாராவோம் !


– அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க