பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 4

டோக்ளியாட்டி

பாசிசத்தைக் குறித்து விளக்கும்போது ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதைக் காண்போம். பாசிசமானது பெரிய பூர்ஷுவா வர்க்கத்தினரிடமிருந்து அதிகாரத்தை வென்றெடுத்து அதைக் குட்டி பூர்ஷுவா பகுதியினருக்குக் கிடைக்கச் செய்கிறது. அந்தக் குட்டி பூர்ஷுவா வர்க்கம் இந்த அதிகாரத்தை பெரிய பூர்ஷுவா வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்று அவர்கள் கூறினார்கள். நீங்கள் இந்த நிலைப்பாட்டை துராத்தி, டிரவெஸ் 2 போன்ற இத்தாலிய சமூக ஜனநாயக எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காண முடியும். இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் தங்களுடைய நீண்டகால நடைமுறைக் கொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள். பாசிசத்திற்கெதிரான போராட்டமானது அனைத்து சமூக மக்கள் பகுதியினராலும் நடத்தப்படும் என்பதே அந்த நடைமுறைக் கொள்கை. இவ்வாறுதான், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு குறித்த பிரச்சினையை அவர்கள் தவிர்த்தார்கள்.

விஷயத்திற்கு வருவோம். 1932-ல் ஜெர்மனியில் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்த துண்டு துக்கானிக் குழுக்கள் உள்ளிட்டு பல எதிர் – நீரோட்டங்கள், பாசிசமானது குட்டி பூர்ஷுவாக்களின் சர்வாதிகாரத்தை பெரிய பூர்ஷுவாக்களின் மீது ஏற்படுத்துகிறது என்று வலியுறுத்தின. இது தவறான அனுமானமாகும். இதிலிருந்து தவறான அரசியல் திசைவழி தவிர்க்க இயலாதவாறு பெறப்படுகிறது. “வலதுசாரிகளின்” எல்லா எழுத்துக்களிலும் அதைக் காண முடியும்.

மற்றொரு விளக்கம் குறித்தும் நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். “போனபார்டிசம்” என்று பாசிசத்தைக் குறித்து சொல்லப்படும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிராட்ஸ்கீயத்தின் யுத்தக் குதிரையான இந்தச் சொற்றொடரானது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோருடைய சில அறிக்கைகளிலிருந்து (லூயிபோனபார்ட்டின் 18-வது புருமேர் போன்றவற்றிலிருந்து) எடுக்கப்பட்டதாகும். ஆனால் மார்க்ஸ், எங்கெல்சினுடைய பகுப்பாய்வானது முதலாளித்துவத்தின் வளர்ச்சி சகாப்தமான அந்தக் காலகட்டத்திற்குப் பொருத்தமானதாகும். ஆனால் அதை, ஏகாதிபத்திய காலகட்டமான இன்று எந்திரகதியில் பிரயோகிப்பது சரியல்ல.

பாசிசத்தை “போனபார்டிசம்” என்று சொல்லும் இந்த விளக்கத்திலிருந்து என்ன தெரிகிறது? இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அதிகாரத்திலிருப்பது பூர்ஷுவா வர்க்கத்தினர் அல்ல; மாறாக அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய முசோலினியும் அவருடைய ஜெனரல்களும்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர் என்பதாகும்.

டிராட்ஸ்கி.

புருனிங் அரசாங்கத்தை டிராட்ஸ்கி விளக்கிய விதத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: “ஒரு போனபார்டிஸ்டுகளுடைய அரசாங்கம்” டிராட்ஸ்கியவாதிகள், பாசிசம் குறித்து இத்தகைய கருத்தையே எப்பொழுதும் கொண்டுள்ளனர். அதனுடைய வேர் எது? பாசிசம் என்பது பூர்ஷுவா வர்க்கத்தினரின் சர்வாதிகாரம் என்ற விளக்கத்தை நிராகரிப்பதேயாகும்.

பூர்ஷுவா வர்க்கத்தினரின் அப்பட்டமான சர்வாதிகாரமான பாசிசம் இன்று ஏன் தோன்றியுள்ளது? குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் ஏன் தோன்றியுள்ளது?

இதற்கான விடையை லெனினிடமிருந்தே பெறலாம். ஏகாதிபத்தியம் குறித்து அவர் எழுதியுள்ளவற்றில் நீங்கள் காணலாம். ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்களை நீங்கள் அறிவீர்கள். லெனின் அளிக்கும் விளக்கமும் உங்களுக்குத் தெரியும். ஏகாதிபத்தியம் என்பது பின்வருமாறு குணாம்சப்படுத்தப்படுகின்றது:

1) உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம்;

2) வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல், நிதி மூலதனத்தின் அடிப்படையில் ஒரு நிதி கோஷ்டி உருவாதல்;

3) மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம்;

4) சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம். இறுதியாக, பெரும் முதலாளித்துவ  நாடுகளிடையே உலகை மறு கூறுபோடுதல், இந்தப் பணி இப்போது பூர்த்தியடைந்து விட்டதாகவே கருதலாம்.

இவைதான் ஏகாதிபத்தியத்தின் அம்சங்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிற்போக்கான உருமாற்றத்தை அடையும் போக்கு அனைத்து பூர்ஷுவா அரசியல் அமைப்புகளிலும் காணப்படுகிறது. இதையும் கூட நீங்கள் லெனின் எழுத்துக்களில் காணலாம். இத்தகைய அமைப்புகளைப் பிற்போக்கானதாக ஆக்கவேண்டுமென்ற போக்கு உள்ளது. இந்தப் போக்கு பாசிசத்துடன் மிகவும் இணக்கமான வடிவங்களில் தோன்றுகிறது.

ஏன்? ஏனென்றால், வர்க்க உறவுகள் மற்றும் தங்களுடைய இலாபங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது, தொழிலாளிகள் மீது மிகுந்த நிர்ப்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களைப் பூர்ஷுவாக்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும், ஏகபோகங்கள் அதாவது பூர்ஷுவா வர்க்கத்தின் தலையாய சக்திகள், குவிப்பின் மிக உயர்ந்த கட்டத்தை அடைகின்றன. அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்குத் தடைக்கற்களாக ஆகிவிடுகின்றன. இதனால் பூர்ஷுவா வர்க்கம், தான் உருவாக்கியதற்கெதிராகவே திரும்ப வேண்டியுள்ளது; ஏனென்றால் ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது இன்று முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் பூர்ஷுவா வர்க்கத்தினர் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தைக் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் மற்றொரு தவறுக்கெதிராகவும் நான் உங்களை எச்சரிக்க வேண்டும். அதுதான் முன்னிலைப்படுத்துவதாகும். முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு முடிந்துபோன, தவிர்க்க இயலாத ஒன்று எனக் கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்பது கிடையாது. இங்கு நாம் சில நடைமுறை உதாரணங்களைக் காண்போம்.

ஜெர்மன் – நாஜிகளின் பேரணி.

உதாரணத்திற்கு இங்கிலாந்து ஒரு பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கே ஜனநாயக வழிப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கான அம்சங்கள் இல்லையென்று கூறிவிட முடியாது) உள்ளது. பிரான்சையும் அமெரிக்காவையும் எடுத்துக் கொள்வோம், இந்நாடுகளில் பாசிச வடிவில் சமூகத்தை உருவாக்கும் போக்கு உள்ளதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இங்கே நாடாளுமன்ற வடிவங்கள் இன்னும் உள்ளன. பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. என்றாலும் பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குப் பொருளாகாது.

இத்தகையதொரு கூற்றை நாம் விவாதித்தோமென்றால் அது ஒரு விஷயத்தை தவறாக முன்னிலைப்படுத்தும். எதார்த்தத்தில் இல்லாததை அது உண்மை என உறுதிப்படுத்துபவர்களாகிறோம். அதே சமயத்தில் ஒரு பெரும் அரசியல் தவறை நாம் செய்து விடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வின் வீச்சு மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதில் அதனுடைய திறன் ஆகியவற்றை வைத்தே பாசிச சர்வாதிகாரம் உருவாக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்படுகின்றன என்பதை நாம் காணத் தவறிவிடுகிறோம். பாட்டாளி வர்க்கம் எதிர்க்குமானால், இத்தகைய அமைப்புகளைத் தூக்கியெறிவது கடினம். ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் விரிவடைந்து அதிகாரத்திற்கான போராட்டமாகிவிடும்.

இதுதான் பாசிசத்தைக் குறித்து விளக்கும் பொழுது சொல்லப்பட வேண்டிய முதல் அம்சம்.

படிக்க:
அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !
100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி

இரண்டாவது அம்சம் பாசிசத்தினுடைய வெகுஜன அமைப்புகளின் தன்மையில் அடங்கியுள்ளது. பாசிசம் என்ற பதம் பிற்போக்குத் தனம், கொடுங்கோன்மை போன்றவைகளுக்கான மறு பெயராக துல்லியமற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. இது சரியல்ல. பாசிசம் என்பது பூர்ஷுவா ஜனநாயகத்திற்கெதிரான போராட்டம் என்பதை மட்டுமே குறிக்கவில்லை. அந்தப் போராட்டத்தை மட்டுமே நாம் எதிர்நோக்கியிருக்கும் பொழுது இக்கருத்தை இந்தப் பொருளில் நாம் பயன்படுத்த முடியாது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்றவற்றில் நாம் காண்பது தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் குட்டி பூர்ஷுவா தன்மையிலான ஒரு புதிய வெகுஜன அடித்தளத்தின் மீது உருவாகும்போதுதான் – எங்கெல்லாம் இவ்வகையான பாசிசம் இருக்கிறதோ – அங்கெல்லாம் இந்தப் பதத்தை நாம் பயன்படுத்தலாம்.

அடிக்குறிப்புகள் :

பிலிப்போ துராத்தி (Filippo Turati )

2. பிலிப்போ துராத்தி (1857-1932) 1892 இல் இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து தலைமை தாங்கியவர். அவரது தத்துவார்த்த அரசியல் நிலைகள் இரண்டாவது அகிலத்தின் சீரழிந்த சீர்திருத்தவாதத்தை ஒத்திருந்தது. அவரது தலைமையில் வடக்குப் பகுதியின் தொழிற்சாலை பூர்ஷுவாக்களுடன் தெளிவான ஆனால் வெளிப்படையாகத் தெரியாத கூட்டுறவை சோஷலிஸ்டுக் கட்சி ஏற்படுத்தியது. அப்பொழுது கட்சியில் வளர்ந்து வந்த மாக்ஸிமலிஸ்டுகள் (அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்) அணியினரை துராத்தி எதிர்த்துப் போராடினார். மாக்ஸிமலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த சண்டை, புரட்சிகரவாதிகள் என்ற முறையில் பயனற்றவர்களாக இருந்தனர் என்பதை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் சோஷலிஸ்டுப் புரட்சிக்கு மாற்றாக ஒன்றில் துராத்தி அக்கறை கொண்டிருந்தார்.

கிளாடியோ டிரவெஸ் (Claudio Treves)

பூர்ஷுவாக்களில் விவரமறிந்த புத்திசாலித்தனமான பகுதியுடனும் குட்டி பூர்ஷுவாக்களுடனும் ஒரு முற்போக்கு சீர்திருத்த கூட்டணி ஏற்படுத்துவதற்கு இவர்கள் முக்கிய தடங்கலாக இருப்பார்கள் என்று (துராத்தி) பார்த்தார், 1922 இல் சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, இத்தாலிய யூனிட்டரி சோஷலிஸ்டுக் கட்சி என்ற சீர்திருத்தவாதக் கட்சியை துராத்தி ஸ்தாபித்தார். 1926 இல் இத்தாலியில் பாசிசத்திற்கு முந்திய கால ஜனநாயகத்தின் அடிச்சுவடு எதுவுமில்லாமல் “விசேட சட்டங்கள்” அழித்தபோது அவர் பிரான்சுக்கு தப்பி ஓடினார்.

கிளாடியோ டிரவெஸ் (1858-1933) சோஷலிஸ்டுக் கட்சியில் துராத்தியுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்தவர். 1922 அக்டோபரில் வெளியேற்றப்பட்டு துராத்தியைத் தொடர்ந்து புதிய சீர்திருத்தவாதக் கட்சியில் சேர்ந்தார். அவரைப் போலவே 1926 இல் தேசத்தைவிட்டு ஓடினார்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க