சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 19


காட்சி : 26

இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், குடியானவன்.

பாலச்சந்திரப்பட்டர் : கேசவப்பட்டரே உம்முடைய பந்துக்களெல்லாம் வந்து விட்டாளோ?

கேசவப்பட்டர் : ஆகா! சகலரும். ஏறக்குறைய பத்தாயிரம் குடும்பங்கள் இருக்கும் போல இருக்கு சமாராதனையில்.

கேசவப்பட்டர் : பத்தாயிரத்து நூறுவோய்.

பாலச்சந்திரப்பட்டர் : சிவாஜி தர்ம தாதா அவன் நீடூழி காலம் வாழ வேண்டும்.

கேசவப்பட்டர் : அந்த தர்ம தாதா கெடக்கட்டும் ஒய். இப்படிப்பட்ட தர்ம தாதாக்களை நமக்குத் தருகிற நமது குல குருமார்களைப் போற்றும் ஒய். இவ்வளவு சுக போகத்தை நமக்குத் தரும் சாஸ்திரம் குலையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலே நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

பாலச்சந்திரப்பட்டர் : காகப்பட்டர் இங்கு பிரவேசித்ததும் நமது குலத்துக்கே யோகம் பிறந்துவிட்டது. அடடா கேசவப்பட்டரே. இந்த மராட்டியா யுத்தத்திலே ஜெயித்தபோது, எவ்வளவு ஆர்ப்பரிச்சா தெரியுமா? இப்ப பொட்டிப் பாம்பாகி விட்டா. நாம் இப்போத்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியறது. நமது கெளரவம் காகப்பட்டரால் நிலைத்தது. அவரே நமது குல ரட்சகர்.

(குடியானவன் வருதல்)

கேசவப்பட்டர் : வாப்பா, வா!

குடியானவன் : கும்பிடுறேன் சாமி!

கேசவப்பட்டர் : ஊர் எவ்வளவு ஜெகஜோதியாயிருக்கு பார்த்தியோ?

பாலச்சந்திரப்பட்டர் : எங்கு பார்த்தாலும் வேத ஒலி , பிராமண சேவை. இப்படிப்பட்ட காட்சியைக் காணக் கொடுத்து வைத்தோமே..

குடியானவன் : மழையே காணுங்களே.

கேசவப்பட்டர் : நம்முடைய நாட்டிலே வந்திருக்கிற புண்ணிய புருஷாளைத் தரிசிச்சிண்டிருக்கா வர்ண பகவான். அவாள் சந்தோஷமா இருக்கச்சே , கண்ணீர் விடப்படாது பாரு.

குடியானவன்: சாமி என்ன கதை வேணுமானாலும் சொல்லுங்க. மழையில்லாத்தாலே வயக்காடெல்லாம் வெடிச்சப் போச்சு. மாடு கண்ணெல்லாம் எலும்பும் தோலுமாப்
போச்சுங்க.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய் இவன் இந்த சாது சன்னியாசி கூட்டத்தைச் சேர்ந்தவனா இருப்பானோ?

குடியானவன் : ஏங்க, அவுங்க சொல்றதிலேயும் தப்பு ஒண்ணும் இல்லீங்களே இப்ப பாருங்க, பத்தாயிரக் கணக்கான பிராமணா போஜனத்துக்கு வந்திருக்காங்களே, இவுங்கள்ளாம் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தப்ப எங்க போனாங்கன்னு கேக்கறாரு பண்டாரத்தையா. நியாயந்தானுங்களே! அப்போ காணுங்களே இவுங்களெல்லாம். சமாராதனைன்னு சொன்ன உடனே, அடேங்கப்பா புத்திலேயிருந்து ஈசல் கிளம்புற மாதிரியும், பழத்தோட்டத்திலே இருந்து வெளவால் கிளம்புற மாதிரியும் வந்துட்டாங்களே.

பாலச்சந்திரப்பட்டர் : டே பிராமணாளைத் தூஷிக்காதேடா . இதிகாசத்தை, சாஸ்திரத்தைப் பழிக்காதே

குடியானவன் : என்னமோ போங்க… வரவர எங்களுக்கு இந்தப் புராணம் இதிகாசம் இதிலெல்லாம் சந்தேகம் வலுத்துக்கிட்டுத்தான் வருது.

பாலச்சந்திரப்பட்டர் : சந்தேகம் வலுக்கிறதா. அட, சர்வேஸ்வரா! இந்தப் பாபிகளுக்கு என்ன தண்டனை தருவாயோ?

கேசவப்பட்டர் : ஏண்டா விதண்டாவாதி ! விதண்டாவாதம் பேசிண்டிருக்கே அஞ்ஞானி.

குடியானவன் : அடே! நீங்கதான் பெரிய மெய்ஞானியா இருங்களேன். நாழியானாலும் ஆகட்டும். ஒரு சந்தேகம். இந்த அண்டசராசரங்களை எல்லாம் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதாதானே சொல்றீங்க..

கேசவப்பட்டர் : அதிலே உனக்கென்னடா சந்தேகம். ஏண்டா ஒரு வஸ்து நிக்கணும்னா, அதுக்கு ஒரு ஆதாரம் வேணுமோ, இல்லையோ?

குடியானவன் : ஆமாம் !

கேசவப்பட்டர் : அதுபோல இந்த அண்டத்தை ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷன் தாங்குகிறதா பெரியவா சொல்றா ! இதிலென்னடா தப்பு?

குடியானவன் : அப்படி வாங்க வழிக்கு. இப்ப நீங்க சொன்னீங்களே, இது நியாயமான பேச்சு. ஏனுங்க, அண்டத்தை ஆதிசேஷன் தாங்கினபோது, ஆதிசேஷனை எது தாங்குச்சி? அதுக்கும் ஒரு ஆதாரம் வேணும்ங்களே?

கேசவப்பட்டர் : போடா போ விதண்டாவாதி!

குடியானவன்: கோவிக்காம சொல்லுங்க. தெரியாம கேக்கறேன். நான் பட்டிக்காட்டான். நீங்கள்ளாம் எல்லாம் படிச்ச மெய்ஞானின்னு பேசுறீங்களே. எங்க சந்தேகத்தை போக்கணுமில்லே. அண்டத்த ஆதிசேஷன் தாங்குறாருன்னு சொல்றீங்க ஒரு சமயம். அப்புறம் சொல்றீங்க, பார்வதி சிறு விரல்லே மோதிரமா இருக்கிறார்ன்னு சொல்றீங்க. இன்னொரு சமயம் என்னடான்னா பார்க்கடலிலே பள்ளி கொண்டிருக்கார்னு சொல்றீங்க. அது எப்படிங்க முடியும்? ஒரே ஆதிசேஷன் பார்வதி விரல்லெ. மோதரமா இருக்காரு பரந்தாமனுக்குப் படுக்கையா இருக்காரு. இந்த அண்டத்தையும் தாங்கறார்ணா இது நம்பற சேதிங்களா? என்னமோ போங்க. ஒங்களுக்கே தெரியாது… எனக்கு எங்கே சொல்லப் போறீங்க?

♦ ♦ ♦

காட்சி : 27
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, காகப்பட்டர், மோகன், தளபதி, பட்டர்கள்.

காகப்பட்டர் : சிவாஜி அன்று சூத்திரனாகப் பிறப்பிக்கப்பட்டாய். ஆனால் ஆகம விதிப்படி இன்று நீ க்ஷத்திரியனாக்கப்பட்டாய். அரசாளும் தகுதி பெற்றாய், அந்தணரின் ஆசி பெற்றாய்.

மராட்டியப் பிரமுகர்களே! சாஸ்திரோத்தமாக செய்யப்பட்ட யாகாதி காரியங்களின் விசேஷ பலனால் சத்திரபதி சிவாஜி க்ஷத்திரியராகிவிட்டார். ஆரிய ஆசிர்வாதம் பெற்ற அவர், ஆண்டவனின் ஆதரவைப் பெற்று விட்டார். இனி அவரே உங்களுக்கு மன்னன்.

மன்னா! மன்னன் மக்களின் தலைவன்; மகான்கள் மன்னருக்குத் தலைவர். ஆண்டவன் மகானின் தோழன். இதுவே வேதாசாரம். வேதம் உள்ளளவும், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் மராட்டிய மண்டலம் ஜெகஜோதியாய் விளங்கும். சிவாஜி இனியாகிலும் நீ திரவியத்தை கோட்டைக் கொத்தளங்கள் கட்டுவதற்கும் அகழி , அரண் அமைப்பதற்கும், ஆயுதங்களுக்கும் வீணாக்காமல் பகவத் பக்திக்கும், பிராமண சேவைக்கும் செலவிடு, உத்தமனே! உன் ராஜ்யம் சனாதன பூமியாக விளங்கட்டும். சர்வ மங்களம் உண்டாகட்டும்.

(ஆசிர்வதிக்கிறார். சிவாஜி வணங்க, மோகன் ஆவேசமாய் ஒடிவந்து)

மோகன் : மராட்டியமே, மண்டியிடாதே வீரமே வீழ்ச்சியுறாதே மராட்டிய மாவீரர்களே மன்னன் சிவாஜியை மாற்றான் முன் மண்டியிடச் செய்த கோழைகளானீர். கொடுமை, கொடுமை இது. அறிவுலகத்திலே அனைவரும் இதைக் கண்டித்தே பேசுவர். முடி நமது சிவாஜி மன்னனிடம், பிடி இந்த வேதம் ஓதியிடம்.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

காகப்பட்டர் : யார் இந்த துஷ்டன்? போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோகன் : போதும் நிறுத்தடா உன் மோசடிப் பேச்சை.

(சிவாஜி மோகன் கன்னத்தில் அடித்தல்)

வேந்தே! தாங்கள் மண்டியிட்ட போது உண்டான வேதனையை விட இது சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது.

காகப்பட்டர் : சிவாஜி உன்னுடைய ஆட்சியிலே இப்படிப்பட்ட அவலட்சணங்கள் இருக்கவே கூடாது… எவ்வளவு போக்கிரித்தனமாகப் பேசுகிறான்.

மோகன் : நாலு ஜாதி அதில் பிராமணர் அடக்கி ஆளவும், மற்றவர்கள் அடிமையாகவும் பிறக்கின்றனர் என்ற கொள்கையை எதிர்ப்பதால் போக்கிரித்தனம்? ஆண்டவன் அருள்பெற அறநெறி தேவையே ஒழிய, ஆரியரின் காலைக் கழுவி, நீரைப் பருகுவது வழியல்ல என்று எடுத்துக் கூறுவதா போக்கிரித்தனம்? எது போக்கிரித்தனம்?

காகப்பட்டர் : ஏது , இவன் போக்கிரி மட்டுமில்லை ; விதண்டா வாதக்காரனாகவும், இருக்கிறானே! ஏ, பாபஸ்வரூபமே பிராமணோத்தமர்களை நிந்தனை செய்யாதே. மீளா நரகம் போவாய்.

மோகன் : நரகம் மேல். அங்கு நயவஞ்சகர் காலிலே நாடாள்வோர் வீழ்வார்கள் என்ற கதை இல்லை. மமதை பிடித்தவனே! உன் மனம் களிப்பது எனக்குத் தெரியும். மராட்டியரின் மாவீரத் தலைவனை மண்டியிடச் செய்து விட்டோமே என்ற செருக்குடன் இருக்கிறாய். ஆனால் …

காகப்பட்டர் : துஷ்டனே முன்னம் ஒரு நாள் மாபலி என்ற மன்னர், தன் முடி மீது பரமனின் அடிவைக்க இடமளித்தான். சிவாஜி மன்னன் புத்திமான், சனாதனி. ஆகவே, பிராமண பக்தியோடு இருக்கிறார். பண்டைப் பெருமையை நிலைநாட்டுகிறார்.

சிவாஜி : மோகன், இந்த சபையிலே இனித் துடுக்குத்தனத்துக்கு இடமளிக்கப் போவதில்லை .

மோகன் : அது தெரிகிறது மகராஜ்! இனி இங்கு வீரருக்கு வேலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

காகப்பட்டர் : அடே, விஞ்ஞானி கேள்! வேத, புராண, சாஸ்திர, இதிகாசங்களுக்கு மேன்மையும், மகிமையும் அவைகளிலே நம்பிக்கையும் மக்கள் உள்ளத்திலே இருக்கும் மட்டும், உன் போன்ற வீரர்கள் கூவினாலும், கொக்கரித்தாலும், எம்மை அசைக்க முடியாது. வாளை வீசுவதாலேயே வெற்றி கிடைத்துவிடும் என்று எண்ணாதே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

மோகன் : காகப்பட்டர் மண்டியிடும் மன்னர்கள் மட்டுமே மாநிலத்தில் உள்ளனர் என்று எண்ணாதீர். மக்கள் மனமயக்கம் வெகு விரைவிலே தெளியப் போகிறது. அப்போது உங்கள் அட்டகாசம் அடியோடு ஒழியும். மாவீரர்களே! மன்னன் சிவாஜியின் சபையிலே வரம்பு மீறி பேசினேன் என்று என்னைத் தண்டிக்கட்டும். ஒரு வார்த்தை உங்களுக்கு. ஆரியருக்கு அடிப்பணியாதீர். அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர். அறமும் தழைக்காது. அரசும் நிலைக்காது. அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். ஆறு, பத்து, இருபது தலையுடன் ஆமை வராக முகமுடையான், அண்ணன் தம்பி மகனுடையான், அந்தப்புரத்திலே அறுபதினாயிரம் பேருடையான் என்று கூறி, கடவுளையே நிந்திக்கும் கயவர்கள் அவர்கள். அவர்களுடைய கபட வேடத்தை நம்பி மோசம் போகாதீர்.

சிவாஜி : மோகனா! தோழமையின் எல்லையையும் தாண்டி விட்டாய். நில்

தளபதி – 1 : இதுவரை மன்னர் முன் இப்படி எதிர்த்துப் பேசியவர் யாருமில்லை .

தளபதி – 2 : மகராஜ் சினங்கொண்டு சீரழிவாகப் பேசிய இச் சிறுமதியாளனைச் சிறையிலே அடையுங்கள்.

காகப்பட்டர் : துஷ்டன்.. துராத்மா.. வேத நிந்தகன்.. நாஸ்திகன்.
(மோகன் வாளை உருவ)

சிவாஜி : மோகன் வாளைக் கீழே போடு.

மோகன் : மகராஜ்! (வாளை போட)

சிவாஜி : அரச சபையை அவமதித்த உன்னை நமது மெய்ப் பாதுகாவலர் வேலையின்றும் நீக்கிவிட்டோம்.

மோகன் : மகராஜ் எனக்கா இந்தத் தண்டனை?

சிவாஜி : தண்டனையின் முழு விவரமும் கூறியாகவில்லை. நாளை சூரியோதயத்துக்குள் நீ தலைநகரைவிட்டுப் போய் விடவேண்டும்?

மோகன் : தேசப்பிரஷ்டமா?

சிவாஜி : அரச சமூகத்திற்கு நீ தகுதியற்றவன்! போ. (வீரர்கள் நெருங்க)
வீரர்களே ! விலகி நில்லுங்கள். அவன் போவான் ! சர்தார் !

(போகிறான்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க