கேள்வி: // தற்போது தொலைக்காட்சிகளில் வருகிற அனைத்து விளம்பரங்களிலும் ஏதாவது ஒரு வகையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது பற்றி …? //

– எஸ். செல்வராஜன்


விளம்பரங்களில் காவி நிறம் இடம்பெற்றிருப்பது குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் சொல்வது உண்மையானால் பாஜக-வின் செல்வாக்கு வட இந்திய மாநிலங்களில் அதிகரித்திருப்பதன் படி பொருத்தமானதுதான். சமீபத்தில் அலகாபாத்தில் நடந்த அர்த் கும்பமேளாவிலேயே நிறைய பன்னாட்டு – இந்நாட்டு நிறுவனங்கள் தமது விளம்பரங்கள் மற்றும் காட்சி நிலையங்களை வைத்திருந்தன. அவற்றில் காவி நீக்கமற நிறைந்திருந்தது உண்மைதான். தற்போது 12-வது வகுப்பு பாடத்திட்டத்தில் பாரதியாருக்கு காவி முண்டாசு கட்டியதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. பாரதியார் எப்போது காவி அணிந்தார் என்பது ஒருபுறமிருக்க அவரது சனாதனதர்ம ஆதரவு கருத்துக்களின்படி அவரை அப்படி காட்டுகிறார்கள். தமிழ்நாட்டு பாடத்திட்டத்திலேயே இப்படி என்றால் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.

பார்ப்பனியத்தின் செல்வாக்கு அதிகமுள்ள பசு வளைய மாநிலங்களில் காவி வண்ணம் பல்வேறு வகைகளில் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் இருந்து வடக்கே செல்லும் ஒரு ரயிலில் நீங்கள் காவி உடை தரித்து, திருநீறு பூசி பயணிப்பதாக இருந்தால் எங்கேயும் பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை. பயணச்சீட்டு பரிசோதகர் கேட்கமாட்டார் என்பதோடு சக பயணிகளும் ஏதாவது தின்பதற்கு கொடுப்பதோடு, நிதியுதவியும் செய்வார்கள். காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட இல்லாமல் காவி கெட்டப்பில் நீங்கள் காசி வரை பயணிக்கலாம். அக்ஷய திரிதியை என்றொரு பார்ப்பனப் பண்டிகையை நகை நிறுவனங்கள் சந்தைப்படுத்தியது போல காவி பல்வேறு வகைகளில் சந்தைப்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தேவையாக இருக்கிறது. பாபா ராம்தேவின் மூலிகை பற்பசைக்கு போட்டியாக கோல்கேட் நிறுவனமே வேதசக்தி என்று மூலிகை பற்பசையை சந்தையில் இறக்கியிருக்கிறது. எனில் காவி நிறம் இல்லாமல் விளம்பரங்கள் எப்படி இருக்க முடியும்?

♦ ♦ ♦

கேள்வி: // காவி பாசிச அபாயத்தை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் முறியடிக்க முடியுமா? இல்லையெனில் பாசிசம் ஜனநாயக சக்திகளை ஒழித்து விடாதா? //

– வி. வெங்கடகிருஷ்ணன்

அன்புள்ள வெங்கடகிருஷ்ணன்,

தேர்தல் முடிவுக்கு  முன்பாக இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். தேர்தல் முடிவுகளே உங்களுக்கு பதிலை அளித்திருக்கும். அதாவது வாக்களிப்பதன் மூலம் காவி பாசிச அபாயத்தை முறியடித்துவிட முடியாது. ஏனெனில் கணிசமான மக்கள் பார்ப்பனிய பண்பாட்டு செல்வாக்கில் சிக்கியிருக்கிறார்கள். அதை பாஜக – சங்க பரிவாரங்கள் இன்னும் ஊதிப் பெருக்கி வருகின்றன. சித்தாந்த ரீதியாக காவிப் பக்கம் அணிதிரட்டப்பட்டிருக்கும் மக்களை மீட்பதற்கு தேர்தல் பாதை உதவாது. எதிர்க்கட்சியான காங்கிரசு கூட பசு வளையம் எனப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மிதவாத இந்துத்துவாவின் முகத்தையே காட்டியது. பிரக்யா சிங் தாகூர் எனப்படும் பயங்கரவாதி போட்டியிட்டு வென்ற போபால் தொகுதியில் காங்கிரசு சார்பாக திக்விஜய் சிங் போட்டியிட்டு தோற்றார். தேர்தலில் இவரும் அனேக சந்நியாசிகளை அழைத்து யாகம் செய்தார். தானும் காவி பக்தன் என்று காட்டிக் கொண்டார்.

தேர்தல் பரப்புரையில் மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பசுவின் பெயராலான கொலைகள், இதர சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், உனா போன்ற தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரஃபேல் ஊழலை பேசத்துணிந்த ராகுலுக்கு அக்லக் குறித்தோ பெஹ்லுகான் குறித்தோ பேச ஏன் தைரியமில்லை? இந்து வாக்குகளை இழந்து விடுவோம் என்று இவர்கள் பாஜகவின் அணுகுமுறைக்கு வலுவேற்படுத்துகிறார்கள். எனவே தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்டு இந்துத்துவ பயங்கரவாதத்தை நாம் எப்படி முறியடிப்பது என்பது குறித்து ஆலோசிப்பதே சாலச்சிறந்தது.

♦ ♦ ♦

கேள்வி: // இந்த 5 ஆண்டு மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளின் பட்டியல் தர முடியுமா ? //

– ராஜா

அன்புள்ள ராஜா,

வினவு தளத்தில் மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து விரிவான பதிவுகள், கட்டுரைகள், செய்திகள் உள்ளன. தேடிப் படியுங்கள்.

மோடி, இந்துத்துவா, பாஜக, மாட்டுக்கறி, தலித், பார்ப்பனியம், பாசிசம், ஆர்.எஸ்.எஸ் போன்ற குறிச்சொற்களை தேடுதல் பெட்டியில் போட்டு தேடிப் பாருங்கள். எண்ணிறந்த கட்டுரைகள் உங்களுக்கு கிடைக்கும்.

♦ ♦ ♦

கேள்வி: // மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

தியானம் என்பது உண்மையா ? புத்தர் போதித்த விபாசனா , ஓஷோவின் விழிப்புணர்வு , ரமண மஹரிஷி , பாபாஜியின் கிரியா யோகம் மூலம் நிப்பாணம் அடைய முடியுமா ? அல்லது மனதின் கற்பனையா? வெகு நாட்களாக தியானம் செய்து வருகிறேன். ஆனால் என்னால் எந்த ஒரு நிலையும் அடைய முடியவில்லை . நான் சரியான பாதையை தேர்வு செய்ய ,தங்களிடம் அறிவியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறேன்? நன்றி//

– எ.ரவிச்சந்திரன்

அன்புள்ள ரவிச்சந்திரன்,

தியானம் குறித்த சிறப்பான அறிவியல் விளக்கத்தை கீழ்க்கண்ட கட்டுரையில் வாசிக்கலாம்.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

அந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?

“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.

உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.

மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.

உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !
♦ கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?

ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?

வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?

மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே, புண்ணான மூளையையும் மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.

ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.

இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.

யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.

அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.

மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

***

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க