அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 11

பெற்றோர் கூட்டம்

ன்புள்ள பெற்றோர்களே, வணக்கம். நமது முதல் கூட்டத்திற்கு உங்களில் பெரும்பாலானோர் தாயும் தந்தையுமாகச் சேர்ந்து வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி. உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்று முதல் உங்கள் குழந்தைகளின் வாழ்வில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்விதான் அவர்களுடைய நடவடிக்கையில் முக்கிய அம்சமாகும்.

“உங்கள் குழந்தை சமுதாயத்தில் நல்லவனாக விளங்குமாறு குழந்தையை வளர்க்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று நான் கேட்டால், அனேகமாக நீங்களனைவரும் ஒரே மனதாக “ஆம், நிச்சயமாக!” என்று கூறுவீர்கள். ஆனால், ஆசைப்படுவது ஒரு விஷயம், இவ்வாறு உண்மையாக வளர்ப்புப் பணியில் ஈடுபடுவது வேறு விஷயம்.

குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்புத் தன்மைகள் ஒன்றிற்கொன்று எதிராக இருக்கக் கூடாது. குழந்தைகள் வளர்ப்பிலும் அவர்களுக்குக் கல்வி போதிப்பதிலும் பள்ளிதான் மையமாக விளங்குவதால், குடும்ப வளர்ப்பின் விஷயத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளைப் பெற்றோர்களின் முன் வைக்க பள்ளிக்கு உரிமையுண்டு.

நம் சோவியத் நாட்டில் மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் உயர்வான மானுடக் கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பன்முக நடவடிக்கையும் நம் சமுதாய அமைப்பின் உண்மையான மனிதாபிமானத்தை உருக்கொண்டிருக்க வேண்டும், வளர்க்க வேண்டும், ஊர்ஜிதப்படுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படைகள் தான் நமது வளர்ப்புப் பணியை வழி நடத்த வேண்டும்.

இது எளிதானதாக இருக்குமா? இருக்காது.

ஏனெனில் இப்படிப்பட்ட வளர்ப்பு அனுபவம் நம்மிடையே அதிகமில்லை. குழந்தைகளின் பால் மனிதாபிமான உறவைக் கொள்ள வேண்டுமெனில், இப்படிப்பட்ட வளர்ப்பின் மாற்றியமைக்கும் சக்தியை நம்ப வேண்டும், ஒவ்வொரு குழந்தையின் எல்லையற்ற உள்ளாற்றல்களை நம்ப வேண்டும், ஒரு ஆசிரியருக்கே உரித்தான பெரும் பொறுமை வேண்டும், அவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும், குழந்தையின் மனதை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதாபிமான அடிப்படைகளில் வளர்ப்புக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது, குழந்தையை முரட்டுத்தனமாக அடக்கி ஒடுக்குவதன் மூலம் இவற்றிலிருந்து தப்புவதை விடப் பன்மடங்கு சிக்கலானது.

இக்கருத்தை அடையாளச் சிறப்போடு விளக்கும் ஒரு சம்பவத்தை இப்போது சொல்வேன்.

குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் ஒரு கடையில் ஒரு சிறுவன், தனக்கு பெரிய குதிரைப் பொம்மையை வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டான். மகனுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்த தந்தை தன் பைகளைத் துழாவினார். ”நான் உனக்கு அந்தச் சிறிய குதிரைப் பொம்மையை வாங்கித் தரட்டுமா?” என்றார் தந்தை. ”சிறிய பொம்மை வேண்டாம், பெரிய குதிரைப் பொம்மைதான் வேண்டும்!” தந்தை தொடர்ந்து தன் பைகளைத் துழாவினார். “பார், இந்தச் சிறிய பொம்மை எவ்வளவு அழகாக உள்ளது!” “பார்க்க மாட்டேன்… பெரிய பொம்மை வாங்கித் தா!” “என்னிடம் போதுமான பணமில்லையே, நாளை வாங்கித் தரட்டுமா?” விளக்கினார் தந்தை. “நாளை வேண்டாம், இப்போதே வாங்கித் தா!” சிறுவன் கத்தினான். தந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போது வெள்ளை மேலங்கி அணிந்த ஒருவர் அன்பாகச் சிரித்தபடியே அங்கு வந்தார். ‘நான் குழந்தைகளைக் கவனித்து கொள்ளும் ஆசிரியர், இக்கடையில் வேலை செய்கிறேன். என்னுடன் உங்கள் பையனை இரண்டு நிமிடங்களுக்கு அனுப்புங்கள். அவர் புன்சிரிப்புடன் சிறுவனைத் தன்னறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு நிமிடங்கள் கழித்து அச்சிறுவன் அமைதியாக அறையிலிருந்து வெளியே வந்தான். அந்த ஆசிரியரோ அடிக்கடி கடைக்கு வரும்படி புன்சிரிப்போடு அழைப்பு விடுத்தார். ‘நீ அந்த மாமாவுடன் போயிருந்த போது நான் கைப்பையில் இன்னும் பணம் கண்டுபிடித்தேன். எனவே இப்போது பெரிய குதிரைப் பொம்மை வாங்கலாம்” என்றார் தந்தை. “’வேண்டாம், அப்பா, எனக்குப் பெரிய பொம்மை தேவையில்லை, சிறிய பொம்மையே வாங்கித் தா!” என்றான் மகன். “நீ பெரிய பொம்மை வேண்டுமென்று பெரிதும் ஆசைப்பட்டாயே!” தந்தை ஆச்சரியப்பட்டார். “எனக்கு பெரிய பொம்மை வேண்டாம், சிறியதையே வாங்கித் தா!” என்று மகன் கோரினான். தந்தை சிறு குதிரைப் பொம்மையை வாங்கித் தந்தார், இருவரும் வீதிக்கு வந்தனர்.

படிக்க:
இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

“அந்த வெள்ளை மேலங்கி அணிந்திருந்த மாமா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று அக்கடை ஆசிரியரின் இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக மனிதாபிமான உணர்வு மிக்க தந்தை கேட்டார். அந்த மாமா அருகில் இருக்கின்றாரா என்று பயந்தபடியே சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பின் தன் தந்தையின் காதில் மெதுவாகச் சொன்னான்: ”நீ இப்போது அழுவதை நிறுத்தி, சிறிய பொம்மைக்கு ஒத்துக் கொள்ளாவிடில் உன்னை அடிக்கும் அடியில் கடையிலிருந்து பறந்து போவாய்’ என்றார் அந்த மாமா”.

இங்கு பார்த்தீர்களா, குழந்தைகள் கடையின் ஆசிரியர் வளர்ப்புப் பிரச்சினை ஒன்றை மிக எளிதாகத் தீர்க்கிறார். மனிதாபிமான உணர்வு மிக்க தந்தையோ, வளர்ப்புப் பிரச்சினைகளை இதற்குகந்த வழிகளிலேயே எப்படித் தீர்ப்பது என்று இன்னமும் யோசித்து கொண்டிருக்கிறார். ஏனெனில், மனிதாபிமான வளர்ப்புதான் உண்மையான வளர்ப்பு முறையாகும்.

அந்தக் குழந்தைகள் கடையின் ஆசிரியரைப் போல் இருக்க விரும்புகின்றீர்களா?

விரும்பமாட்டீர்களென எண்ணுகிறேன். மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்க விரும்புகின்றீர்களா?

இது உங்கள் முகங்களில் நன்கு தெரிவது குறித்து மகிழ்ச்சி.

சரி, மனிதாபிமான அடிப்படையிலான வளர்ப்பின் சாரம் என்ன?

குழந்தையை மாற்றியமைப்பதற்காக நமது வளர்ப்புக் கடமைகளுக்குக் குழந்தை இயல்பாக ஒத்துவருமாறு செய்ய வேண்டும், இந்த வளர்ப்புப் பணியில் குழந்தையையே நமது கூட்டாளியாக்கிக் கொள்ள வேண்டும்; குழந்தைக்கு ஞானத்தின் பால் விருப்பம் உண்டாகவும் சுயமான கல்வி, அறிதல் நடவடிக்கையின் மீது ஆர்வம் ஏற்படவும் உதவ வேண்டும்.

கட்டாயமான, அதிகாரத் தொனியிலான வளர்ப்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. குழந்தையின் மீதான நிர்ப்பந்தத்தை அதிகப்படுத்தி, தன் கடமையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினாலே போதும். பல நுட்பமான கட்டாய, நிர்ப்பந்த வழிகள் வளர்ப்புப் பிரச்சினைகளை எளிதாக அகற்றி விடுகின்றன. ஆனால், இப்படிப்பட்டதொரு சூழ்நிலை குழந்தை பன்முக ரீதியாக, முழுமையாக வளர்ச்சியடைய வழிகோலுவதில்லை, குழந்தையின் முழு மன வளர்ச்சிக்கு உதவுவதில்லை.

இப்பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்க எது நமக்கு இடையூறாக உள்ளது? குழந்தையின் இயல்புதான் இடையூறாக உள்ளது!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க