கேள்வி: வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ? இந்தப் பதிவில் ஆசிரியர் அளித்துள்ள பதிலுக்கு நான் முழுமையாக உடன்படுகிறேன். நான் ஒரு பிரபல தனியார் செய்தி ஊடகத்தில் பணியாற்றுகிறேன். அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுக்கவும், அதிகார வர்க்கத்தை நோக்கி கேள்வி எழுப்பவும் ஊடகத்துறைக்குள் நுழைந்தவன் நான். முன்பு பணியாற்றிய ஊடகத்திலும், இப்போது பணியாற்றும் ஊடகத்திலும் பல்வேறு சிறப்பு செய்தித் தொகுப்புகளை துணிச்சலாக வெளியிட்டுள்ளேன். அதில் சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.

லோயர் மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்த என்னை பொருளாதார சுமையும் ஒரு பக்கம் அழுத்திக் கொண்டிருக்கிறது. வணிக ஊடகத்தில் இருந்துகொண்டு சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாதா? மேற்கொள்வதற்கு ஏதேனும் யோசனை இருந்தால் சொல்லுங்க….

ஊடகத்துறைக்குள் நுழைவதற்கு முன்பிருந்தே உங்கள் பதிவுகள் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தொடரட்டும் உங்கள் உண்மையான ஊடகப்பணி.

– ஒரு பத்திரிகை நண்பர்

ன்புள்ள நண்பருக்கு,

மக்கள் பால் நேசமும், அதை போதுமான அளவு செய்ய முடியாத குற்ற உணர்வும் கொண்டிருப்பதற்கு முதற்கண் வாழ்த்துக்கள்! இந்த உணர்வு நீடிக்குமளவு சமூக மாற்றத்திற்கான உங்களது முயற்சிகளும் வெற்றி பெறும். வணிக ஊடகங்களில் கூட வரம்பிற்குட்பட்ட அளவில் மக்களுக்கு நன்மை தரத்தக்க வேலைகள் சிலவற்றை செய்ய முடியும். ஆனால், நிரந்தரமாகவும், பிரச்சினைகளின்றியும் செய்ய இயலாது. செய்யக்கூடியவற்றை செய்வதற்கு கூட நாம் ஒரு உறுதியான ஆளுமையாக மாற வேண்டியிருக்கிறது.

படிக்க:
கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன…
கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

வர்க்கப் பின்னணியோடு நவீன வாழ்வியல் சூழலும் ஒரு நபரின் ஆளுமையை வடிவமைப்பதில் தீர்மானிக்கின்றது. ஒரு பொதுவுடமை அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கட்சி சார்ந்த வேலைகளின் போதும், தோழர்களோடு அளவளாவும் போதும் மட்டுமே சமூக அக்கறைக்குரிய விசயங்களோடு வாழ்கிறார். நிறுவன வேலைகளில்தான் அதிக நாட்களை அவர் செலவழிக்க வேண்டியிருப்பது ஒரு யதார்த்தம். எனில் பொதுவுடமை உலகை விட கார்ப்பரேட் உலகுதான் அவரது வாழ்வியலோடு அதிகம் தொடர்புடையதாக இருக்கிறது.

இந்த முரண்பாட்டை உணர்ந்து தனது அக உலகை பாதுகாத்துக் கொள்வது யாராக இருந்தாலும் ஒரு போராட்டமே! கார்ப்பரேட் ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளருக்கும் அது பொருந்தும். பேயோடு வாழ்க்கைப்பட்டால் சுடுகாடுதான் பணியிடம் என்றான பிறகு குடியிருப்பில் இருக்கும் மக்கள் குறித்த எண்ணம் இருப்பது சிரமம்தான். அதற்காக கலங்கத் தேவையில்லை.

இந்த முரண்பாட்டை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என யோசித்துப் பார்ப்போம்.

மூன்று வழிகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று நடைமுறையில் மக்கள் வாழ்க்கை, போராட்டங்களோடு தொடர்பு வைத்திருக்க வேண்டும். நீட் போராட்டமோ, ஒக்கி புயலோ, கஜா புயலோ, அரசு ஊழியர் போராட்டமோ நடக்கும் போது அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் யதார்த்தமாக மக்கள் வாழ்க்கையையும், இந்த அரசமைப்பின் போதாமையையும் உணர்கிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அங்கு சென்ற வெளியூர் பத்திரிகையாளர்கள் துணிந்து போலீசை அம்பலப்படுத்தியதற்கு காரணம் கொடூரமான அந்த அடக்குமுறைக் காட்சிகளை நேரில் கண்டதுதான்.

இரண்டு மக்கள் வாழ்க்கை தொடர்பான இலக்கியங்கள், சமூகம் தொடர்பான பொது நூல்கள் (வரலாறு, சமூகவியல், மொழி, தத்துவம், அரசியல்) போன்றவற்றை படிப்பது கண்டிப்பாக வேண்டும். நமது உணர்ச்சிக்கு தேவையான உணர்வை அளிக்கவல்லது இந்த பல்துறை வாசிப்பு பழக்கம். அதே நேரம் இந்த வாசிப்பு படிக்கும் இன்பம் என்று இல்லாமல் பயன்பாட்டிற்கான படிப்பாக இருக்குமாறு நாம் வைத்துக் கொள்வது அவசியம். நல்ல நூல்களை படிப்போர் பலருக்கு, அந்நூல்கள் கூறும் கருத்துக்களை ஏதோ ஒரு வழியில் பயன்படுத்தம் வாய்ப்பற்று இருக்கும் போது காலஞ்செல்லச் செல்ல படிப்பு என்பது வாசிப்பின்பமாக மட்டும் மாறிவிட்டிருக்கிறது.

மூன்றாவதாக போராடும் மக்களோடு துணை நிற்கும் உண்மையான அரசியல் அமைப்புகளோடு தொடர்பில் இருப்பது அவசியம். சமூக மாற்றம் குறித்த எந்த ஒரு நடவடிக்கையும் நடைமுறையில் பணியாற்றும்,  அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் அரசியல் இயக்கங்களாலேயே மக்களுக்கு சென்று சேர்கிறது. தனி நபராக நாம் பேசும் சமூக விசயங்களின் பரிமாணம் மிகவும் குறுகியது. கருத்தரங்கில் தீர்வு சொல்வதும், களத்தில் தீர்வுக்காக போராடுவதும் முற்றிலும் வேறுபட்ட விசயங்கள். கம்யூனிச்தை கற்பதற்கு கூட இந்த களத் தொடர்பு அவசியம்.

மேலும், மக்களிடம் வேலை செய்யும் அரசியல் ஊழியர்களை சந்தித்து அளவளாவும் போதுதான் நாம் அறிவை மெருகிடுவது மட்டுமல்ல, அகந்தையை அகற்றுவதையும் செய்ய முடியும். நமது கருத்துக்களும் கூட வெறுமனே கருத்துக்கள் என்ற கிணற்றைத் தாண்டி களம் எனும் கடலை நோக்கி பயணிக்கிறது. அதன் போக்கில் சரி, தவறுகள் பரிசீலிக்கப்பட்டு கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து, கண்ணோட்டங்களை கற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் ஓரளவுக்கு செய்து கொண்டு ஒரு பத்திரிகையளராயும் நாம் மக்களுக்கு தொண்டாற்ற முடியும். எங்கள் அனுபவத்தில் பல பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டிருக்கிறோம். மேற்கண்ட பாதையில் அவர்களை நட்புடன் அழைத்துச் சென்று புதிய உலகை கொஞ்சமாவது காட்டியிருக்கிறோம். நாங்களும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

படிக்க:
பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா…
மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

அதே நேரம் பத்தரிகையில் பணியாற்றும் நண்பர்கள் பணிச்சுமை, நிர்வாக நெருக்கடி போன்றவற்றோடு அடித்துச் செல்லப்படும் போது அவர்களால் உரிய அளவில் சமூகத்திற்கு தொண்டாற்ற முடிவதில்லை. பகுதி நேரமாக அவர்கள் வினவு போன்ற மாற்று ஊடகங்களில் அடையாளம் தெரியாமல் நிறைய பணிகளை செய்ய முடியும். எனினும் இந்த விருப்பம் இன்னும் பெரும் போராட்டமாகவே இருக்கிறது.

“கருத்தாடல்” பக்கத்தில் பங்களிப்பு செய்யுமாறு பல ஊடக நண்பர்களுக்கு மடல் அனுப்பியிருந்தோம். அலுவலகத்தில் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக புனை பெயரில் எழுதுமாறும் ஆலோசனை கூறியிருந்தோம். சிலர் விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்களால் அப்படி செயல்பட முடியவில்லை.

எப்படியாவது மாற்று ஊடகங்களில் பணியாற்றும் போதுதான் ஒரு ஊடகவியலாளர் தனது சுயத்தையும், மக்களின் பால் உள்ள பொறுப்புணர்வையும் தக்கவைத்துக் கொள்வதோ, வளர்த்துக் கொள்வதோ சாத்தியம். ஆகவே, இது இறுதியில் எங்களது பிரச்சினையில்லை. அவர்களது பிரச்சினை. உண்மையில் ஒரு மக்கள் ஊடகவியலாளராக மாற வேண்டும் என்ற அவாவை ஒரு யதார்த்தமாக மாற்றுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்.

வினவோடு ஒரு பத்திரிகையாளர் தொடர்பு கொள்ளும் போது அவர் சமூகவியல், அடிப்படை மார்க்சியம், வரலாறு, கண்ணோட்டத்துடன் எழுதுவது போன்றவற்றை எங்களோடு விவாதித்து கற்றுக் கொள்ள முடியும். கடந்த காலத்தில் பத்திரிகையாளர்கள், பதிவர்களுக்கென்றே வகுப்புகள் நடத்தியிருக்கிறோம். இப்போதும் கூட செய்து வருகிறோம். இனியும் நடத்துவோம். எனவே உங்கள் வணிக ஊடகப் பணி பாதிக்கப்படாமல் மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

ஆகவே இந்த பதிவின் மூலம் தமிழக பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தொடர்பு கொள்ளுங்கள்.

மாற்றிக் காட்டுவதற்காக ஒரு புதிய உலகம் காத்துக் கொண்டிருக்கிறது!


கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:

கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க