மோடி ஆட்சியில், பசு குண்டர்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் கும்பல் வன்முறைகளில் ஈடுபடுவதும், மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொல்வதும் அரசின் ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்பட்டது. பசு குண்டர்களின் இந்த செயல்பாடுகளால் மத – சமூக நிலைகளைக் கடந்து பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் மாட்டிறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியில்  முக்கிய இடத்தில் இருந்த இந்தியாவின் நிலை, 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மோசமான நிலைக்கு வந்து விட்டது.  இது இந்தியாவின் வெளிநாட்டு நாணய இருப்பைக் கடுமையாக பாதித்திருக்கிறது என்பதும் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2010-11 லிருந்து 2017-18 ஆண்டுகள் வரையிலான புள்ளிவிவரங்கள் தெரிவித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.

பசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.

மோடி ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவான 2010-ம் ஆண்டிலிருந்து மோடி ஆட்சிக்கு வந்த பிறகான ஐந்தாண்டு காலம் வரை பசு குண்டர்கள் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.  வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துத்துக்கள் பசு புனிதமானது என கருதுகின்றனர். இந்துத்துவ கும்பல் பசுவை முன் வைத்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் இத்தகைய கருத்துக்களை விதைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள 99.38% சதவீத பசுக்கள் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்கிறது இந்தியா ஸ்பெண்ட் புள்ளிவிவரம். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பசு வதை சட்டம் அமலில் இருக்கிறது. பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு பசு பாதுகாப்புக்காக தேசிய ஆணையத்தை அறிவித்தது.

“அரசுகளின் இத்தகைய கொள்கை முடிவுகளும் பசுக் குண்டர்களின் தாக்குதல்களும் இந்தியாவின் கால்நடை வர்த்தகத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளன.  அதுபோல இவர்களை சார்ந்திருக்கிற இறைச்சி ஏற்றுமதி தொழிலும் தோல் தொழிலும் பாதிப்புகளை சந்தித்திருக்கின்றன” என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

உலகிலேயே அதிக அளவு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் அளவுக்கான எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த ஏற்றுமதி குறைய ஆரம்பித்துவிட்டது.

அதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும் மாநிலமான உத்தர பிரதேசத்தில்  இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியின் கொள்கை முடிவுகளால், இந்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  2013-14 -ம் ஆண்டில் எருமை இறைச்சி ஏற்றுமதி 35.93 சதவீதமாக இருந்தது. 2014-15 ஆண்டில் 9.88 சதவீதமாக வீழ்ச்சியைக் கண்டது. 2016-17-ம் ஆண்டில் 3.93 சதவீதமாகவும் 2017-18-ம் ஆண்டில் 3.06 சதவீதமாகவும் விழ்ச்சியடைந்தது.

உலகின் தோல் ஏற்றுமதியில் இந்தியா 13% பங்காற்றுகிறது. ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் தரும் தோல் தொழிலில் 48% ஏற்றுமதியில் மட்டும் கிடைக்கிறது. தோல் தொழிலை நம்பி 3 மில்லியன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில் 30% பெண்கள் என்கிறது இந்த ஆணையத்தின் அறிக்கை.

2017-ம் ஆண்டின் அரசின் அறிக்கை இந்தியாவின் ஆடை மற்றும் தோல் தொழில் துறை உலகளாவிய போட்டியில் பங்கேற்கக்கூடியதாகவும் பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடியதாகவும் உள்ளதாக கூறியது. அதேவேளையில் அந்த அறிக்கை, அதிக அளவிலான கால்நடைகள் உள்ள இந்தியாவில் கால்நடை தோல் ஏற்றுமதியின் அளவு மிகவும் குறைவு என்றும் கால்நடைகள் வெட்டுவதில் உள்ள பிரச்சினை காரணமாகவே இந்த நிலை என்றும் கூறியது.

படிக்க:
மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி

பசு குண்டர் படையின் தொல்லைகள் காரணமாக நூற்றுக்கணக்கான வெட்டு கூடங்கள் மூடப்பட்டதையும் அந்த அறிக்கை சொன்னது. 2013-14 -ம் ஆண்டுகளில் 18% வளர்ந்த தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 2014-15 -ம் ஆண்டுகளில் 9% குறைந்து, 2015-16 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்து எதிர்மறை அளவுக்கு சென்றுவிட்டது. -9.86 % இருந்த அளவு 2017-18 ஆண்டுகளில் 1.4% அதிகரித்திருக்கிறது. அரசின் புள்ளிவிவரம் இவ்வாறு தெரிவிக்கிறது.

“இந்துத்துவ தலைவர்கள் பசுக்கள் மீதான அதீதத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் சார்ந்த இந்துக்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேதத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பியல் நிபுணரும் எழுத்தாளருமான எம்.எல். பரிஹார்.

நாட்டின் முதல் பசு அமைச்சர்.

கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் பாஜக அரசுகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன.

பாரம்பரியமாக இறந்த கால்நடைகளின் உடல்களை அகற்றுகிறவர்களாகவும் அவற்றின் தோலை உரிப்பவர்களாக தலித்துகள் உள்ளனர். முசுலீம்கள் பாரம்பரியமாக வெட்டுக்கூடங்கள் அல்லது கசாப்புக் கடைகளை வைத்திருப்பவர்களாகவும் இறைச்சி விற்பவர்களாகவும் உள்ளனர். எனவே, பசு பாதுகாப்பு குண்டர்கள் இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக அறிக்கை பேசுகிறது.

இந்த காவி குண்டர்களின் வன்முறைகளில் முசுலீம்கள் 56 சதவீதமாகவும் தலித்துகள் 10 சதவீதமாகவும் 9 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஃபேக்ட் செக்கர் இணையதளம். குண்டர்களின் தாக்குதல் உயிரிழந்த 78% பேர் முசுலீம்கள் என்பது இந்துத்துவ காவிகளின் உண்மையான நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

அரசுகளின் கண்டுகொள்ளாத தன்மையால் இறைச்சியை நம்பியுள்ள இந்துக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. அதாவது விவசாயிகள், கால்நடை பண்ணை வைத்திருப்போர், கால்நடை வர்த்தகர்கள்,  இறைச்சி வர்த்தகர்கள், தோல் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தியாவின் 55%  மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு 17% வழங்குகிறது. 190 மில்லியன் பசுக்களும் 108 மில்லியன் எருமைகளும் உள்ள இந்தியா, உலகிலேயே அதிக அளவிலான பால் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. விவசாயிகள் இந்த கால்நடைகளை பராமரித்து வர்த்தகம் செய்து தங்களுடைய வருமானத்தையும் உணவு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், பசு பாதுகாப்பு குண்டர்கள் மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குரியாகியுள்ளது. 2010-11 -ம் ஆண்டுகளில் ராஜஸ்தானில் 10 கால்நடை சந்தையில் 56 ஆயிரம் பசுக்களும் காளைகளும் கலந்துகொண்டன. இதில் 31 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாகின. ஆனால், 2016-17 ஆண்டுகளில் 11 ஆயிரம் கால்நடைகள் மட்டுமே சந்தைக்கு வந்தன. அவற்றில் 3 ஆயிரம் மட்டுமே விற்பனையாகின.

படிக்க:
மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

வேளாண்மை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் வயதாகும் கால்நடைகள் பிரச்சினையும் விவசாயிகளை தங்களுடைய பசுக்களை கைவிடும் நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றை பராமரிக்க விவசாயிகளால் முடிவதில்லை. இது தெருவில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தெருக்களில் அலையும் கைவிடப்பட்ட பசுக்களால் விவசாயிகளின் விளைச்சல்கள் சேதமாகிறது என்பதும் இந்த இழப்புகளின் வரிசையில் சேரும்.  இவற்றை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று மாநில அரசுகள் மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான அடிப்படை பணிகளுக்கு செலவிட வேண்டிய தொகையை மாட்டு கொட்டகைகள் கட்டவும் அவற்றை பராமரிக்கவும் செலவிடுகின்றன.

எனவே, கால்நடைகளை சார்ந்திருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் மத, சாதி பாகுபாடுகளை உருவாக்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவும் அரசுகளை மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை ஆண்ட பாஜகவை அம்மாநில மக்கள் தூக்கியெறிந்தனர்.  உண்மையில், இந்துத்துவ மோசடி பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த காரணத்தாலேயே, வலுவாக இருப்பதாக சொல்லிக்கொண்ட இடத்திலேயே காவிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.  மேலே சொல்லப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், கிராமப்புற பொருளாதாரத்தை காவி வீணர்கள் மிக மோசமான நிலையில் சீரழித்திருப்பதை உணர முடிகிறது.


கலைமதி
நன்றி: ஸ்கரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க