கடந்த வாரம் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுல் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஒடிசா மாநிலத்திலிருந்து தேர்வான பிரதாப் சாரங்கி. வெள்ளை ஜிப்பா, ஒடிசலான உருவத்தில் தாடியுடன் தோற்றமளித்த 64 வயதான சாரங்கியை ‘எளிமை’யின் சிகரமாக ஊடகங்கள் எழுதின.
ஒடிசாவின் பாலாசூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற சாரங்கி, குடிசையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், ஏழைகளுக்காக இப்படியொரு ‘தவ’ வாழ்வை வாழ்வதாகவும் தமிழ் ஊடகங்களும்கூட எழுதின. சமூக ஊடகங்களில் சாரங்கியின் ‘ஏழை பணக்காரனான’ கதை வைரலானது.
ஆனால், பிரதாப் சாரங்கி செய்த முன்வினை, அவரை அடுத்த நாளிலேயே கொடூர வில்லனாக்கிவிட்டது. பல இணைய ஊடகங்கள் அவரைப் பற்றிய பின்னணியை வெளியிட ஆரம்பித்தன. பிபிசி, “ஆஸ்திரேலிய கிறித்துவ மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்சும் அவருடைய இரண்டு மகன்களும் உயிரோடு எரித்து கொல்லப்பட காரணமாக இருந்து, இந்து கும்பலுக்கு தலைமையேற்று நடத்தியவர் பஜ்ரங் தளத்தின் தலைவர் சாரங்கி” என செய்தி வெளியிட்டது.
ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங். கிறித்துவ மிஷனரி குடும்பத்தின் படுகொலைக்கு பஜ்ரங் தளமும், தாரா சிங்கும்தான் காரணம் என வெளிப்படையாக தெரிந்த பின்பும் இந்தப் படுகொலைக்கு எந்தவித ஆதாரம் இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணை தெரிவித்தது.
நீண்ட கால வழக்கு விசாரணைக்குப் பிறகு தாரா சிங் உள்ளிட்ட 12 பேர் 2003-ம் ஆண்டு தண்டிக்கப்பட்டனர். ஆனால், ஒடிசா உயர்நீதிமன்றம் தாரா சிங்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை குறைத்து தீர்ப்பு எழுதியது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 11 பேரை, போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலையும் செய்தது.

“சாரங்கி அளித்த பல நேர்காணல்களில், கிறித்தவ மிஷனரிகளின் ‘தீய நோக்கங்கள்’ குறித்து கடுமையாக பேசியிருக்கிறார். கிறித்தவ மிஷனரிகள் இந்தியா முழுவதையும் மதம் மாற்றிவிட வளைந்துகொடுப்பார்கள்” என ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் சாகு தெரிவிக்கிறார்.
இத்தகைய பின்னணி கொண்ட சாரங்கி மோடியின் இரண்டாவது ஆட்சியில் மத்திய இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். 2002-ஆம் ஆண்டில் பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஒடிசா சட்டப்பேரவையின் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலை முன் நின்று நடத்தியது, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சாரங்கி அப்போது கைது செய்யப்பட்டார்.
இந்த கொலைகார பின்னணி குறித்த எந்தவித குறிப்பும் இல்லாமல் வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், சமூக ஊடகங்கள் பிரதாப் சாரங்கியை ‘ஒடிசாவின் மோடி’ என கொண்டாடின. “அவர் குடிசையில் வாழ்கிறார், சைக்கிள் மட்டுமே வைத்திருக்கிறார்… பழங்குடி குழந்தைகளுக்காக 100 பள்ளிகள் திறக்க காரணமாக இருந்ததாகவும், சாராயத்துக்கு எதிராகவும், லஞ்சத்துக்கு எதிராக அயராது பாடுபடுவதாகவும்” இந்தப் பதிவு சாரங்கியின் புகழ் பாடுகிறது.
Happy to see this Man taking oath Meet Pratap Chandra Sarangi, 64yrs,From Balasor,Orissa, BJP.
Fondly called "Odisha's Modi "
Lives in a hut. Owns a bicycle.
Has opened 100s of schools in tribal areas.Activist against liquor and corruption.Campaigned in an auto.@GauravAjagiya pic.twitter.com/v2grLCSszg— Yagnesh Patel 🇮🇳🚩 (@yagsi_p) May 30, 2019
ஜனாதிபதி மாளிகையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளும் சாரங்கியின் படத்தைப் போட்டு ‘குடிசையில் வாழும் எளிய மனிதர். உங்களுக்கு மரியாதை ஐயா’ என கொண்டாடியது மற்றொரு பதிவு.
Huge. Pratap Chandra Sarangi takes oath as Minister of State in the Govt led by PM @narendramodi at Rashtrapati Bhawan. A simple man living under a thatched roof and now Balasore MP. Known as Odisha's Modi. Respect Sir. pic.twitter.com/6cLI7edTCp
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 30, 2019
“தன்னுடைய தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் செல்வது அவருடைய வழக்கம். சட்டப்பேரவையில் கலந்துகொள்ளுபோதுகூட சைக்கிளில்தான் வருவார், ரோட்டோர கடைகளில் உணவு உண்பார்” என்கிறார் பத்திரிகையாளர் சாகு.
படிக்க:
♦ ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !
♦ ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?
நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் தன்னைவிட பண பலம் மிக்க சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்த்து களம் கண்டார் சாராங்கி. டேவிட்டும் கோலியத்தும் மோதிக் கொள்வதுபோல என இந்த மோதல் வர்ணிக்கப்பட்டது.
மாண்புமிகு நரேந்திர மோடியின் ’குஜராத் வளர்ச்சியை’ கருத்தில் கொண்டு, சாரங்கியை ‘ஒடிசாவின் மோடி’ என அவருடைய அடிபொடிகள் வர்ணிக்கிறார்கள்.
உண்மையிலேயே குஜராத்தில் 2000 பேர் கொல்லப்படுவதற்குப் பின்னணியில் நின்றது குஜராத்தின் நரேந்திர மோடி என்றால், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை மட்டுமல்லாமல் ஒடிசாவில் நடந்த பல்வேறு இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான சாரங்கியை, ’ஒடிசாவின் நரேந்திர மோடி’ என்று அழைப்பதில் மிகை ஏதும் இல்லை.
அனிதா
நன்றி: கேரவன் டெய்லி