அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 12

பெற்றோர் கூட்டம் (தொடர்ச்சி)

குழந்தை – உணர்ச்சிகரமான ஒரு ஜீவன். இன்றைய மகிழ்ச்சி, திருப்தியில்தான் அவன் வாழ்கிறான். வளமான, உட்பொருள் மிக்க, பன்முக எதிர்கால சமூக வாழ்விற்கு அக்குழந்தையைத் தயார்படுத்த அக்குழந்தையின் இன்றைய வாழ்வை இதற்குக் கீழ்ப்படுத்த நாம் விரும்புகிறோம். இந்த எதிர்கால சமூக வாழ்க்கை அக்குழந்தைக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டு வருமென நாம் நம்புகிறோம். வளர்ப்பவர், வளர்க்கப்படுபவரின் இப்போக்குகளுக்கு இடையிலான முரண்பாட்டை எப்படி அகற்றுவது?

கல்வி கற்பிப்பது என்பது ஒரு எளிய நிகழ்ச்சிப் போக்கல்ல. குழந்தையின் சக்தியையும் திறமைகளையும் வளர்க்கும் பொருட்டு இது கடினமானதாகத்தான் இருக்க வேண்டும். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகளைக் கண்டு குழந்தை அஞ்சாவிட்டாலும் பல காரணங்களினால் முக்கியமாக என் கருத்துப்படி, தன் கடமையைச் செய்யும்படி அக்குழந்தையை நிர்ப்பந்திப்பதன் காரணத்தால் – படிக்கும் ஆர்வம் மறைகிறது. குன்றாத வளமாகிய இக்கல்வி ஆர்வத்தை குழந்தையிடம் எப்படி ஊக்குவித்து வளர்ப்பது?

நம் முன் இரண்டு வழிகள் உள்ளன: ஆசிரியர்களின் சித்தத்திற்குக் கட்டுப்படுமாறு குழந்தையைக் கட்டாயப்படுத்தலாம், நிர்ப்பந்திக்கலாம் அல்லது சுயவளர்ப்பு, சுயகல்விப் பாதையில் அக்குழந்தை நடைபோட உதவலாம்.

இந்த இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு உங்களை அறைகூவி அழைக்கிறேன்.

குழந்தை வளர்ப்பில் நம் முயற்சிகள் ஒன்றிற்கொன்று முரண்படாமல் இருக்க நான் ஒரு சில சிபாரிசுகளை உங்கள் முன் வைக்கிறேன். இவற்றைக் கடைபிடித்தால் நன்றாயிருக்கும். இவற்றை உருவாக்கிய போது நான் இவற்றை “முதுமொழிகள்” என்று நிபந்தனையோடு அழைக்கிறேன் – மூலச் சிறப்புள்ள ஆசிரியரியல் பாரம்பரியம், கம்யூனிச சமுதாயத்தின் இலட்சியங்கள், சிறந்த ஆசிரியர்களின் அனுபவங்கள், குழந்தை வளர்ப்பு சம்பந்தமான என் சொந்த நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டேன். இவற்றை முழுமையான வளர்ப்புக் கடப்பாடுகளாகக் கருத வேண்டாம். உங்கள் அனுபவம், நமது கூட்டு முயற்சிகளின் அனுபவம் ஆகியவை இவற்றில் பல திருத்தங்களைச் செய்யுமென நம்புகிறேன். – நான் இச்சிபாரிசுகளை – ”முது மொழிகளை” – பல தாள்களில் அச்சிட்டுள்ளேன். தயவு செய்து, ஒவ்வொருவரும் ஒரு பிரதியை எடுத்துக் கொள்ளுங்கள், மெளனமாக படித்துப் பாருங்கள்.

ஒரு ஆசிரியரின் பத்து “முது மொழிகள்”

1. மனிதாபிமான உணர்வுமிக்க சமுதாயத்தில் மனிதாபிமான அடிப்படையில்தான் வளர்ப்புப் பணியும் நடக்க முடியும். இதன் முக்கியக் கோட்பாடு – குழந்தையை இந்த நிகழ்ச்சிப்போக்கில் ஈடுபடுத்த வேண்டும், இந்த வளர்ப்பில் குழந்தையே தானாக நம் உதவியாளனாகும்படி செய்ய வேண்டும்.

2. கலந்து பழகுவது என்பது மனித வாழ்க்கையின் சாரம். மனிதாபிமான வளர்ப்பின் முக்கிய முறை, அக்குழந்தையுடன் கலந்து பழகும் மகிழ்ச்சியை, கூட்டாக விஷயங்களைத் தெரிந்து கொள்ளுதல், கூட்டு உழைப்பு, விளையாட்டு, ஓய்வு ஆகியவற்றின் மகிழ்ச்சியை குழந்தைக்குத் தருவதாகும்.

3. அன்றாட வாழ்க்கை, பெரியவர்களின் உறவுகளின் தன்மை – இச்சூழலில்தான் எதிர்கால மனிதனின் மனநிலை உருவாகிறது. எனவே, நமது அன்றாட வாழ்க்கை, நமது பரஸ்பர உறவுகள், எந்த ஒரு லட்சியத்தை குழந்தையின் மனதில் புகுத்த முயலுகின்றோமோ அதற்கு இயன்ற அளவு ஏற்றதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும். 80-ம் ஆண்டுகளின் ஆசிரியர்கள் 21-ம் நூற்றாண்டு மனிதர்களை நினைவிலிருத்த வேண்டும்.

4. மனிதர்களின் மீதான நம்பிக்கையும், சொந்தக் கருத்துகளின் மீதான நம்பிக்கையும் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து பழகுவதற்கும் தனி நபரை மேன்மையாக்கவும் அடிப்படையாகும். எனவே, நம் மீதான – தன் ஆசிரியர்களின் மீதான – நம்பிக்கையை, தன் சக நண்பர்கள், மனிதர்கள் மீதான நம்பிக்கையை, தன் மீதான சுய நம்பிக்கையை குழந்தைகளிடம் ஊட்டி வளர்க்க வேண்டும்.

5. சோஷலிச சமுதாயம் என்பது சமமான, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டும் மனிதர்களின் சமுதாயமாகும். நம் வளர்க்கும் முறையில் ஒவ்வொரு குழந்தையின் மன நிலையின் மீதான மதிப்பு ஊடுருவி நிற்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், பொதுவாக மனிதர்களைப் பற்றிய அக்கறையை அவர்களிடம் ஊட்ட வேண்டும்.

6. எந்த ஒரு சமுதாயத்தில் மனிதன் தான் சக சமுதாய உறுப்பினர்களுக்குத் தேவை என்று உணருகிறானோ, எங்கே இவனை செயற்கையாக உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் இருக்கின்றார்களோ அங்குதான் தன் திறமைகள், சக்திகள் முழுவதையும் அவனால் வெளிப்படுத்தி வளர்க்க முடியும். தான் வாழும் சமுதாயத்தில் குழந்தை இப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் கொண்டிருக்க வேண்டும்.

7. குழந்தை உணர்ச்சிகரமான ஒரு ஜீவன், நம்மைப் புரிந்து கொள்வதே அவனுக்குக் கடினம். ஆசிரியர்களும் பெற்றோர்களுமாகிய நாம்தான் குழந்தையைப் புரிந்து கொண்டு அக்குழந்தையின் மனநிலைக்கேற்ப நம் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

8. வளர்ப்புப் பணி என்பது ஒரு மறைவான, நீண்ட நிகழ்ச்சிப் போக்கு. எனவே, எல்லாத் திட்டவட்டமான வளர்ப்புக் கடமைகளின் நிறைவேற்றத்திலும் நாம் அறிவுக் கூர்மை, தொடர்ச்சி, பொறுமை ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

9. கூருணர்வுத் திறம், இரக்கம், அன்பு, பாசம், மென்மை, திறந்த மனது, எப்போதும் உதவத் தயாராக இருப்பது, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய குணநலன்களை நாம் கொண்டிருக்க வேண்டும். இவற்றோடுகூட நம் பாலும் குழந்தைகளின் பாலும் கண்டிப்போடு நடந்து கொள்ள வேண்டும். வளரும் தலைமுறையின் முன் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். தாயகத்தின் எதிர் காலத்தின் மீது அக்கறை காட்ட வேண்டும்.

10. தான்தோன்றித்தனம், அதிகாரம் செய்வது, கத்துவது, திட்டுவது, தன்மானத்தைப் புண்படுத்துவது, கிண்டல் செய்வது, முரட்டுத்தனமாக நடப்பது, அச்சுறுத்துவது, நிர்ப்பந்திப்பது போன்றவற்றைக் கண்டிப்பாக நாம் கைவிட வேண்டும். இவை மனிதாபிமான வளர்ப்பிற்கு முரணானவை.

இந்த “முது மொழிகளை” நடைமுறையில் நிறைவேற்றத் தயாரான முறை எதுவும் நம்மிடமில்லை. எனவே, நாம் ஆக்கபூர்வமாக இவற்றை அணுகி, மனிதாபிமான அடிப்படைகளில் குழந்தைகளை வளர்க்கும் வழிகளை இடையறாது தேட வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் மீதுமான நம் உயர்வான அக்கறை இதில்தான் வெளிப்பட வேண்டும்.

படிக்க:
கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் !

அடுத்து, ஒரு பெரும் வேண்டுகோள், பள்ளிக்கு உங்களால் எவ்விதத்தில் உதவ முடியும் (அதாவது வகுப்பறை மற்றும் தாழ்வாரங்களை ஒழுங்குபடுத்துவது, வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுவது போன்றவை) என்று தயவு செய்து ஒரு தாளில் எழுதித் தாருங்கள். மேலும், உங்கள் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை ஒழுங்கமைப்பது சம்பந்தமான யோசனைகளையும் எழுதுங்கள்.

நாம் கூட்டாக செயல்பட்டு சிறிது அனுபவம் கிடைத்தபின் ஓரிரு மாதம் கழித்து நாம் மீண்டும் சந்தித்து நம் குழந்தைகளின் வளர்ப்பைப் பற்றிப் பேசலாம்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க